திருப்புகழ்க் கதைகள் – பகுதி 276
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
எந்தத் திகையினும் – சுவாமி மலை
மயிலுமாடி நீயுமாடி வரவேண்டும்
சம்பந்தாண்டான் அருணகிரியாரிடம் பிரபுட தேவ மாராயன் அரசவையில் – என் மந்திர பலத்தால் அழைத்தால் காளிதேவி என் முன் பிரசன்னமாவாள்… அதுபோல நீர் உமது முருகனை வரவழைத்துக் காட்ட முடியுமா? மன்னர் பிரானுக்கு தரிசனம் செய்து வைக்க முடியுமா?’ என்று பெரும் குரலில் கொக்கரித்தான்.
மன்னன் பிரபுட தேவனுக்கோ இவர்கள் போட்டியின் காரணமாய்த் தனக்குக் காளியின் தரிசனமும் முருகனின் தரிசனமும் கிட்டும் என்று மகிழ்ந்து இந்தப் போட்டியை ஊக்குவித்தான். அருணகிரிநாதரும் இதற்கு இணங்கினார்.
சம்பந்தாண்டான் அந்த இரவு முழுவதும் உறங்கவில்லை. இரவு முழுவதும் விழித்திருந்து அபிசார ஹோமம் செய்து உரத்த குரலில் மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவன் வழிபடும் காளிதேவி பிரசன்னமாகவில்லை. சம்பந்தாண்டான் தோல்வியுற்றதை அடுத்து மன்னன் தனது பரிவாரங்கள் பின்தொடர திருவண்ணாமலை கோயிலினுள் தியானத்தில் ஈடுபட்டிருந்த அருணகிரிநாதர் முன் சென்று பணிந்து, “பெருமானே! காளி தேவியைத் தருவித்துக் காட்டுவேன் என்று சூளுரைத்த சம்பந்தாண்டான் தோல்வியுற்றனன். கருணைகூர்ந்து தாங்கள் கந்தபெருமானை வரவழைத்து நாங்கள் உய்யும் பொருட்டு காட்டியருள வேண்டும்” என்று வேண்டினான்.
அருணகிரியாருக்கு உள்ளத்தே அசைக்கவே முடியாத ஓர் உறுதி உண்டு. குமரகுருபரர் சொல்லியது போல,
பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி 111
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
பூதமுதீ நீரும் பொருபடையும் – தீது அகலா 112
வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் – அவ்விடத்தில் 113
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் – கச்சைத் 114
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் – விரிகிரணம் 115
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற –
என்பது போல, கந்தவேளை எந்த வேளையுங் காணலாம். எங்கே நினைக்கினும் அங்கே என்முன் வந்து எதிர்நிற்பன் என்னப்பன் என்று அருணகிரியார் நினைத்தார்.
மன்னன் வேண்டியவுடன் சிவகங்கையில் முழுகி, அங்கே கரையில் இருக்கும் பதினாறுகால் மண்டபத்தில் ஒரு தூண் அருகில் நின்று கண்மூடி தியானித்து உள்ளம் உருக வேண்டினார். “பெருமானே! முன் ஒருமுறை பிரகலாதர் பொருட்டுத் திருமால் தூணிலிருந்து வெளிப்பட்டார். இப்போது எளியேன் என் பொருட்டு கருணையே வடிவான தேவரீர் இத்தூணிலிருந்து வெளிப்பட்டு எங்களை உய்விக்க வேண்டும்” என்று துதித்தார்.
“எந்தத் திசையினும்’, “கொடிய மறலியும்’, “இருவர் மயலோ! என்ற திருப்புகழ் பாடல்களை அமுதினும் இனிய குரலில் உள்ளமுருகப் பாடினார். எனினும் முருகவேள் காட்சி தரவில்லை. “என் முருகன் கைவிட மாட்டானே, வராது இருப்பதற்கு யாது காரணம்?’ என்று மயங்கிய அருணகிரிநாதர் அடுத்த கணமே ஆழ்நிலை தியானத்திற்குச் சென்றார். அப்போது அவர் கண்ட காட்சி…
சுற்றிலும் பணிப்பெண்கள் ஏதோ பேசிச் சிரிக்க, உமா தேவியார் முருகனைத் தன் மடியில் இறுக அமர்த்திப் பிடித்துக் கொண்டு ஏதோ வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார். முருகனுக்கோ தன் பக்தன் வேண்டுவது காதில் விழுகிறது.
உடனே, அன்னையின் மடியிலிருந்து திமிறி எழ முயல்கின்றார். ஆனால் அன்னை பிடித்திருந்த பிடியோ இளகுவதாகத் தெரியவில்லை. இதனைக் கண்ட அருணகிரியாருக்கு இது எதனால் என்பதும் ஞானதிருஷ்டியில் தெரிந்துவிட்டது. எல்லாம் சம்பந்தாண்டானின் வேலை.
காளிதேவி அன்னை உமாதேவியின் ஓர் அம்சம் அல்லவா? அதனால் காளி வந்து தரிசனம் தரவில்லை என்றாலும் எப்படியாவது முருகனை வரவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்று வேண்ட, காளியும் உமாதேவியிடம் முருகனைத் தன் மடியில் சிறிதுகாலம் வைத்திருக்க வேண்டுகிறாள்.
முருகனை அன்னையின் பிடியிலிருந்து விடுவிப்பது எப்படி? முருகன் திருவருளால் அவருக்கு ஒரு யோசனை பளீர் என்று உதித்தது. முருகன் ஏறி வறுகின்ற அவன் வாகனமான மயில் உமாதேவியாரின் அருகில் நின்றபடி கீழே எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்தது. மயிலைக் கண்டதும் உடனே அந்த மயில் மீது ஓர் இனிய பாடலை இசைத்தார்.
அந்தப் பாடல் என்ன? அந்த மயில் என்ன செய்தது? நாளை காணலாம்.