நாம தேவர் வாழ்ந்த காலத்தில் ஒரு பாகவதர் பண்டரிபுரத்தில் அதே தெருவில் வசித்தவர். அவரோடு ஒன்றாக பாடம் கற்றவர் என்றும் கொள்ளலாம்.
மந்த்ரசக்தி பாகவதர் என்று அனைவரும் அழைக்க காரணம், இதன் ரகசியம், அவரிடம் ஒரு மந்திரக்கல் இருந்ததுதான். ஆரம்ப காலத்தில் பாகவதர் நாமதேவரோடு சேர்ந்து விட்டலன் பஜனை பண்ணியவர் தான்.
ஏனோ அவருக்கு அது தொடர்ந்து நடக்க மனம் இல்லை. விட்டலன் ஒன்றும் பெரிசாக தூக்கி கொடுக்கவில்லையே!. இதற்கு பதிலாக லக்ஷ்மியை பூஜித்தால் குபேர சம்பத்து கிடைக்குமே என்று எண்ணம் தோன்றியதால் கடும்விரதம், உபாசனை, மந்த்ரோச்சாடனம், பூஜையெல்லாம் பண்ணி லக்ஷ்மியை மனம் கனிய வைத்து ஒரு ஸ்பரிசக்கல் சம்பாதித்துகொண்டார்.
அந்த வினோத சக்தி கல்லின் மூலம் கண்ணில் கண்ட இரும்பு பொருள்களையெல்லாம் தொட்டு தங்கமாக்கிகொண்டார்.
வீட்டில் இரும்பு தீர்ந்துபோய் தெருவெல்லாம் கிடக்கும் ஆணி கம்பியெல்லாம் எடுத்து வந்து அவை தங்கமாகியது. இதனால் பாகவதருக்கு விட்டலன் பஜனையில் ஈடுபாடு இருக்குமா? மாதக்கணக்கில் பஜனையில் கலந்து கொள்வதில்லை.
நாமதேவருக்கு ரொம்ப வருத்தம் “ஏன் இவர் இவ்வாறு மாறிவிட்டார்” என்று. “விட்டலா இதுவும் உன் சித்தமா”என்று எடுத்துகொண்டார்.
நாமதேவர் மனைவி பாகவதர் மனைவிக்கு நெருங்கிய நண்பி. இருவரும் ஒன்றாகவே காலையில் சந்திரபாகா நதிக்கு சென்று ஸ்நானம் செய்து நீர்மொண்டு வீட்டுக்கு திரும்புவார்கள்.
உலகத்தில் எல்லா விஷயங்களும் அப்போது பேசப்படும்.
“என்னடி கொஞ்சநாளா ரொம்ப மினுமினுன்னு இருக்கே. புது புடவையா கட்டிகிறே. பளபளன்னு புதுசு புதுசா நகையெல்லாம் உன் கழுத்திலே? எப்பிடி இதெல்லாம்?.
உன்கிட்ட சொல்றதுக்கென்ன? ஆனா மூணாம்பேருக்கு தெரியாம வச்சுக்கோ. அந்த மனுஷன் இப்பல்லாம் பாண்டுரங்கனை விட்டுட்டு லக்ஷ்மி குபேரன்னு நிறைய பூஜை மந்திர தந்திரமெல்லாம் பண்ணி இரும்பை தங்கமாக்கிற ஒரு கல்லை புடிச்சிண்டு வந்திருக்கார்.
அதை தனியா தொட்டு தொட்டு பூஜை பண்ணி ஒரு பேழையில் போட்டு பூஜையிலே வச்சிருக்காரோல்லியோ. அந்த கல்லாலே இரும்பை தொட்டாலே தங்கமாறது. அடி அம்மா இதை யார் கிட்டயும் சொல்லிடாதேடி”.
“உனக்கு நாமதேவரை பத்தி தெரியுமில்லையா.
வீட்டிலே தரித்ரம் பிடுங்கி திங்கறது. காசே சம்பாதிக்காம எப்ப பார்த்தாலும் பஜனை பஜனை என்று விட்டலன் ஸ்மரணை தான். நானும் அம்மாவும் தான் தினமும் யார் கிட்டயாவது யாசகம் பண்ணி பிட்ஷை நடக்கிறது. ஒரே ஒருநாள் எனக்கு அந்த கல்லை கொடேன். நிறைய துருபிடிச்ச ஆணியா வீட்டுலே நிறைய இருக்கே எதாவது கொஞ்சம் தங்கமா பண்ணினா என் தரித்ரம் விடியாதா சொல்லு?” எனக் கல்லைப் பெற்றாள்.
