ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில் இன்று வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. புகழ்பெற்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 22ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில், பகல் பத்து உத்ஸவத்தில் பத்து தினங்களும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி ஆழ்வார் பாசுரங்களைக் கேட்டுவந்தார். பகல்பத்து உத்ஸவத்தின் பத்தாம் நாளான நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக, நம்பெருமாள் ரத்தின அங்கியில் சிறப்பு அலங்காரங்களுடன் இன்று சேவை சாதித்தார். திங்கள் கிழமை இன்று அதிகாலை 4.45 மணி அளவில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பெருங்கூட்டமாகக் குவிந்திருந்த காவல்துறையினரின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் பக்தர்கள் ஏராளமான அளவில் திரண்டு நம்பெருமாளை தரிசித்து மகிழ்ந்தார்கள்.
இதை அடுத்து, இன்று பகல்பத்து முடிந்து, ராப்பத்து தொடங்யது. வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து ஒன்றாம் திருநாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் நம்பெருமாள் மணல்வெளியில் புறப்பாடு கண்டருளினார். தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் சேவை சாதித்து வருகிறார்..
திருவரங்கத்தைப் போல், தமிழகத்தின் ஏனைய திருமால் தலங்களிலும் இன்று வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு இன்று காலை பல்வேறு தலங்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4: 30 மணி அளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது, திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட முக்கிய தலங்களில் இன்று காலை பரமபதவாசல் திறப்பு நடந்தது.