காமதகனம்: மன்மதனை எரித்த மகேசன்

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

 

ஆசை இருக்கும் வரையில் செயல்பாடுகள் இருந்து கொண்டே தானிருக்கும். ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சி உண்டாகிறது. நிறைவேறாத போது துன்பம் உண்டாகிறது. இந்தியச் சமயங்களில் ஆசையைத் துண்டுபவனாக ”மன்மதன் ”குறிக்கப் படுகிறான் !.. அவனுடைய செயலாலேயே இவ் வுலகம் நடைபெறுகிறதென்று சமய நூல்கள் கூறுகின்றன.  எனவே உலக வளர்ச்சிக்கு அவன் இன்றியமையாதவனே.  ”மன்மதன் ”என்பதற்கு மனதில் சிற்றின்ப ஆசைகளைத் தோற்றுவித்து, அலை அலையாய் அவை வளரும்படி செய்பவன்”என்று பொருள்.

புராணங்களில் ”காதலின் கடவுள் ”என்று வர்ணிக்கப்படும் இவன் திருமாலின் மானச புத்திரன். இவனின் மனைவி ரதிதேவியாவாள்.    மகா யோகியான சிவபெருமான், தமது நெற்றிக் கண்ணினின்று எழுந்த கனலால் இவனை அழித்த காரணத்தினாலேயே ”காமகோபன் ”, மற்றும் ”காமனைக் காய்ந்த கண்ணுதற் கடவுள் ”என்றும் போற்றப்படுகிறார்.  இதனையே”காமதகன ”நிகழ்ச்சி உணர்த்துகிறது.

தமிழ் வேதமான திருமுறைகளில், ”காமதகனம் ”அதிகமான இடங்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

சிவபெருமான் ஏன் மன்மதனை எரித்தார் என்பதற்கு சுவையான பின்னணி வரலாறு உண்டு..

காசிப முனிவர் -மாயை இவ் விருவருக்கும் புதலவர்களாய்த் தோன்றியவர்கள் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன். இவ் வசுரர்கள் பிரமனைக் குறித்து தவமியற்றி பல அரிய வரங்களைப் பெற்றதோடு, கடல் நடுவே வீரமகேந்திரபுரம் எனும் பட்டினத்தையும் நிர்மாணித்து, அதிலிருந்து கொண்டு நூற்றிஎட்டு அண்டங்களையும் அடக்கியாண்டனர் !..மட்டுமின்றி அவர்கள் தேவர்களையும் பதவியிலிருந்து நீக்கி அந்த பட்டினங்களையும் தங்கள் உரிமையாக்கிக் கொண்டனர். இதனால் நாடிழந்த இந்திரன், மற்றும் தேவர்கள் அனைவரும் ஓன்று கூடி பிரமனிடம் முறையிட.அவரோ.சிவனும், உமையும் சேர்ந்து தோன்றும் குமாரனால் மட்டுமே அவர்களை அழிக்க முடியும் என்கிற வரத்தை தான் அவர்களுக்கு வழங்கியதாகக் கூற…அப்போது யோக நிலையில் மன அடக்கத்துடன் தவமியற்றிக் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கும், அவருக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கும் உமையவளுக்கும் இச்சை தோன்றினாலோழிய அவர்களுக்கு புத்திரன் பிறக்க வாய்ப்பில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அனைவரும் மன்மதனின் உதவியை நாட…அவர்களின் வற்புறுத்தலினால், தனது மனைவி ரதிதேவியுடன் கயிலை மலைக்குச் சென்று பெருமான் தவமியற்றும் சோலையை அடைந்து தருணம் பார்த்து  மலர்கணைகளை எய்தான் !..

ஒரு கணம் மனம் தடுமாறிய இருவரும் பின் இயல்பு நிலையை அடைந்தனர். யோக நிலையை மறந்து மோகம் கொள்ள செய்தவன் யார் என்று கோபம் கொண்ட போது..புன்னை மரத்தின் பின்னே மறைந்து நின்று கொண்டிருந்த மன்மதனைத் தன் நெற்றிக் கண்ணால் எரித்து விட..அக் கணமே சாம்பலாகிப் போனான் மன்மதன் !.ரதிதேவி பெருமானின் பாதங்களில் கதறியழுது கணவனை மீட்டுத் தருமாறு வேண்ட.

பெருமானும் அவளுக்கு உறுதியளித்தார்.

பின்னர் பெருமானுக்கும், உமையவளுக்கும் திருமணம் நடை பெற பெருமானும், ரதிதேவிக்கு வாக்கு அளித்தபடியே, ”உன் கணவன் உயிர் பெற்று விட்டான்..ஆனால் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்..பின்னாளில், திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது மன்மதன் அவருக்கு மகனாகப் பிறப்பான் பிரத்யும்னன் என்ற பெயரில் !.நீ  மாயாவதி என்கிற பெயருடன்  அவனை மணப்பாய் !”என்று வரமளித்தார்.

