ஸ்ரீ நாதமுனிகளின் 1200வது திருநட்சத்திரத்தில்..!

ஆன்மிக கட்டுரைகள்

ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சத்திரம். இன்று 01/07/2023 ஆனி அனுஷம். நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் முதல் ஆச்சாரியர் இவரே. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனக் கொண்டாடப்படும் ஆழ்வார்களின் அருளிச் செயல் திவ்ய மங்கள பாசுரங்கள் அனைத்திற்கும் தாளம் மற்றும் பண் குறித்து வெகு துல்லியமாக குறிப்புக்களை ஏடுப்படுத்தினவர். இது அவருக்கு 1200 வது திருநட்சத்திரம்.

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

ஒரு சுவாரசியம் சொல்வர். அந்த காலகட்டத்தில் அரசவை ஆடல் பெண்டீர்கள் இருவருவரில் தங்களில் யார் சிறந்தவர் என கேள்வி உண்டாயிற்று. இதனை போட்டி வைத்து தீர்மானிக்க எண்ணிய அரசன் யாரை நடுவராக கொள்ளலாம் என்று பார்த்த போது இவரே நாட்டியத்திலும் பண் இசைத்து பாடுவதில் வல்லவர் என்பதை அறிந்து இவரையே போட்டிக்கு நடுவராக இருந்த இதனை தீர்த்து வைக்க கோர, இவரும் ஒப்புக்கொண்டு இந்த போட்டியை ஆரம்பிக்க சொல்ல இரண்டு பேரும் சம அளவில் சம பலத்துடன் மிக நேர்த்தியாக அபிநயம், காலப்பிரமானம், தாள லயம் மற்றும் லாவகத்துடன் ஆட யாரை தேர்ந்து எடுப்பது என குழப்பம் ஏற்படுகிறது. இதுவே மூன்று நாட்கள் நடக்கிறது. ஆதலால் இம்முறை கோவில் வைத்து ஆட ,அன்றே தீர்ப்பு சொல்வதாக சொல்கிறார். குறிப்பிட்ட தினத்தில் ஊரே திரண்டு நிற்கின்றனர், இவர் யாரை தேர்ந்தேடுக்க போகிறார், எப்படி தீர்ப்பு சொல்லப்போகிறார் என்று காண காத்து கிடக்கின்றனர்.

இவரும் அவர்கள் இருவரிடமும் ஓர் பூச்செண்டினை கையில் கொடுத்து, அதனை வைத்துக்கொண்டு ஆட சொல்ல, போட்டி முடிவில் அவர்கள் இருவர் கைகளில் வைத்து இருந்த பூச்செண்டினை பிரிக்க அதல் ஒருத்தி வைத்து இருந்த செண்டில் மாத்திரம் அடைப்பட்டுயிருந்த மலர் தேனீ செத்துவிட்டு இருந்தது. மற்றையவளின் செண்டில் உயிருடன் இருந்தால் அவளையே ஆகச் சிறந்தவள் என தேர்ந்தெடுப்பதாக சபைக்கு அறிவிக்கார். இவரின் நுண்ணறிவு மற்றும் இசை ஞானத்தை மெச்சி அரசன் தன் கீரீடம் போலும் பட்டில் செய்த கீரீடத்தை அணிவித்து பரிசு அளித்து கௌரவிக்கிறார்.

இவர் தேவகானத்தில் மிக சிறந்து விளங்கினார். இதனை உரிய முறையில் பயன்படுத்த எண்ணி தாம் பெற்ற வந்த ஆழ்வார் பாசுரங்கள் அனைத்திற்கும் இசைக்கு ஏற்ப அபிநயம் எனப்படும் அடவு பிடித்து ஆட தம் மருமக்கள் இருவருக்கும் பயிற்சி கொடுத்தார்.
ஆக தமிழகத்தில் இயல் இசை நாட்டிய கதைகள் என தமிழ் வளர்த்த முதல் முத்தமிழ் வித்தகர் இவரே. அப்படி அவர் ஏற்படுத்தினதே அரையர் சேவை என ஸ்ரீராமாநுஜரின் காலத்தில் ஸ்ரீ ரங்கத்தில் ஏற்படுத்தி வைத்து…. அது இன்று வரை தொடருகிறது. அரையர் ஸ்வாமி தலையில் அணிந்திருந்திருக்கும் பட்டு குல்லாய் வழக்கம் நாதமுனிகளுக்கு பரிசுப்பெற்றபோது அவருக்கு சிறப்பு செய்யப்பட்ட ஒன்றாகும். இன்று வரை தொடர்கிறது. அரையர் சேவை வெகு சிறப்பு வாய்ந்த ஒன்று. வைகுண்ட ஏகாதசியின் போது பகல் பத்து, இரா பத்து உற்சவ காலங்களில் இன்றளவும் பாசுரங்களுக்கு அபிநயக்க அரையர் சேவை நடத்திடப்படுகிறது. சேவிக்க கண் கோடி வேண்டும்.

