இன்று குசேல சரித்திரம் படித்தால் செல்வம் பெருகும்..

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
images 2022 12 20T213905.998 - Dhinasari Tamil
images 2022 12 20T212332.850 1 - Dhinasari Tamil

குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி முதல் புதன் கிழமையை குசேலர் தினமாக கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம். அன்று கோயிலில் பக்தர்கள் படிக்கணக்கில் அவல் தானம் செய்கின்றனர். குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரி்ல் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர். பக்தர்களும் , குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர். இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து , அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று குருவாயுரப்பனுக்கு அவல் படைத்து இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்!

குசேல நாமா பவது ஸதீர்யதாம் கத:
ஸ ஸாந்திபநி மந்திரே த்விஜ:
த்வதேக ராகேண தநாதி நி: ஸ்பருஹோ
திநாநி நிந்யே ப்ரஸமி க்ருஹாஸ்தமீ

சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் நீங்கள் குரு குலவாசமிருந்த போது குசேலர் என்ற அந்தணரும் மிகுந்த பண்போடு இல்லறத்தைக் காத்துக்கொண்டே, பொருளின் மீது ஆசையில்லாமல் உமது அருளின் மீது மட்டும் நாட்டமுடையவராக இருந்தாரல்லவா?நம்பூதிரியின் இந்த வினாவுக்கு குருவாயூரப்பன் தலையாட்டி ஒப்பு தலைத் தெரிவித்தார்.

ஸ ரத்ன ஸாலாஸு வஸந்நபி ஸ்வயம்
ஸமுன்ன மத்க்திபரோ அம்ருதம் யயௌ
த்வமேவாபூரித பக்த வாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே கதாந்

ஹே குருவாயூரப்பா, உமது அருளை வியந்து கொண்டே குசேலர் ரத்னமயமான மாளிகையில் வசிக்கத் தொடங்கினாலும், உன்னை என்றும் மறந்தாரில்லை. அவர் செல்வத்தில் பற்றில்லாமல் பக்தியின் பயனாக முக்தியடைந்தார். இவ்வாறு பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குவதில் வல்லவரான நீர், எனது துன்பத்தையும் போக்கி அருள வேண்டும். இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்.
குசேலர் தின நாளான இன்று ஒரு கோவணம் அளவிற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரத்தை மடித்து வைத்து , அதில் அவல், வெல்லம் வைத்து படைத்து, இந்த கதையைப் படித்து, பிறகு சிவப்பு வஸ்திரத்தை சிறிது சிறிதாக கிழித்து அந்த அவலையும் வெல்லத்தையும் அவற்றில் வைத்து (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்தால் பக்தர்களுடைய விருப்பத்தை அந்த குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான். அது சரி, அதென்ன சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின் கௌபீனமா? இதைப்பற்றிய குருவாயூரப்பனின் லீலைகளில் ஒன்றான கதையை தெரிந்து கொள்வோமா?முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள்,ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம்.

ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள்,உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள். வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான்.

மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்ன வேண்டும்? கேள்” என்று சொன்னாள். அவனும், “ மழையில் என் துணி நனைந்துவிட்டது. எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒரு கௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான். அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்புப் புடவை இருந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு சென்றான். அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, மூர்த்திக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். முதல் நாள் நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர். கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது. வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள். அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள். அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply