திருப்புகழ்க் கதைகள் பகுதி – 348
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நெச்சுப் பிச்சி – திருவேங்கடம் – நந்தகம்
கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி, செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் எனும் பெயருடைய வீர வாளை என்றென்றும் சரணமடைய வேண்டும். இந்த நந்தகம் எனும் வாளுக்கும் சென்னையில் உள்ள மயிலாப்பூர் அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இது பேயாழ்வார் அவதாரத் தலம்.
இந்த நந்தகம் என்னும் வாள், மகாலட்சுமியிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டியது. அதற்கு ஒப்புக்கொண்ட மகாலட்சுமி, அந்த வாளை பூலோகத்தில் பிறந்து மகாவிஷ்ணுவை வணங்கும்படியும், அதன்பின் தான் உபதேசம் செய்வதாகவும் கூறினாள். அதன்படி நந்தகம் (வாள்), இங்குள்ள மணி கைரவிணி தீர்த்தத்தில் மலர்ந்த அல்லி மலரில் அவதரித்தார். இவர் மகதாஹ்வயர் என்று பெயர் பெற்றார்.
இத்தலத்தில் பெருமாளுக்கு தினசரி பூமாலை அணிவித்து சேவை செய்த இவருக்கு, மகாலட்சுமி உபதேசம் செய்தாள். பெருமாள் மீது அதீதமாக பக்தி கொண்டதால் இவர், பேயாழ்வார் என்று பெயர் பெற்றார். “பேய்’ என்றால் “பெரியவர்’ என்றும் பொருள் உண்டு. ஆழ்வார்களில் இவர் பெரியவர் என்பதாலும் இப்பெயரில்அழைக்கப்பட்டதாகச் சொல்வர். திருமழிசையாழ்வார் இவரை, தனது குருவாக ஏற்றுக்கொண்டு உபதேசம் பெற்றார். பெருமாள் சன்னதி முன்மண்டபத்தில் தெற்கு நோக்கி, அமர்ந்த கோலத்தில் பேயாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
இக்கோயிலிலிருந்து சற்று தூரத்தில், பேயாழ்வார் அவதரித்த கைரவிணி கிணறு தற்போதும் இருக்கிறது. இந்தக் கிணற்றை புனித தீர்ர்த்தமாகக் கருதி அதனைப் பராமரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஐப்பசி மாத சதயம் நட்சத்திரத்தில், பேயாழ்வாருக்கு திருநட்சத்திர விழா நடக்கிறது. அன்று பார்த்தசாரதி கோயிலில் இருந்து சுவாமிக்கு அணிவித்த மாலை, துளசி, பரிவட்டம், சந்தனம் மற்றும் அவருக்குப் படைத்த நைவேத்யம் ஆகியவற்றை கொண்டு வந்து, பேயாழ்வாருக்கு படைக்கின்றனர்.
ஒரு சமயத்தில் சந்திரன், தனக்கு ஏற்பட்ட ஒரு சாப விமோசனத்திற்காக இங்கு பெருமாளை வழிபட்டான். அப்போது சுவாமி, இங்கு அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் இங்கு பொங்கச் செய்து, காட்சி கொடுத்தார். அதில் நீராடி சுவாமியை வழிபட்ட சந்திரன், விமோசனம் பெற்றான். இங்கு பொங்கிய தீர்த்தங்களை, பெருமாள் இங்கேயே தங்கும்படி கூறவே, அவையும் தங்கிவிட்டன. சர்வ தீர்த்தங்களும் ஒன்றாக இருப்பதால் இது, “சர்வ தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. சந்திரன் விமோசனம் பெற்றதால் “சந்திர புஷ்கரிணி’ என்றும் இதற்கு பெயருண்டு. தற்போது இத்தீர்த்தம், “சித்திரக்குளம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் வணங்கி வளம்பெற வேண்டும்.
