e0af8d-e0aeaee0aeb4e0af88e0aeaf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 78
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
உததிஅறல் மொண்டு – திருச்செந்தூர்
மழையின் இயற்பியல் – 1
அருணகிரிநாதர் அருளிய முப்பத்தைந்தாவது திருப்புகழான உததியறல் மொண்டு எனத்தொடங்கும் திருப்புகழ் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். மாதர் மயல் உறாது, முருகன் திருவடியில் அன்பு செய்ய அருள வேண்டி அருணகிரியார் பாடிய பாடலாகும். இனிப் பாடலைக் காணலாம்.
உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்றல் ஓதிநரை …… பஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடையொ துங்கு பீளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதென ……வெம்புலாலாய்
மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர் …… கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களின்
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமது …… சிந்தியேனோ
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி …… நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ர சேகரனும்
இமையவர்வ ணங்கு வாசவனும் …… நின்றுதாழும்
முதல்வசுக மைந்த பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
மகிழ்முலைசு ரந்த பாலமுத …… முண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு …… தம்பிரானே.
இத்திருப்புகழின் பொருளாவது – இதழ் விரிந்த தாமரையாகிய மணங்கமழும் கோயிலில் வாழுகின்ற நான்முகக் கடவுளும், அலைவீசுகின்ற திருப்பாற் கடலில் ஆதிசேடன்மீது அரிதுயில் புரிகின்ற நாராயண மூர்த்தியும், உமாதேவியாரை இடப்பாகத்திற் கொண்டவரும் சந்திரனை முடித்தவரும் ஆகிய உருத்திர மூர்த்தியும், தேவர்கள் தொழுகின்ற இந்திரனும் திருமுன் நின்று தொழ அருள்புரிகின்ற முழு முதற் கடவுளே! (ஆன்மாக்களுக்கு) இன்பத்தைத் தருகின்ற குமாரக் கடவுளே!
சிறந்த பீடத்தில் விளங்கும் எல்லா உலகங்களுக்கும் அண்டங்களுக்கும் தலைவியாகிய உமையம்மையாரின் குவிந்த தனங்களினின்றுஞ் சுரந்த பால் அமுதத்தைப் பருகிய குமாரவேளே!
மிக்க இளமையான சங்குகளை வீசும் அலைகளுடன் கூடி கரிய நிறம் பொருந்திய கடற்கரையில் ஞானமுதல் உயர்கின்ற திருச்செந்தூரில் எழுந்தருளி அடியார்க்கு வாழ்வு தருகின்ற தனிப்பெருந் தலைவரே!
கடல் நீரை மொண்டு குடித்து கருக் கொண்ட மேகம்போல் இருண்ட நீல நிறம் மிகுந்து ஒளி வீசுகின்றதும், மணம் வீசுவதும் ஆகிய கூந்தல் நரைத்து பஞ்சு போலாகியும், உதிரம் நிறைந்து தூய வேல் போன்ற கண்களின் ஓரங்களில் நாறுகின்ற தயிர் பிதிர்ந்தது போல் பீளைகள் ஒதுங்கி தீய வாசனை வீசவும், கரட மதம் பொழிகின்ற யானையின் வாயில் பிறைச் சந்திரனைப்போல் திகழ்கின்ற தந்தத்தினால் கடைந்த சூதுக் காய்கள் போல், குடத்தை மோதி வளர்கின்ற தனங்கள் தோல்போல் ஆகியும், அழகு அழிகின்ற இளம் பெண்களின் நிலமையுணர்ந்து, தேவரீருடைய திருவடியில் பொருந்துகின்ற வழியடிமையாகிய நாயேன் அன்புகொண்டு உய்யும் நெறியைச் சிந்திக்க மாட்டேனோ?
இத்திருப்புகழின் உததியறல் மொண்டு சூல்கொள்கரு முகிலெனஇ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்றல் என்ற வரிகளில் மழைபெய்தலின் இயற்பியலை அரிணகிரியார் கூறியுள்ளார். அதனை நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: மழையின் இயற்பியல்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.