திருப்புகழ் கதைகள் – பகுதி 365 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
ஒரு வருடகாலம், 365 கட்டுரைகள் “திருப்புகழ் கதைகள்” என்ற தலைப்பிலே எழுதியுள்ளேன் என்ற மன நிறைவோடு இன்று இத்தொடரை முடிவு செய்ய விரும்புகிறேன். இந்தச் சாதனையை நிறைவேற்றி வைத்த, என் இஷ்ட தெய்வம் முருகப் பெருமானுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருப்புகழில் எனக்கு ஆர்வம் ஏற்படுத்தியவர் என்னுடைய அன்னையார் மறைந்த திருமதி இராஜலக்ஷ்மி ஆவார். அவர் இனிமையான குரல் வளம் கொண்டவர். அவரைப் போலவே எங்களையும் (நான், என்னுடைய இரண்டு சகோதரிகள்) நன்றாகப் பாட வைக்க வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள். பல திருப்புகழ் பாடல்களை அவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அவருக்கு எனது நன்றி.
எனது தந்தையார் மறைந்த திரு வைத்தீஸ்வரன் ஒரு இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். செம்பொனார்கோவில் என்ற ஊரிலே நாங்கள் ஒரு ஏழு வருடம் ஆனந்தமாக வாழ்ந்தோம். அப்போது அவர் திருப்புகழில் உள்ள கதைகளை எங்களுக்கு எடுத்துச் சொல்லுவார். அவர் எனக்கும் என் சகோதரிகளுக்கும் சொன்ன கதைகளை நான் யாருக்காவது சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கும் ஏற்பட்டது. அதற்காக என் தந்தையாருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தினசரி மின்-நாளிதழின் ஆசிரியர் திரு செங்கோட்டை ஸ்ரீராம் என்னோடு அதிகம் பேசியதில்லை. நான் எப்படி எழுதுவேன் என அவருக்குத் தெரியாது. இருப்பினும் அவர் என்னைத் தொடர்ந்து 365 கட்டுரைகள் எழுத அனுமதித்தார். செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நான் திருப்புகழ் கதைகள் எழுத ஆரம்பித்தபோது இதனை யாரேனும் படிப்பார்களா என்ற அவநம்பிக்கையோடுதான் எழுதினேன். பல ஜனரஞ்சக இதழ்களில் ஆசிரியர்கள் பலர் திருப்புகழ் பற்றி எழுதியிருக்கின்றனர். இருப்பினும் நான் இத்தொடரில் இடையிடையே அறிவியல் செய்திகளையும் எழுதியிருப்பேன்.
என் கட்டுரைகளின் முதல் வாசகி என்னுடைய இளைய சகோதரி திருமதி கமலா முரளி. இவரும் ஒரு எழுத்தாளர்தான். நான் 100 கட்டுரைகள் முடித்தபோது, 150, 200, 250, 300 கட்டுரைகள் என ஒவ்வொரு மைல்கல்லின்போதும் என் தங்கை வாழ்த்துக் கவிதை எழுதுவாள். அவளுக்கு என் நன்றி.
என்னுடைய மூத்த சகோதரி, திருமதி நாகலட்சுமி, இந்தத் தொடரை புத்தக வடிவில் நான் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும் என கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஆசையை முருகப் பெருமான் நிறைவேற்ற வேண்டும். என் மனைவி மற்றும் மகளுக்கும் இல்லத்தில் நான் எழுத வசதியாக அமைதியான சூழல் ஏற்படுத்தித் தந்ததற்காக நன்றி.
இவர்களைத் தவிர ஏராளமான நபர்கள் இக்கட்டுரைத் தொடரைப் படித்தார்கள். அவ்வப்போது என்னைப் பாராட்டினார்கள். என்னிடத்தில் சந்தேகம் கேட்டார்கள். இத்தகைய என்னுடைய வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
நான் எதையும் புதிதாகச் செய்யவில்லை. ஏற்கனவே இருந்ததை, நான் கேட்டவற்றை, படித்தவற்றை எனக்குப் பிடித்த முறையில் தொகுத்துத் தந்தேன். என்னை நன்றாக தமிழ் செய்யுமாறு பணித்த முருகப்பெருமான் என்னை மேன்மேலும் எழுத, அவன் புகழ் பாட அருள் புரிய வேண்டும்.