எல்லா கடவுளர்களுக்கும் வில் உண்டு. அந்த வில்லுக்கு என்று ஒரு தனிப்பெயரும் உண்டு. பரமசிவன் கையில் வைத்திருக்கிற தநுஸுக்குப் பிநாகம் என்று பெயர். அதனால் அவருக்கே பிநாகபாணி என்று ஒரு பேர். த்ரிபுர ஸம்ஹாரத்தில் அவர் மேருவையே வில்லாக வளைத்தார். மஹாவிஷ்ணுவுக்கு சார்ங்கபாணி என்று ஒரு பேர் சொல்கிறார்கள். பலர் சாரங்கபாணி என்று பேர் வைத்துக் கொள்கிறார்கள். சார்ங்கபாணி என்பதே மிகச் சரியான வார்த்தை.
பொதுவாக சங்க-சக்ர-கதா-பத்ம ஆயுதங்களைச் சதுர்புஜங்களில் தரித்தவர் என்று சொன்னாலும், சார்ங்கம் என்ற வில்லும் அவருக்கு ஒரு முக்கியமான ஆயுதம். பஞ்சாயுத ஸ்தோத்ரம் என்று அந்த நாலோடு இந்த ஐந்தாவதையும் சேர்த்தே சொல்கிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாமக் கடைசி ஸ்லோகத்திலும் சார்ங்கத்தைச் சேர்த்து ஐந்து ஆயுதங்களே சொல்லப்பட்டிருக்கிறது. தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் நன்றாக வர்ஷிக்கட்டுமென்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியிருக்கிறாள்.
ஒரு சமயம் தேவர்கள் மஹாவிஷ்ணுவுக்கும் பரமேஸ்வரனுக்கும் பலப் பரிட்சை பார்க்க நினைத்தார்கள். அவர்களும் சரியென்று விளையாட்டாக உடன்பட்டு தநுர்யுத்தத்தில் ஈடுபட்டார்கள். அப்போது மஹாவிஷ்ணு சிவனுடைய வில்லைக் கொஞ்சம் சேதம் பண்ணிவிட்டார். கொஞ்சம் பின்னமாய்ப் போன இந்த சிவ தனுசு விதேஹ ராஜாக்கள் வம்சத்திலே வந்து கடைசியாக ஜனகரிடம் இருந்தது. இதைத்தான் இராமர் உடைத்து சீதையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். இவ்வாறு தநுர்பங்கம் நடந்த இடம் பீஹாரில் தர்பங்கா என்ற பெயரில் உள்ளதாக ஒரு கதை உண்டு. அதன் பின்னர், அவர்கள் அயோத்திக்குத் திரும்புகிற வழியில் பரசுராமர் ஆக்ரோசமாக எதிர்ப்பட்டு ஒரு வில்லை இராமர் முன்னாடி நீட்டி, “நீ ஏதோ சொத்தை வில்லை மிதிலையில் உடைத்துப் பெரிய பேர் வாங்கிவிட்டாயே, இப்போது இந்த தநுஸை நாண் பூட்ட முடிகிறதா பார். சிவ விஷ்ணுக்களின் தநுர் யுத்தத்தில் பழுதாகாமலிருந்த நாராயண தனுசு இதுதான்” என்றார். இராமர் அந்த தனுசையும் அலாக்காக நாண் பூட்டி பரசுராமருடைய அவதார சக்தியையே அதற்கு இலக்காக வைத்து க்ரஹித்துக் கொண்டுவிட்டார் – என்று இராமாயணத்தில் வருகிறது.
இராமச்சந்திரமூர்த்தி என்று நினைத்த மாத்ரத்தில் கோதண்டபாணியாக அவர் நம் மனத்திலே தோன்றுவார். ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தில் வில் வைத்துக்கொள்ளாவிட்டாலும் தன்னுடைய ஆத்ம சகாவான அர்ஜுனனுக்கு வில்லாளி என்பதாகவே ஏற்றம் கிடைக்கும்படி அநுக்ரஹித்திருந்தார். காண்டீவம் என்பது அவனுடைய வில்லின் பெயர். அன்னை பராசக்தியும் ராஜராஜேச்வரியாக இருக்கும்போது இக்ஷு தனுசு என்பதாகக் கரும்பு வில் வைத்துக் கொண்டிருக்கிறாள். மன்மதனுக்கும் இதுவேதான் ஆயுதம்.