நிறைய ஊசிகளும் இரும்பு துண்டுகளும் தங்கமாயின. கொஞ்சம் சீக்ரமாகவே வீடு வந்த நாமதேவர் அவள் இரும்பை தங்கமாக்குவதை கவனித்து பதறினார். விவரங்களை கேட்டு புரிந்து கொண்டார்.
பண ஆசை தன் மனைவியையும் பாகவதரைப்போலவவே மாற்றுவிடுவதை அறிந்து வாடினார். என்ன தோன்றியதோ. “விட்டலா” என்று கத்திக்கொண்டே அந்த மந்திரக்கல்லை பிடுங்கி எடுத்துகொண்டு ஓடினார்.
சந்திரபாகா நதியில் ஆழத்தில் எங்கோ அது விழுந்து மறைந்தது. அமைதியாக வீடு திரும்பினார். நாம் தேவர் மனைவி பாகவதர் மனைவியை சந்திக்கவில்லை. பயம். மறுநாள் வழக்கம் போல பாகவதர் பூஜைக்கு உட்கார்ந்தார்,
பேழையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு லக்ஷ்மியை பிரார்த்தித்து திறந்தார் உள்ளே கல் இல்லை. ஷாக் அடித்து எங்கும் தேடி காணாமல் மனைவியை விசாரித்து உண்மை தெரிந்து கொண்டார் நெருப்பாக அவளை சுட்டார். நாமதேவர் வீட்டுக்கு வந்து “எங்கே என்னுடைய மந்திரக்கல் கொடு உடனே” என்றார்.
அவரை அமைதி படுத்தி பகவான் மீது செய்யும் பஜனையின் புண்ய பலனையெல்லாம் எடுத்தி கூறி நாமதேவர் அவரை மீண்டும் சேர்ந்து கொள்ள சொன்னார். அதை கேட்கும் நிலையில் பாகவதர் இல்லையே. வானுக்கும் பூமிக்குமாக குதித்து, “கொண்டுவா என் கல்லை” என்று நச்சரிக்கவே அது சந்திரபாகா நதியில் போடப்பட்டதை நாமதேவர் சொன்னதும் ஓடினார் நதிக்கு.
வெள்ளமாக ஓடும் நதியில் கல்லை எங்கே தேடுவது?. ” என் கல், என் கல். அதை இப்போதே தா” என்று பித்து பிடிக்காத குறையாக கத்தினார் பாகவதர். நாமதேவரையும் ஏன் விட்டலனையுமே வாய்க்கு வந்தபடியெல்லாம் தாழ்வாக ஏசினார்.
நாமதேவர் தன்னை யார் என்ன சொன்னாலும் பொறுத்துகொள்வார் விட்டலனை காது கேட்க விமர்சிக்க விடுவாரா?. “விட்டலா நீதான் நான் செய்த தவறை மன்னித்து இந்த மனிதரின் கல் மீண்டும் கிடைக்க அருள் புரியவேண்டும். என் வார்த்தைகள் அவர் செவியில் ஏறவில்லை.
என்னால் உன்னையுமல்லவா புண்படுத்துகிறார்.” கண்களை மூடி ஒருகணம் விட்டலனை உள்ளன்புடன் நினைத்து “பாகவதரே வாருங்கள்” என்று அவர் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நதிக்கு சென்றார் நதியில் இறங்கினார் மூழ்கி கைக்கு கிடைத்த கல்லெல்லாம் எடுத்து மேலே வந்தார்.
“இந்தாருங்கள் அய்யா உங்கள் கல்” என்றார். கை நிறைய பெரிய பெரிய மந்திர கற்கள். நாமதேவர் சக்தியை பாண்டுரங்கன் மகிமையை இமைக்கும் நேரத்தில் புரிந்துகொண்டார் பாகவதர்.
கற்களை வாங்கி வீசினார் நதியில் நாமதேவர் காலடியில் விழுந்தார். மீண்டும் விட்டலனின் ஆலயத்தில் நாமதேவரோடு பாகவதர் குரலும் மறுபடியும் பஜனையில் கர்ணாம்ருதமாக ஒலித்ததை கேட்டவரெல்லாம் புகழ்ந்தனர்
எடுத்த கல்லெல்லாம் மந்திரக் கல்! பாண்டுரங்கன் பெருமை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.