கீரகவியைக் கரையேற்றிய ஈசன்!

ஆன்மிக கட்டுரைகள்
138"/>

எம்பெருமான் சொக்கநாதப் பெருமானின் பெரும் கருணைமழையில் நனையப்பெற்று, ஆதிசேஷனால் எல்லைகாட்டப்பட்டு, மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாண வைபோகமும் நடக்கப்பட்ட தலமாம் மதுரை மாநகரின் மாவீரர்களாம் பாண்டியர்கள் மரபில் வந்த வம்சசேகர பாண்டியன் மைந்தனாகிய வம்சசூடாமணி பாண்டியன் மக்களாட்சி செய்து வந்த காலம் அது.

தம் வம்ச வழியிலே, மக்கள் தொண்டே மகேசன் தொண்டென வம்சசூடாமணி பாண்டியனின் ஆட்சி நடந்து வந்த காலம் அது. ” சம்பக மொட்டுக்களால் சுந்தரேசரை ஆராதித்துக் கொண்டிருந்ததால் வம்சசூடாமணி பாண்டியன், ‘ சம்பகபாண்டியன் ‘ எனப் பெயர் பெற்றான்” .

கவிஜனசிகாமணியாய்த் திகழ்ந்த சம்பக பாண்டியன் வசந்த காலத்தில் புதிதாக மணக்கப்பட்ட தன் பட்டமஹிஷியுடன் சிருங்காரங்களில் ஈடுபட்டு போகங்களை அனுபவித்து வந்தான். ஒரு சமயம் சம்பக பாண்டியன், புஷ்பங்களில் காணப்படாத அரிய நறுமணம் தென்றல் காற்றில் கலந்து வருவதை நுகர்ந்து, ” இது தன்னுடைய பட்டத்து அரசியின் கேசங்களுடைய இயற்கையான நறுமணமாகத்தான் இருக்க முடியும். பத்மங்களின் நறுமணமொத்த நறுமணம் ” பத்மினீ ” எனப்படுவது உத்தமமான பத்தினிகளுக்கே இருக்கவேண்டும் என நினைத்து மகிழ்ந்தான். எனினும் இது சரியா என பரீட்சித்து முடிவு செய்யும் பொருட்டு, அரண்மனை வாயிலில் 1000 பொற்காசுகள் கொண்ட ஒரு கிழியைக் கட்டித் தொங்கவிட்டு, ” என் மனதில் உள்ளதைத் தெரிவிக்கும் கவிஞர் இப்பரிசினைப் பெறுவார் ” என்று பிரகடனம் செய்தான்.

பெருங்கவிகள் பற்பலர் பற்பலவாறு வருணித்தனர். அரசன் எண்ணத்தை எவராலும் அறியமுடியவில்லை. அப்போது ஒரு ஆதிசைவ பிரம்மச்சாரி, ஸ்ரீ சுந்தரேசர் சபையில் வந்து மனோகரமான ஒரு செய்யுளைப் படித்தான். அவன் ஸ்ரீ சுந்தரேசரை மிகவும் உருகி ஆராதித்து, மணமாகத தனக்கு மணமாகவேண்டுமேனவும், தன் வாழ்க்கையை சுகமாக நடத்த போதிய செல்வத்தை அருளிச் செய்யயவேண்டும் எனவும் பிரார்த்தித்தான். அரசனின் மனதில் உள்ளதை அழகாக வெளிப்படுத்தும் ஒரு செய்யுளைக் கொடுத்து, ” இதன் மூலம் பொற்கிழியைப் பெற்றுக்கொள் ” என்று ஸ்ரீ சுந்தரேசர் அவனுக்கு அருளியிருந்தார். ஒரு வண்டைப் பார்த்துக் கூறுவதாகச் செய்யுள் அமைந்திருந்தது.

” ஏ வண்டே ! பற்பல புஷ்பங்களின் நறுமணத்தை நீ அறிவாய். உண்மையைச்சொல், தேவியின் கேசங்களில் உள்ள நறுமணத்திற்கு ஒப்பான நறுமணம் எந்தப் புஷ்பத்திலிள்ளது ? ” என்று இருந்தது.

