திருப்புகழ்க் கதைகள் பகுதி 281 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கடாவின் இடை – சுவாமி மலை
அருணகிரிநாதர் அருளிசெய்துள்ள இருநூற்றி எட்டாவது திருப்புகழான “கடாவின் இடை” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, எந்நாளும் உன்னை ஓதி உய்ய அருள் புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ் …… சமனாருங்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங் …… கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங் …… கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் …… படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன் …… பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேலங் …… கெறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
சுவாசமது தானைம் …… புலனோடுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – விட்டுக் கொடுக்காது எந்நாளும் காளிதேவியுடன் நடனம் ஆடுகின்ற, நாடக இலக்கணத்தை உணர்ந்த சிவபிரானுடைய பெரிய வாழ்வே; மாறுபட்ட சூரபன்மனுடைய அலங்காரம் நிறைந்த உயிர்வாழ்க்கை அழியுமாறு வேலை விடுவித்தவரே; தொட முடியாமல் நீண்டதூரம் தடைபடாது ஓடுகின்ற பிரணவாயுவையும் ஐம்புலன்களையும் யோகநெறியால் உள்ளுக்குள் ஒடுக்குகின்ற ஞானத் தவசீலர்கள் உறைகின்ற சுவாமிமலையில் வாழும் பெருமிதம் உடையவரே; வீரம் குன்றாமல் எருமைக் கடாவின் மீது ஏறுகின்ற அக் கடாவைப் போன்ற முரட்டுக் குணமுடைய இயமன் கட்டளை இட்டு அனுப்பிய தூதர்கள் தவறாத வழியில் வருவதுபோல் வந்து, கனாவில் விளையாடிய கதை போலவும், அறம் புரியாது பலப் பலவாகத் தேடிய கொடியாருடைய செல்வம் போலவும், இங்கு நிலைத்திராத வண்ணம் உயிரைக் கொண்டு போகும் சுகந்தான் இந்த வாழ்க்கை என்பதை உணர்ந்து, காலையும் மாலையும் மற்றெப்போதும் இனியமொழியால் அடியேனும் தேவரீரை ஓதும்படி திருக்கண்ணால் பார்த்து அருள்புரிவீராக. – என்பதாகும்.
இத்திர்ப்புகழில் இயமன் பற்றிய சில குறிப்புகளை அருணகிரியார் தருகிறார். இயமனுடைய வாகனம் எருமைக்கடா. அது மிகவும் கடுங் கொடுந் தீரமுடையது. அது கால்களைப்பெயர்த்து வைக்கும் போது இடி இடிப்பது போன்ற பேரொலியுண்டாகும். அதன் உடம்பு யுக முடிவில் ஏற்படும் இருளின் குழம்பால் அமைத்தது போலவ இருக்கும். அதன் கண்களில் நெருப்பு மழை சிந்திய வண்ணம் இருக்கும். காற்றினும் வேகமுடையது. இத்தகைய எருமைக் கடாவின் மீது வீரங் கெடாமல் ஆரோகணித்து வருபவன் இயமன்.
இயமன் எல்லா உயிர்களிடத்திலும் சமமாக நடப்பவன், ஆதலின் சமன் எனப் பேர் பெற்றான். ஏழை தனவந்தன், கற்றவன், கல்லாதவன், அரசன், ஆண்டி, இளையவன், முதியவன் என்று பார்க்காமல், அனைவரையும் ஒன்று போல் பார்த்து, உயிரை உடம்பிலிருந்து பிரிப்பவன் எமன். இவனைப் பற்றி “கபிலர் அகவல்” என்ற நூலில் ஒரு பாடல் உள்ளது.
எப்போதுஆயினும் கூற்றுவன் வருவான்,
அப்போது, அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான், பொருள் தரப் போகான்,
சாற்றவும் போகான், தமரொடும் போகான்,
நல்லார் என்னான், நல்குரவு அறியான்,
தீயார் என்னான், செல்வர் என்று உன்னான்,
தரியான் ஒருகணம் தறுகணாளன்,
உயிர் கொடு போவான், உடல் கொடு போகான்,
ஏதுக்கு அழுவீர், ஏழைமாந்தர்காள்!.
கபிலரகவல் கபிலரால் கூறப்படுவது போல எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல். இது. இந்நூலில் சாதி அமைப்புக்கு எதிரான கருத்துகள் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்நூலில் 138 அடிகள் உள்ளன. இதை எழுதியவர் கபிலதேவ நாயனார்.