திருப்புகழ் கதைகள் பகுதி- 361
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரியார் திருத்தல யாத்திரை
நான் திருப்புகழைப் பாராயணம் செய்து வளர்ந்தவன். பள்ளி நாட்களில் வீட்டில் தினந்தோறும் திருப்புகழ் பாடும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. சிவன் கோவில்களில் சிவபெருமானின் பஞ்சபுராணம் பாடும் வழக்கம் உள்ளதல்லவா? அதுபோல எங்களது இல்லத்திலும் பூஜை முடியும் நேரத்தில் இறைவனுக்கு ஆடல், பாடல் போன்றவற்றால் ஆராதனை உண்டு. எனவே திருப்புகழ் என்னோடு வளர்ந்தது.
ஆனால் மறுபுறம், எங்கள் வீட்டுப் பெரியவர்களில் சிலர், “திருப்புகழ், கந்தர் சஷ்டி கவசம் போன்றவற்றை சொல்லக்கூடாது; அதிலே விரும்பத்தகாத சொற்கள் உள்ளன” எனச் சொல்வர். அதன் காரணம் என்ன என்பது எனக்கு நான் தமிழில் முதுகலை படிக்கும்போது தான் புரிந்தது. அருணகிரிநாதர் பாடல்களில் பொதுமகளிர் பற்றியும், அவர்களது அங்க வர்ணனைகளும் அதிகமாக இருப்பதால் இதுபோன்ற கருத்துக்கள் ஏற்பட்டிருக்கலாம்.
நான் முதல் முதலாக “கைத்தல நிறைகனி” திருப்புகழிலும் “முத்தைத் தரு” திருப்புகழிலும் உள்ள கதைகளை என் தந்தையார் சொல்லக் கேட்டேன். நான் பள்ளிப் பருவக்காலத்தில் வைணவத் திருக்கோயில்களுக்குச் சென்றது இல்லை. இந்தப் பழக்கம் என் திருமணத்திற்குப் பின்னர் மாறியது. அப்படிப்பட்ட எனக்கு விநாயகர் மகாபாரதம் எழுதினார், ஜயத்ரதனைக் கொல்ல ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா கிரகணம் ஏற்படுத்தினார் என்பதை எல்லாம் முருகனைப் பாடும் அருணகிரியார் ஏன் பாடுகிறார் எனத் தோன்றும்.
ஆனால் காலம் செல்லச்செல்ல, நமது இந்து மதத்தில் உள்ள அல்லது சனாதன மதத்தில் உள்ள வரலாற்றுச் செய்திகள் அனைத்தையும் தன்னுடைய திருப்புகழில் அருணகிரியார் பாட முயற்சித்திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது.
ஒரு கல்லூரியில் எம்.பில் படிக்கும் மாணவர்கள் 20 பேர் இருந்தார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவரும் திருப்புகழில் இராமாயணம், திருப்புகழில் சிவபுராணம், திருப்புகழில் மகாபாரதம் என பலதலைப்புகளில் ஆய்வு செய்து கட்டுரைகள் சமர்ப்பித்தால். அல்லது ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்து அதிலே ஒரு 50 அல்லது 100 ஆய்வுக்கட்டுரைகள் திருப்புகழைப் பற்றியும், அருணகிரியார் பற்றியும் படிக்கப்பட்டால் அவருக்கு எவ்வளவு பெருமை சேரும்.
துரதிருஷ்டவசமாக நான் கல்விப்பணியில் இல்லை. ஒரு கல்லுரியில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியனாக இருந்தால் இதனை முயற்சிசெய்திருக்கலாம். இருப்பினும் இந்தக் கட்டுரைகளை படிக்கின்ற கல்லூரி ஆசிரியர்கள் இதனை முயற்சிக்கலாம்.
தமிழில் பக்தி இலக்கியங்களில் தற்கால மாணவர்கள் ஆய்வு செய்வது குறைவாகவே உள்ளது. அதனை ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. கல்லூரி, பல்கலை ஆசிரியர்களும் மாணவர்களை பக்தி இலக்கியங்களில் ஆய்வு செய்ய ஊக்குவிப்பதாகத் தெரியவில்லை. ஏற்கனவே பல ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கலாம். இருப்பினும் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாணவர்கள் திருப்புகழை ஆய்வு செய்வது அவசியம் என எனக்குத் தோன்றுகிறது.