ஸ்ரீ சுந்தரேசர் அருளிய இச்செய்ய்யுளைக் கேட்டு அரசன் மிகவும் ஆச்சரியமடைந்தான், மகிழ்ச்சியுற்றான். அவ்வாறே ஆதிசைவ பிரம்மச்சாரியை மிகவும் பாரட்டி பொற்கிழியைப் பெற்றுக்கொள்ள அனுமதியும் அளித்தான். அச்சமயம் அரசகவியாகிய கீரகவி அங்கு வீற்றிருந்தார். அரசனின் எடுத்த முடிவில் மனம் ஒப்பாத கீரகவி பொறுக்காமல் ஆட்சேபித்து, ” ரத்தத்தின் கழிவுப்பொருள்தான் கேசமாக மாறியுள்ளது. நறுமணமுள்ள புஷ்பங்களை வைத்து அலங்கரிக்காவிட்டால், கேசங்களில் நறுமணம் ஏது ? அரசன் நினைத்ததோ, புத்திசாலியான நீ அதைக் கண்டுபிடித்துச் சொன்னதோ மிக அழகு ! ” என்று இரு பொருள்படும்படி விகடமாகவும், உட்பொருளோடும் சொன்னார்.

அவரது துராக்ஷேபத்திற்குப் பதில் கூற இயலாமல் பிரம்மச்சாரி தண்டம் போல் நிறான். பரிசு கிடைத்தது, சுந்தரேசர் அருளால் தன் வாழ்வில் மகிழ்ச்சிக்கான வழித்தடம் தெரிந்துவிட்டது எனப் பூரித்துப்போயிருந்த அப்பிரம்மச்சாரி மனம் உடைந்து சுந்தரேசரை மனமுருக வேண்டித் தொழ ஆரம்பித்தான். இத்திருவிளையாட்டை ஆரம்பித்ததே அந்த சுந்தரேசர் என இருக்க, நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டு அசையாமல் இருக்குமா சிவம் ? வந்தது சிவக்கொழுந்து அதுவும் சிம்ஹம் போல கர்ஜித்துக்கொண்டு.

” இந்தச் சபையில் என் சீடன் சொன்னதை எந்த புத்திகெட்டவன் ஆட்சேபிக்கிறான் ? தேகத்திலிருக்கும் பத்மகந்தம் ( தாமரையை ஒத்த நறுமணம் ) பத்மினீஸ்த்ரீகளின் ( உத்தமமான பத்தினிகளின் ) இயற்கை. பூலோகப்புஷ்பம் அணியாத இந்திராணியின் கேசத்தில் நறுமணமிருக்கிறதே ! மண்ணில்தான் கந்தமிருக்கும், மண்தான் புஷ்பமாகிறது, புஷ்பமணியாவிட்டால் மணம் கிடையாது என்றால் இந்திராணி கேசம் எப்படி மணமுள்ளதாகும் ? கௌரிதேவின் கேசத்தின் நறுமணம் புஷ்பத்தாலானதா ? கார்மணமலமான பார்த்திவ ( மண்ணின் பரினாமமான ) புஷ்பங்களில் கந்தம் இருக்கும்போது ரத்மலமான ( இரத்தத்தின் பரினாமமான ) பத்மினீ கேசங்களில் கந்தம் ஏன் இருக்கக்கூடாது ? புஷ்பங்களும் கேசங்களும் கழிவுப்பொருள்கள்தான். இரத்தத்தின் கழிவுப்பொருள் மட்டும் என்ன தவறு செய்த்து ? என்று கர்ஜித்து ஈசன் கீரரை வெற்றிகண்டார். பிரம்மச்சாரியும் மிக மகிழ்ச்சியாக பொற்கிழியப் பெற்றுக்கோண்டு சென்றான்.

ஸ்ரீ சுந்தரேசர் சங்கக் கவிகளுள் ஒருவராகத் தானும் சங்கப் பலகையிலமர்ந்து கொண்டு, தானும் அற்புதமான கவிகள் இயற்றிக்கொண்டு, சங்கப்புலவர்களால் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஒரு சமயம் கீரகவியுடன் கலகம் செய்ய நேர்ந்தது. வீண் பிடிவாதத்தால் கீரகவி தொடர்ந்து வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோது ஈசன், ஐந்து முகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண் கொண்ட தனது உண்மை உருவைக் காட்டினார். அந்த அற்புதத்தைப் பார்த்த பிறகும், சிவனிடம் மிகுந்த பக்தியுடையவராய் இருந்தபோதிலும், அந்த சமயத்தில் அஞ்ஞானம் மேலிட்டதால், கீரகவி வாக்குவாதத்தை நிறுத்தவில்லை .