பின்னர்.சிவ – பார்வதியரின் மகனாக குமரன் அவதரித்ததும், அந்த குமரக் கடவுள்   சூரபத்மனையும், மற்ற அசுரர்களையும் அழித்ததும் அனைவரும் அறிந்த கதை !..

(மேற் சொன்ன இந்த நிகழ்ச்சி காளிதாசனின் குமாரசம்பவம், மற்றும் கந்தபுராணம், மகாஸ்காந்தம் முதலானவற்றிலும் காணலாம் )

ஆக மன்மதனாகிய ”காமனை ”.”தகனம் ”செய்த..பெருமானின் இந்த காமதகன நிகழ்வு, திருமுறைகளில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புராண நிகழ்வு, காமதகன விழாவாகவே  தமிழகத்தின் சில இடங்களில் ஐதீக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விளைச்சலையும், மக்கள் விருத்தியையும் கருதி செய்யப்படும் சமயச்சடங்காக இது  கருதப் படுகிறது.

அதாவது மாசி மாதத்தில், ஊரின் மையத்தில் கரும்பை நட்டு, அதன் மீது தர்பையையும், மலர்மாலைகளையும் இட்டு அலங்கரிக்கின்றனர். இது மன்மதனாக பூசிக்கப் படுகின்றது. சில ஊர்களில் இதன் அடியில் மன்மதன் – ரதியின் உருவங்களைப் படமாக எழுதி வைத்து பூசிக்கப் படுகிறது. ( மேலும் சில ஊர்களில் மரத்தால் செய்து வண்ணம் தீட்டப்பட்ட மன்மதன் – ரதி சிலைகளும் காணப்படுகிறது )

மாசி மகத்துக்கு முன்பு மன்மதன் -ரதி திருமணம் நடத்தப்படுகிறது. ( அந்தந்த பகுதி மக்களின் வாழ்வில் இடம் பெறும்திருமணச் சடங்குகள் அனைத்தும் இதில் செய்யப்படுகின்றன )

மாசி மகத்தன்று காம தகன நாடகம் அல்லது வில்லுப்பாட்டு நடை பெறுகிறது. இதில், மன்மதனின் தோற்றம், ரதி திருமணம், சிவனின் யோகத்தைக் கலைத்து பார்வதி மீது மோகம் கொள்ளுமாறு மன்மதனிடம் தேவர்கள் வேண்டுதல், மன்மதனும், ரதியும் கயிலையை அடைதல், அங்கு மன்மதன் மறைந்து நின்று கரும்புவில்லை வளைத்து சிவன் மீது அம்பை விடுதல், சிவன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தல், ரதி புலம்புதல் முதலான காட்சிகள் விரிவாக இடம் பெறுகின்றன.

”காம தகனம் ”நடைப் பெற்றதனை விளக்க, அங்கு நட்டு வைத்த கரும்பை தீயிட்டுக் கொளுத்தி விடுகின்றனர். இது அதி காலையில் நடக்கும் நிகழ்ச்சியாகும். மீண்டும் ஒரு நல்ல நாளில் மன்மதனை எழுப்பும் ஐதீகம் நடை பெறுகிறது. ரதி புலம்புதல், பெருமான் மன்மதனை உயிர்ப்பித்தல் முதலானவை சடங்காகவும், கதைப்பாட்டாகவும், நாடகமாகவும் நடத்தப்படுகிறது. மன்மதன் உயிர்ப்பிக்கப் படுகிறான் என்பதுடன் விழா முடிகிறது.

காமன் விழா கொண்டாடும் இடத்தில் சிறு சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர்.

காமனை எரித்த பின் அவன் அழிந்து விட்டானா என்றும் நிலைபெற்றிருக்கின்றானா என்பதை விளக்கி பாடல்கள் பாடுவர்.இது ”பாட்டுக்கு எதிர் பாட்டு ”பாடும் போட்டியாகும். இதனை ”லாவணி ”என்றும் அழைப்பர். இதில், எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று இரு கட்சியாக பிரிந்து நின்று பாடுவர். இது மக்களின் அறிவுத்திறனையும், சொற்சிலம்ப விளையாட்டினை வளர்க்கும் போட்டியாகவும் அமைகின்றது.

இதில் பெண்களும் கலந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு சமயோசிதமாகவும், கற்பனை நயத்தோடும் பாடல்களை பாடுகின்றனர். மன்மத நாடகம் என்ற பெயரில் பல ஏட்டுப்பிரதிகள், நூலகங்களில் காணப்படுகின்றன.

– தங்கம் கிருஷ்ணமுர்த்தி, லண்டன்

 

Leave a Reply