அருமை தேவனே!, நாவலந் தீவாகிய இதனைச் சூழ்ந்த கருங்கடலின் பரப்பு இலட்சம் யோசனை, இந்தக் கடலை எப்போதும் சூழ்ந்திருப்பது இலவந்தீவு, அதனைச் சூழ்ந்திருப்பது இனிய கருப்பஞ்சாற்றுக் கடல், பொருந்திய இதனைச் சூழ இருப்பது குசத்தீவு, குசத்தீவைச் சூழ்வது மிகுந்த மதுவின் கடல், மதுக்கடலை விருப்பத்துடன் சூழ்ந்திருப்பது கிரவுஞ்ச தீவு, கிரவுஞ்சத் தீவினைச் சூழ்ந்திருப்பது நெய்க்கடல் ஆகும், உலகில் இதனைச் சூழ்வது சாகத்தீவு, இவ்வுலகில் சாகத்தீவை வளைவது திருப்பாற் கடல், நன்றாக அதனைச் சூழ்வது சான்மலித் தீவு, அதற்கப்புறம் (சூழ்வது) தயிர்க்கடல், அதற்கப்புறம் (சூழ்வது) விருப்பம் ஊட்டும் புட்கரத்தீவு, இதனைச் சூழ்வது அரிய நன்னீர்க்கடல்.
நாவல்அம் தீவு – நாவல் மரங்கள் நிறைந்த தீவு. இலவுஅம் தீவு – இலவ மரங்கள் நிறைவான தீவு. குசம் – தர்ப்பை; தர்ப்பைத் தீவு. கிரவுஞ்சம் – அன்றில் (ஒருவகைப் பறவை) : கிரவுஞ்சப் பறவையையுடைய தீவு. சாகம் – தேக்கு : தேக்குமரத் தீவு. சான்மலி என்பதும் இலவமரமே. புட்கரம் – பருந்து. நாவல், இலவு, குசம், கிரவுஞ்சம், சாகம், சான்மலி, புட்கரம் : இவற்றை மிகுதியாகவோ சிறப்பாகவோ உடைய ஏழுதீவுகள். அவ்வாறே கருங்கடல், கழைச்சாற்றுக் கடல், கட்கடல் (மது – கள்), நெய்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நறுநீர்க் கடல் என ஏழு கடல்கள் இவ்வாறு புராணம் கூறும்.