ஏதுமறியா பாமரர்களிடம் இருக்கும் அஞ்ஞானத்தை விட, சிதாபாசர்களிடத்தில் ( அரிஞர்போல் தோன்றுபவரிடத்தில் ) இருக்கும் அஞ்ஞானத்திற்கு வலிமை அதிகம். எனவே கீரர், ” நீர் மிகக் கெட்டிக்காரரா யிருப்பினும், ஐந்து முகம் உள்ளதால் நாலு திக்கிலும் ஒரே சமயம் பார்க்கும் திறன் பெற்றவராயினும், உமது கவியில் உள்ள குற்றத்தை நான் பலமுறை எடுத்துகூறியும் உம்மால் ஏன் அதை உணரமுடியவில்லை ? ச்ருதி, ச்ருதி என்று பிரசித்தி அடைவிக்கப்பட்ட உமது கிருதிகள் எளிதில் பொருந்துபவைகளாக இல்லை. எம்போன்றவர்கள் அவற்றை அத்யாஹாரம் ( இல்லாத பதத்தைச் சேர்த்தல் ) , மாற்றல், பிரகரணோத்கர்ஷம், அனுஷங்கள் ( ஓரிடத்தில் சொன்ன பதத்தை வேறிடத்தில் சேர்த்துச் சொல்வது ) முதலியவற்றாலும், வேறு கருத்து வருணிப்பது மூலமாகவும் பொருந்தச் செய்ய வேண்டியுள்ளது, அதை நங்கு அறிந்து கொள்ளும். எமது கவிதைகளில் குற்றம் கூற முற்படாதீர். நீர் ஈசன், சர்வ வித்தைகளுக்கும் ஈசானந்தான் ( அதிபதிதான் ) ஆனாலும் ” கீரன் ஆட்சேபித்தாலோ, கீரம் ( கிளி ) போல அதை அப்படியே சொல்வதுதான் நலம் ” ( இது தவறென்று கீரர் சொன்னார் அப்படியே ஒப்புக்கொள்ளுதல் நல்லது, தவறல்ல, சரி என்று உறுதிப்படுத்த முடியாது ) என்று சொன்னார்.

ஈசன் அலோசித்தார். ஞானமும் அஞ்ஞானமும் கலந்திருப்பதால் வந்த விளைவு இது. பக்தனுடைய அஞ்ஞானத்தை அகற்றாமல் வைத்திருப்பது நமது குற்றம்தான்.” காலப்போக்கில் இவனது புத்தியில் உள்ள அழுக்கைக் களைவோம் ” என்று உடனே மறந்திருந்தார். இத்தகைய தயாள குணங்கள் இல்லையெனில் நாம் ஈசனைத் தியானிப்போமா ? அவர் யாரோ நாம் யாரோ என்றுதானிருப்போம்.

சிவனை எதிர்த்து அஞ்ஞானத்துடன் வாதாடிய பாபத்தால் கீரர் தாபமடிந்து பொற்றாமரைக்குளத்து நீரில் வீழ்ந்தார். வேறுவழியில் தீர்க்க முடியாததைத் தீர்த்து வைப்பது அதுதான் என்பதை அறிந்தவர் அவர். இருமுறை வணங்கியவருக்கும் நித்தம் கடனாளியாக இருக்கின்ற கதம்பவன சுந்தரேசரின் கருணையால், கீரகவி, செய்த குற்றத்திற்கு வருந்தி இறைவனை வணங்கினார். ஈசன், வேதங்கள், ஆகமங்கள் என எல்லாமியற்றியவராயினும் கீரருடைய சிற்றறிவுக்கேற்ற துதியையும் மகிழ்ந்து ஏற்றார். பொற்றாமரைக் குளத்திலிருந்த கீரரை கைகொடுது வெளிக்கொணந்தார். பிறவிக்கடலில் இருந்தும் ஈசன் அவரைக் கரையேற்றினார்.

