திருப்புகழ்க் கதைகள் பகுதி – 271
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இருவினை புனைந்து – சுவாமி மலை
பொய் சொல்லலாகாது பாப்பா
சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடிச்சென்ற பிரும்ம விஷ்ணு இருவருள் விஷ்ணு சிறிது காலம் சென்ற பின் சற்று சோர்வடைந்தார். அப்போது அசரீரியாக வந்து, தங்கள் இருவரையும் அடி,முடி தேடச்சொன்னவர் தங்களைக் காட்டிலும் பெரியவர் என்பதை உணர்ந்தார். மேலே பறந்து சென்ற பிரம்மாவோ, மேலேயிருந்து விழுந்து கொண்டிருந்த தாழம்பூ ஒன்றைப் பார்த்தார். அது சிவபெருமானின் சிரசிலிருந்து விழுந்தது என்று தெரிந்துகொண்ட பிரும்மன், ‘அங்கிருந்து நீ வருவதால், நான் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி சொல்ல வா’ என்று அழைத்துக் கொண்டு சிவமெருமானிடம் சென்று அவ்வாறே கூறினார்.
உண்மை நிலையை உணர்ந்ததற்காக விஷ்ணுவை ‘எல்லா இடங்களிலும் விஷ்ணுவிற்குக் கோவில்கள் இருக்கும்’ என வந்தவர் வாழ்த்தினார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்.
ஆருத்ரா தரிசனத்தன்று அந்த நீள் நெடுஞ்சுடர் தோன்றியது என்றும், அதன் தாபம் தாங்காது விஷ்ணு முதற்கொண்டு அனைத்து தேவர்களும் வேண்டிக்கொண்டதால் அதுவே மலையாக மாற, திருவண்ணாமலை ஆனது என்றும் புராணம் கூறுகிறது.
இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் தான், ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவனுக்குப் பின்புறம் பிரகாரத்தில் லிங்கோத்பவர் சிலை உள்ளது. அதற்கு மஹா சிவராத்திரி அன்று நள்ளிரவில் அபிஷேகம் நடக்கும்.
இந்நிகழ்ச்சியால் இவ்விரு கடவுளர்களும் தங்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்தார்கள். இதிலிருந்து நாமும் சில உண்மைகளை உணரலாம். அதாவது, ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. அதே போன்று மற்றவர் பொறுப்புகளை மதிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் பொறுப்புக்கு நமக்கு எவ்வளவு சுதந்திரம் உளளதோ, அதே போன்று மற்றவர் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் நாம் சார்ந்திருக்கிறோம். இதனை உணர்ந்தால் எந்தச் சமூகம் தான் வளர்ந்து முன்னேற முடியாது?
பிரம்மன் முடியைப் பார்க்க மேலும், விஷ்ணு அடியைப் பார்க்க கீழும் சென்றதற்குப் பதிலாக, பிரம்மன் கீழும் விஷ்ணு மேலும் சென்றிருக்க முடியுமோ? அப்படி கேள்வி கேட்கலாம் என்றாலும், அது இயற்கையானதாக இருக்கமுடியாது. ஒன்றே பிரம்மம் என்ற நிலையை விட்டு பல கடவுளர்கள் என்னும்போது, மனிதர்களைப் போலவே கடவுளர்களுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு எனலாம். அதனாலாயே, விஷ்ணுவுக்குக் காக்கும் தன்மையும் பிரம்மனுக்கு ஆக்கும் தன்மையும் உள்ளது.
ஒரு ஏழைக் குடும்பத்தை ஒருவன் காப்பதாக வைத்துக்கொள்வோம். அதற்கு செல்வமும் ஒரு துணை அல்லவா? அதனால் செல்வத்தின் திருவுருவாம் லக்ஷ்மி விஷ்ணுவின் துணைவியாக உள்ளார்.
அதே போன்று, ஆக்குதல், படைத்தல், எண்ணங்களை தோற்றுவித்தல், கலைகளை வளர்த்தல் போன்ற எல்லா ஆக்கச் சக்திகளுக்கும் கடவுளான பிரம்மனின் துணையாக சரஸ்வதி உள்ளார்.
செல்வம் என்பது உலகு சம்பந்தப்பட்டது. அது நிலம், மனை என்று தொடங்கி மற்ற வகையான செல்வங்களாகவும் தொடர்கிறது. அத்தகைய வசதிகள் சிறிதாவது இருந்தால்தான் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. அவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு, வடிவம் என்று கண்ணால் காணக்கூடியது போல் மற்ற புலன்களாலும் உணரக்கூடிய தன்மை உண்டு. அத்தகைய உலக சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி மற்றவர்களை விட தொழில் முனைவோருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
அதை அவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும்போது சமூகத்திற்கு நன்மையே செய்கின்றனர்; மனிதாபிமானமின்றி செயல் படுத்தும்போது தான் விளைவுகள் மோசமாகின்றன. செல்வம் தவிர உலகு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களும் காத்தல் அம்சத்தில் உள்ளதினாலோ என்னவோ, விஷ்ணுவிற்கு லக்ஷ்மி எனும் ஸ்ரீதேவியைத் தவிர பூதேவி எனும் துணைவியும் உண்டு. இப்படியாக பூமி, செல்வம் சம்பந்தம் விஷ்ணுவிற்கு இருக்கும் போது, அவர் பூமியைத் தவிர்த்து ஆகாயத்தில் பறந்து செல்வதையா எதிர்பார்க்கமுடியாது அல்லவா?
அதே போன்று ஆக்குதல் என்பது உலகு சம்பந்தப்பட்ட பிறப்பு, மற்றும் மனது சம்பந்தப்பட்ட எல்லாவிதமான எண்ணங்கள், திட்டங்கள் போன்ற புலன்களுக்குத் தெரியாத நுண்ணியமானவைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இவைகள் அனைத்துமே ஒருவர் தம் வாழ்க்கையில் கற்பதற்கு ஏதுவாக அமைந்து அவரை உயர்த்திச் செல்லும். அது தவிர அவைகள் அனைத்துமே உணர்வால் மட்டுமே அறிந்துகொள்ளப்படும்.
உள்ளத்திலிருந்து அவைகள் வெளிப்படும்போதுதான் பேச்சாகவோ, செயலாகவோ மாறக்கூடும். அப்படி வரும்வரை அதற்கு ஒரு வடிவமோ, அளவோ இன்றி புகை மூட்டம் அல்லது மேகக் கூட்டம் போல் தளர்ந்து படர்ந்து இருக்கும். அதனாலேயே ஒரு செயல்வீரனோடு ஒப்பிடும் போது வெறும் எண்ணங்கள் மட்டுமே கொண்டவனை ஒரு பனிப் படலத்திலோ மேகக் கூட்டத்திலோ மிதப்பாதகச் சொல்கிறோம்.
“எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா?” என்பதும் இதை உணர்த்துகிறது. இப்படியாக அறிவு சார்ந்த, கற்றல் சம்பந்தப்பட்ட திறன்களுக்கு அதிபதியான சரஸ்வதியின் துணையான பிரம்மா புகை மண்டலம் அல்லது மேகக் கூட்டம் போல் மேலே போகாது கீழே போவார் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்?