அருணகிரிநாதர் பற்றிப் படிக்கும்போது அவர் சென்று வந்த திருத்தலங்கள் பற்றி நாம் அறியலாம். அக்காலத்தில் புலவர்கள் ஊர் ஊராகப் பொருள் தேடச் செல்வர். ஆயினும் அருணகிரியார் முருகப்பெருமானின் அருள் தேடி பல திருத்தலங்களுக்குச் சென்றுள்ளார். திருவண்ணாமலையில் முருகப் பெருமானின் அருளைப் பெற்ற அருணகிரிநாதர், அங்கிருந்து திருக்கோவிலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய தலங்களுக்குச் சென்றார். அதன் பின்னர் திருநாவலூர், திருவாமூர், வடுகூர், துறையூர், திருவதிகை, திருப்பாதிரிப்புலியூர், திருமாணிக்குழி ஆகிய தலங்களைத் தரிசித்து, பின்னர் தில்லையம்பதிக்குச் சென்றார்.
தில்லையம்பதியிலிருந்து முதுகுன்றம் (விருத்தாசலம்), திருக்கூடலை ஆற்றூர் (மணிமுத்தாறு நதியும் வெள்ளாறும் இணைகின்ற இடம்), எருக்கத்தம் புலியூர் (தற்போதைய பெயர் இராஜேந்திரபட்டினம்), கடம்பூர் (தேர் வடிவில் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும்; மேல கடம்பூர் என அழைக்கபடும்; பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற கடம்பூர் அரண்மனை இங்குள்ளது), மகேந்திரபள்ளி வழியாக சீர்காழியை அடைந்தார். அங்கே சில நாள்கள் தங்கிவிட்டு, மண்ணிப்பாடிக்கரை, வைத்தீஸ்வரன்கோயில், திருக்கடவூர், திருவிடைக்கழி ஆகியதலங்களைத் தரிசித்துவிட்டு சுவாமிமலையடைந்தார். சுவாமிமலையில் அவருக்கு முருகனின் பாததரிசனம் கிடைத்தது. அங்கே அவர் “திருவெழுகூற்றிருக்கை” இயற்றினார்.
அங்கிருந்து அருணகிரிநாதர் திருச்சி சென்று, திருச்சியிலிருந்து வயலூர் சென்றார். வயலூரில் இருந்து விராலிமலை, கடம்பந்துறை, ரத்னகிரி என்னும் வாட்போக்கி (குளித்தலை-மணப்பாறை வழித்தடத்தில் உள்ளது), கருவூர், சென்னிமலை (சிரகிரி) (சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக – நினைவுக்கு வருகிறதா?) ஆகிய தலங்களுக்குச் சென்றார். பின்னர் திருமுருகன் பூண்டி, அவினாசி எனப்படும் திருப்புக்கொளியூர், திருசெங்கோடு, பேரூர் ஆகிய தலங்கள் வழியே மதுரை வந்தடைந்தார்.
மதுரையில் இருந்து, திருபெருங்குன்றம், பழமுதிற்சோலை ஆகிய தலங்களை முருகப் பெருமானைப் பாடிப் பரவசம் அடைந்த பின்னர் திருநெல்வேலியை அடைந்து, அங்கிருந்து திருச்செந்தூர் அடைந்தார். திருச்செந்தூர் தலத்தில் அவர் 83 பாடல்கள் பாடியுள்ளார். அங்கிருந்து கடல் தாண்டி இலங்கை சென்றார். இலங்கையில் கண்டி, திருக்கோணமலை, கதிர்காமம் ஆகிய திருத்தலங்களைத் தரிசித்துவிட்டு பாபநாசம், பெரியமலை, திருப்பெருந்துறை வழியே திருவண்ணாமலை வந்தடைந்தார்.
திருவண்னாமலையில் இருந்து வடக்கே உள்ள தலங்களைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டார். திருவாமத்தூர், திருவாக்கரை, மயிலம், சேயூர், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், திருபோரூர் ஆகிய தலங்களில் வழிபட்ட பின்னர் காஞ்சி மாநகர் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து திருவோத்தூர், கோடைநகர், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவற்றியூர், வட திருமுல்லைவாயில், திருவேற்காடு, திருவாலங்காடு, வெப்பூர் (நிம்மபுரம்), தேவனூர், வேலூர், விரிஞ்சிபுரம், திருவலம் ஆகிய தலங்கள் வழியே திருத்தணி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து வெள்ளிகரம், திருவேங்கடம், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்), காசி ஆகிய தலங்களுக்குச் சென்று வந்தார்.