கவிதை விடயத்தில் கீரருக்கிருந்த அஞ்ஞானத்தை சுந்தரேசர், குறுமுனி அகத்தியர் மூலம் போக்கினார். திராவிடஸூத்ர ரஹஸ்ய சாரத்தை கீரருக்கு அகத்தியரைக் கொண்டு போதித்து இவர் மூலம் மற்ற கவிகள் அறியச்செய்து இவரது புகழைப் பரப்பினார்.

” மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத திருத்தொண்டர் தொகை தரப் “

என்பதற்கேற்ப இறைவன் ஈசன் தென்னகத்தின் மீதும், தமிழின் மீதும் அலாதிப்பிரியம் உள்ளவராகவே காணப்படுகிறார். தன்னுடைய தோற்றமாகிய சுந்தரரைக் கூட தென்னகத்திலேயே தோன்றச் செய்து, திருநாவலூர் நம்பியாகிய வன் தொண்டர் நாவில் செந்தமிழை விளையாடச் செய்து, பெறுவதற்கரிய தேவரங்களை உலகிற்கு அளித்தவரல்லவா !

காமத்தை எரிக்கத் தவறிய சுந்தரரையும் சரி அஞ்ஞானத்தை எரிக்கத் தவறிய கீரரையும் சரி இறைவன் தன் கருணையால் ஆட்கொள்ளத் தவறவில்லை. எரி சாம்பலைப் பூசிக்கொள்பவனல்லவா அவன், அவனிடம் எதுவும் எரிந்து போகும். சுந்தரருக்கு தோழனாக அருளிய ஈசன், கீரருக்கு குருவாக அருளுகிறார். சத்குருவின் பாதம் மும்மூர்த்திகளின் பாதக்
கமலங்களுக்குச் சமம். கீரருக்கு இறைவன் குருவாக இருந்து அஞ்ஞானத்தை ஒழித்துப் பிறவிக்கடனிலிருந்து கரை சேர்க்கிறார்.

இதையே ” திருக்களிற்றுப்படியார் ” எவ்வளவு அழகாகக் கூறுகிறது பாருங்கள்……

செய்யாச் செயலையவன் செய்யாமை கண்டுதனைச்
செய்யா செயலிற் செலுத்தினால் – எய்யாதே
மாணவக ! அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமும் இத்தால் அறி

என்று கூறுகிறது. அதாவது, உயிர் பக்குவமற்ற பொழுது விளையும் பேரின்பத்தை இறைவன் உயிர்க்கு வேறாக நின்று அதனை வழங்குவதன்று. அது தானாகவே உண்டாக்கிக் கொள்ளப்பட்டதும் அன்று என்பதை அறிந்து, உயிர் தன்னுணர்வும் தன்னறிவும் அற்ற நிலையில் அதனை வழங்கிய திருவருளிலேயே அழுந்தி நிற்குமாயின் அப்பொழுது அவாவாகிய கொடிகளை வளர்க்கும் ஆணவமும் அற்றுவிடும், என்பதாகும். ஆங்குப்பெறும் சிவஞானத்தின் முன் அவாவினை வளர்க்கும் ஆணவம் நிலைபெறாதொழியும்.

இறைவனின் பாதகமலங்ளே விருப்பங்களை நிறைவற்றுவதில் கல்ப்பவிருக்ஷத்தை வெல்லக்கூடியது. கல்ப்பவிருக்ஷங்களை விஞ்சி விருப்பங்களை ஈடேற்றுவது. நம சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க ! என்று ஈசன் பாதம் பணிந்து, உன் திருவடியின்றி எமக்கிங்கு வேறு துணையேதும் இல்லை என்று மனமுருகி, ஒருமையுடன் அவன் திருவடிகளை நினைத்து, போற்றிப் பற்றுவோம், இனையில்லாப் பேரின்ப நிலையினை அடைவோம்.

  • சிவலீலார்ணவம், (ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கரமடம்)
  • ஸ்ரீராம் கிருஷ்ணஸ்வாமி

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply