திருப்புகழ்க் கதைகள் பகுதி 349 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வரி சேர்ந்திடு – திருவேங்கடம்
அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி ஐம்பத்தி ஒன்றாவது திருப்புகழான “வரி சேர்ந்திடு” எனத் தொடங்கும் திருப்புகழ் திருவேங்கடம் தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருமால் மருகரே, திருவேங்கடமலையில் வாழும் குகமூர்த்தியே, உலக மையல் நீங்கத் திருவடியை யருள்வீர்” என வேண்டுகிறார். சரளமான சந்தக் கட்டு உடைய, நீளமான திருப்புகழ் இது. இனி திருப்புகழைக் காணலாம்.
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும்
வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் …… வலையாலே
வளர்கோங்கிள மாமுகை யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில்
வளமாந்தளிர் போல்நிற மாகிய …… வடிவாலே
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாங்கனி வாயமு தூறல்கள் …… பருகாமே
எனதாந்தன தானவை போயற
மலமாங்கடு மோகவி காரமு
மிவைநீங்கிட வேயிரு தாளினை …… யருள்வாயே
கரிவாம்பரி தேர்திரள் சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத …… மதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய நேமிய னாமரி …… ரகுராமன்
திரைநீண்டிரை வாரியும் வாலியும்
நெடிதோங்கும ராமர மேழொடு
தெசமாஞ்சிர ராவண னார்முடி …… பொடியாகச்
சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – யானை, தாவுகின்ற குதிரை, திரண்ட சேனை ஆகிய நால்வகைப் படையுடன் கூடிய துரியோதனனாதியர் போர்க் களத்தில் மாண்டொழியுமாறு, ஒப்பற்ற பாரதப் போரில் ஈடுபட்டுப் பெருமை மிக்க அர்ச்சுனனுடைய தேரில் ஏழு குதிரைகளைத் தூண்டிச் செலுத்திய பார்த்தசாரதியும், ஒளி மிகுந்த சக்ராயுதத்தை உடையவரும், பாவத்தைப் போக்குபவரும், ரகு குலத்தில் வந்தவரும், அலைகள் நீண்டு ஒலிக்கும் கடலும், வாலியும், நீண்டு வளர்ந்த மராமரங்கள் ஏழும், பத்துத் தலைகளை உடைய இராவணனது முடிகளும் பொடியாகுமாறு வில்லை வளைத்த நாராயணரும் ஆகிய திருமாலின் திருமருகராம் குக மூர்த்தியே;
சோலைகள் சூழ்ந்த திருவேங்கட மாமலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே; வரிகள் படர்ந்த சேல் மீனோ? கயல் மீனோ? என்று சொல்லத்தக்கதும், மான் போன்றதும், செலுத்தத்தக்க வாள் போன்றதுமாகிய கண்களையுடைய மாதர்களின் வலை வீச்சினாலும், வளர்கின்ற கோங்கின் இளம்மொட்டு போன்ற தனங்களின் மீதுள்ள ஆசையினாலும், முகத்தின் மாயையாலும், வளமான மாந்தளிர் போன்ற மேனியாலும், கரிய நீண்ட கூந்தலின் நிழலாலும், மயக்கம் கொண்டு விரித்த படுக்கையின் மீது சேர்ந்து, இனிய கனிபோன்ற வாயிதழ் பருகாமல், எனது எனது என்னும் ஆசைகள் என்னை விட்டு விலகவும், தூய்மையில்லாத கடிய மோக விகாரமானது நீங்குமாறும் தேவரீரது இரண்டு திருவடிகளை அருள்வீராக – என்பதாகும்
இத்திருப்புகழில் அருணகிரிநாதர், மகாபாரத குக்ஷேத்திரப் போர் பற்றியும் இராமாயணக் காட்சிகள் சிலவற்றையும் குறிப்பிடுகிறார். இரம்பிரான் கடலரசன் மீது இராமபாணம் விடுத்தது பற்றியும், வாலி வதம் பற்றியும், இராவணனின் பத்து தலைகளும் துண்டாகி கீழே விழுமாறு அம்பெய்தது பற்றியும் குறிப்பிடுகிறார். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கௌரவர்கள் தரப்பில் 11 அக்ஷௌகினி சேனைகளும் பாண்டவர் தரப்பில் அக்ஷௌகினி சேனைகளும் போரிட்டன. பாண்டவர் தரப்பில் திருஷ்டத்யும்னன் சேனாதிபதியாக இருந்தான். கௌரவர் தரப்பில் பீஷ்மர் (முதல் பத்து நாள்), துரோணர் (அடுத்த ஐந்து நாள்), கர்ணன் (அடுத்த இரண்டு நாள்), சல்லியன் (பதினெட்டாம் நாள்) படைத்தலைவர்களாயிருந்தனர்.
ஆனால் இந்த மாகாபாரதப் போரை ஒரு நிமிடத்தில் முடித்துவிடக் கூடிய ஒரு வீரன் இருந்தான். ஆனால் அவன் பொருக்கு முன்னால் தன் தலையை தானே வெட்டி தற்கொலை செய்துகொண்டான். ஏன் தெரியுமா? நாலை காணலாம்.