காட்டுமன்னார் கோவிலில் உள்ள வீரநாராயணப்பெருமாள் பெயரில் தான் அருகில் ஓர் ஏரி இருக்கிறது. இப்படி சொன்னால் உடனே புரியும் வீராணம் ஏரி. சுமார் 12 கீலோமீட்டர் நீளத்தில் 4 கீலோமீட்டர் அகலத்தில் தமிழகத்தில் உள்ள மிக பிரமாண்டமான ஏரி இது. ஒரு காலத்தில் படகு பயணமாக இங்கு இருந்து புறப்பட்டு அதாவது திருச்சி யில் இருந்து கோயம்புத்தூர் வரை சென்றதாக ஓர் குறிப்பு உண்டு என்று சொன்னால் உங்களால் அதை நம்ப முடிகிறதா?

ஆனால் இது ஆவணமாக பதிவு செய்து வைத்தவர் பிரிட்டிஷ் அரசின் இப்பகுதி ஆற்காடு கலெக்டர் பிரான்ஸிஸ் ஐசஸ் என்பவர், 1906 ஆம் ஆண்டு இதனை பதிவு செய்து உள்ளார். அன்று இது ஆற்காடு நவாப் ஆளுகைக்கு கீழிருந்து இவர்கள் வசம் கைமாற்றப்பட்ட சமயம் அது.

ஸ்ரீ ராமாநுஜருக்கு ஸ்ரீ மந்நாதமுனிகள் மீது அளவற்ற பக்தி உண்டு. இது அவர் ஏற்படுத்தி வைத்த சிம்மாசனாதிகள் விஷயத்தில் தெள்ளத்தெளிவாக தெரியும். 93 வயது வரை வாழ்ந்த நாதமுனிகள் அவர் பரமபதித்ததும் கூட ஓர் அற்புதமான காவியமே.

அவர் பரமபதித்த அந்நாளில் காலை வேளையில் கோவிலுக்கு சென்றபோது இவர் அகத்திற்கு (வீட்டிற்கு) ஓர் பெண் சிறிய குரங்குடன் இரண்டு வில்லாளி வந்து விசாரத்து திரும்பியதாக இவர் வீடு வந்ததும் சொல்லப்பட, உடனே இதனை கண்டு உணர்ந்த நாதமுனிகள் அவர்களை தேடி பின் தொடருகிறார்.

வந்தவர்கள் சாட்ஷாத் சீதா ராம லக்ஷமணனே என சொல்லி அவர்களை தேடி அலைய, ஓர் இடத்தில் சீதை சூடின மாலையில் உதிர்ந்த பூ அடையாளம் காட்டுகிறது. இன்று வரை அந்த இடம் பூ விழுந்த நல்லூர் என்றே அழைக்கப்படுகிறது.

எதிர் பட்ட அனைவரிடமும் கேட்டுக்கொண்டே செல்ல ஒருவர் மாத்திரம் கண்டோம் என பதில் கொடுக்கிறார். அந்த இடமே இன்றும் கண்டமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

அவர் காட்டின திசையில் சிறிது தூரத்தில் குரங்கின் பாதடிகள் மண்ணில் காணும் படி தெரிகிறது. அவ்விடமே குரங்கடி என்றும் நாளடைவில் குரங்குடி என்றானது.இவ்வடையாளங்களை வைத்து பின் தொடர்ந்து வந்த நாதமுனிகள் தூரத்தில் இவர்களை பார்த்து மூர்ச்சையாகி விழுந்து பரமபத்திததாக செய்தி உண்டு.

அங்கு உள்ள கிராம மக்கள் இந்த இடத்திற்கு சொர்க்க பள்ளம் என்றே பெயர் வைத்து உள்ளனர். இது இன்றும் காட்டுமன்னார்கோயிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் சொர்க்க பள்ளம் என்ற இடத்தில் இவரது திருவரசு உள்ளது. இது கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • ‘ஜெய்ஹிந்த்’ ஸ்ரீராம்


Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply