திருப்புகழ்க் கதைகள் பகுதி – 304 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
சரண கமலாலயத்தை – சுவாமி மலை
அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றிப் பதினாறாவது திருப்புகழான “சரண கமலாலயத்தை” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, சிவ குமாரரே, இரத்தினாபரணரே, வேலவரே, தமிழளித்த மயில் வீரரே, பழநியிலும் ஏரகத்திலும், மற்றும் பலப்பல திருத்தலங்களிலும் எழுந்தருளி இருப்பவரே, உமது கருணையால், இப்பிறவியில் சகல செல்வங்களையும், மறுமையில் பரகதியையும் தந்து அருளவேண்டும்” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க …… அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப …… மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த …… மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் …… முருகோனே.
இந்தத் திருப்புகழும் பொதுவாக பலரால் பாடப்படுகின்ற ஒரு திருப்புகழ். ‘பெருமாளே’ என முடியாமல், ‘முருகோனே’ என முடியும் திருப்புகழ்களில் ஒன்று. இத்திருப்புகழின் பொருளாவது – திருக்கயிலாய மலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பெற்றருளிய குமாரக் கடவுளே; வஜ்ர கடகங்களை அணிந்துள்ள புயங்களின் மீது, இரத்தினங்கள் இழைத்த திருவாபரணங்களையும், பொன் மாலைகளையும், வெட்சி மலர் மாலையையும் தரித்துக் கொண்டிருப்பவரே; நெய் பூசப் பெற்றதும் கூர்மையுடையதுமாகிய வேற்படையை உடையவரே;
சிவந்த இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற தேவரீருடைய திருவடிகளை நாள்தோறும் நாவாரத் துதிக்க அருமையான செந்தமிழ்ப் புலமையை தந்தருளிய மயில் வாகனத்தை உடையவரே; பற்பல அதிசயங்களையுடைய பழநிமலைமேல் அருட்கோலங்கொண்டு விளங்கும் கட்டழகுடையவரே; திருவேரகம் என்னும் சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே;
தாமரைக்கு நிகரானதும் ஆன்மாக்கள் ஒடுங்கும் இடமும் ஆகிய தேவரீருடைய திருவடியை, அரை நிமிஷ நேரமாகிலும் ஒரு முகப்பட்டு புலன்களையடக்கி தவ முறைப்படி தியானஞ் செய்யுந் தன்மை உணராதவனும், அறிவில்லாதவனும், குற்றமுடையவனும், மூடனும், மட்டியும், பிறவிக்குக் காரணமாகிய தீவினையால் பிறந்துழலுபவனுமாகிய அடியேன் அருட்செல்வமற்ற வறுமையால் மயக்கத்தையடைந்து துன்புறுவது முறையோ? கருணைக் கடலாகிய தேவரீர் அடியேன் மீது கருணை செய்யாமல் இருப்பதற்குக் காரணம்-என்மீதுள்ள குற்றம்-யாது? இந்த வேளையில் திருவாய் மலர்ந்தருள்வீர் ஐயா. திருவருள் புரிவதற்கு இது நல்ல தருணம்; மிகுந்த பெருமையுடைய, இறுதியற்ற பேரின்பத்தையும், எல்லா வகையான செல்வங்களுடன் கூடிய பெருவாழ்வையும், தகுதியையும், பதியறிவையும், பிறவாப் பெற்றியாகிய மோட்ச நலத்தையும் தேவரீர் தந்தருளி உதவி புரிந்தருள்வீர்.
சரண கமல ஆலயம் என்றால் உயிர்கள் பிறவித் துன்பத்தால் உண்டாகிய இளைப்பு நீங்க அடையும் இடம் முருகவேளுடைய திருவடியே என்பதாகும். அத்தகைய திருவடியை அரைக்கணமேனும் நினைத்து தவமுறைப்படி தியானஞ் செய்யவேண்டும். தவமுறை தியானம் என்பதாவது உற்ற நோய் நோன்று, உயிர்க்கு உறுகண் செய்யாது, பொறி புலனடக்கி, மனத்தை ஒரு முகப்படுத்தி, சித்திரத் தீபம் போல் அசைவற்று நின்று,உயிராவணமிருந்து, உள்ளக் கிழியில் அவன் உருவெழுதி, உற்று நோக்கி இருக்கும் நிலையாம். மிடியால் மயக்கம் உறுவேனோ என்பதாவது – திருவருள் இன்மையால் உண்மை நெறி ஈது என்றுஉணராது மயக்கம் உறுகின்றேன் என்பதாகும்.