திருப்புகழ்க் கதைகள் பகுதி 301
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
குமரகுருபர முருக – சுவாமி மலை
அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றிப் பதிமூன்றாவது திருப்புகழான “குமரகுருபர முருக” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, பொதுமகளிர் வசமாகி அழியாமல், உமது திருவடியைத் துதித்து உய்ய அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ……முருகாதே
குயில்மமொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ….ளனைவோரும்
தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்
தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் …… வலையாலே
சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்
தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ……தருவாயே
சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ……செருமீதே
தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க
ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்
தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் …… பலகோடி
திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு …… முருகோனே
திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – போரில் ஊக்கமுடன் அசுர சேனைகள் போர்க்களத்தில் எதிர்த்தபோது, ஒரு நொடிப் பொழுதுக்குள் அவ்வசுரசேனை அழியுமாறு வேற்படையைத் திருக்கரத்தில் எடுத்து, அசுரர் தலைகள் யாவும் அற்றுப் பூமியில் உருளுமாறு பகைவரைப் பொடிப்படுத்திய செருக்களத்தில் பேய்கள் புலையுணவின் விருப்பத்தால் கூத்தாடவும், வீரபத்திரர்கள் ஆரவாரிக்கவும், நிணங்களை யுண்டு உதிரத்தைக் குடிக்கும் காளியானவள், இறந்துபட்ட அசுரர்களது தசைகளை உண்டு மகிழ்ச்சியுறுமாறு ஏவப்பட்ட, கர்ஜிக்கின்ற பலகோடிப் பேய்களின் வரிசையாகவுள்ள கூட்டங்கள் பேரிரைச்சலும் ஆடலும், நரிகளும், காக்கைகளும், கழுகுகளும், கூத்தாடவும், உதிர வெறிக்கொண்ட வயிரவர்கள் சுழன்று ஆடவும், ஒப்பற்ற சர்வசங்காரப் படையை விடுத்தருளிய அஞ்ஞான இருளை அகற்றும் மெய்ஞ்ஞான மார்த்தாண்டரே; மாலயனாதி வானவர்கள் சேனைகளாக அவர்கட்குத் தலைமை பூண்டு உயிர்கள் தோறும் நின்று உலவிவருகின்ற முருகக் கடவுளே;
திருமகளைத் தழுவும் திருமாலும், பிரமதேவரும், ஐராவத ஊர்தி உடைய இந்திரனும் தேவரீருடைய திருவடியைப் புகழ்ந்து துதித்து நிற்கின்ற பழநியம்பதியிலும், கதிர்காமத்திலும் மேவி வளர்கின்ற சிவசமயச் செல்வமே; ஆறுமுகத்தரசே; திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே; குமாரக் கடவுளே; குருபரரே; முருகப்பெருமானே; குகமூர்த்தியே; வள்ளிமணவாளரே; சரவணபவரே; நிருதர் குலகால; பிறைமுடிப் பெருமானாகிய சிவமூர்த்திக்குக் குருவென்று உலகம் புகழ் “ஓம்” என்னும் முதலகரத்திற்குப் பொருள் விரித்துரைத்த ஞானசக்திதரரே என்று வாயாரத் துதித்து நெஞ்சார நினைத்து உள்ளம் உருகாமற்படிக்கு, மாதர்கட்கு அடிமையாகிச் சுழன்று திரிகின்ற அறிவிலியாகிய அடியேனை, தேவரீருடையத் திருவடியையே துதித்து உய்யுமாறு ஆண்டருள்புரிவீர்.
இத்திருப்புகழில் அருணகிரியார் உதிரம் உண்ட காளியைப் பற்றிப் பாடுகிறார். காளி ஏன் உதிரம் உண்ண வேண்டும்? நாளை காணலாம்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com
Related