அருணகிரியார் இத்திருப்புகழில் அவல் பயணத்தின் போது கையில் எடுத்துச் சென்று, கையில் இருப்பு வைத்துக்கொண்டு உண்கின்ற உணவு எனக் குறிப்புட்டிருப்பதை முன்னரே பார்த்தோம். இன்று சென்னை போன்ற நகரங்களில் கெலாக்ஸ் என அழைக்கபடும் சோள அவல் மிகப் பிரபலாமான காலை உணவுப் பொருள்.
பொதுவாக இது மக்காச்சோளத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவானது 1894ஆம் ஆண்டில் மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜான் கெல்லாக் என்பவரால் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாக உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த உணவைத் தயாரித்து மக்களிடம் விற்க கெல்லாக் (கெலாக்ஸ்) நிறுவனமும் உருவானது. 1896இல் இந்த செயல்முறைக்கானக் காப்புரிமை வழங்கப்பட்டது.
மக்காச்சோளத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உணவு சமூகத்தில் பரந்த அளவில் பிரபலமடையத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கெல்லாக் தொடர்ச்சியான பல பரிசோதனைகளைத் தொடர்ந்து, பல்வேறு பொருட்களை சேர்த்து, வெவ்வேறு தானியங்களைப் பயன்படுத்தினார். 1928இல், அவர் வேறொரு வெற்றிகரமான காலை உணவாக, அரிசியால் செய்யப்பட்ட ரைஸ் கிரிஸ்பிசின் உற்பத்தியைத் தொடங்கினார்.
சோள மணிகளை நசுக்கி சருகுபோலாக்கி பின் சிறு துண்டுகளாகக் கொண்ட வெளிறிய அவல்போல தயாரிக்கப்பட்ட பின் அடைக்கப்பட்ட ஒரு உணவுத் தயாரிப்பு ஆகும். இதை பொதுவாக குளிர்ந்த பாலில் இட்டும், சிலசமையம் சர்க்கரையைச் சேர்த்தும் உண்ணப்படும்.
அவலும் இப்படிப்பட்ட ஒரு உணவுதான். நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் அவல் மிகச் சிறந்த காலை உணவு. சிவப்பு அவல் மசாலா பொருள்களுடன் சேர்த்து தயாரிக்கும் போது அது மேலும் சுவையூட்டும் உணவாக அனைவரும் விரும்பும் உணவாக உள்ளது. இதை அரிசிக்கு மாற்றாக எடுத்துகொள்ளலாம். அவல் உருண்டை, அவல் உப்புமா, அவல் லட்டு, பால், நெய், தேங்காய்த்துருவல் சேர்த்த ஊட்டச்சத்துள்ள ஸ்நாக்ஸ் என அவல் ரெசிபிகள் பலவும் உண்டு. மகாராட்டிர மாநிலத்தில் இந்த அவல் போஹா என்ற பெயரில் சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது.
சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து தயாரிக்கபடுவதால் இது சத்து நிறைந்தது. இவை உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
தட்டையான அரிசியால் செய்யப்படும் ஆரோக்கியமான உணவு அவல். காலை மாலை என இரண்டு வேளைக்கும் ஏற்ற சரியான உணவு இது. நெல்லை ஊறவைத்து இடித்து அதிலிருந்து உமியை நீக்கி அவலாக பயன்படுத்துகிறோம். கைக்குத்தல் முறையில் தயாரிகப்படும் அவலில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
அவல் நிறத்தை கொண்டு இதன் ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் நிகழ்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு அவல் இரண்டும் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். சிவப்பு அவலானது சிவப்பு அரிசி வகைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆந்தோசயனின் என்னும் நிறமி தான் இந்த அரிசிக்கு இந்த நிறத்தை அளிக்கிறது.
நமது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் சிவப்பு அவல் கொண்டுள்ளது. சிவப்பு அவல் புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கிறது. பாரம்பரியமாக சிவப்பு அவலை சாப்பிடும் போது அது புற்றுநோய் அபாயத்தை தடுக்க செய்கிறது.
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு சிவப்பு அவல் உதவும். சிவப்பு அவல் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கர்ப்பிணீ பெண்கள் கர்ப்பகாலத்தி இரத்த சோகை பிரச்சனைக்கு ஆளாவார்கள். இவர்களுக்கு தினம் ஒரு கப் அவல் சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது. அவலை சாலட் ஆக்கி இலேசாக எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சி ஆனது அவலில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.