ஆன்மீக கேள்வி பதில்: மகா சிவராத்திரி.
கேள்வி 2: மகா சிவராத்திரியின் சிறப்பு என்ன? இன்று சிவனின் பிறந்தநாளா?
பதில்: இறைவன் பிறப்பிறப்பு இல்லாதவன். சிவனுக்கு சுயம்பு, ஆத்மபு என்று இரு பெயர்கள் உள்ளன. அதாவது தனக்கு தானாகவே தோன்றியவன்.
தோன்றியவன், இருப்பவன் என்று இரண்டு செயல்கள் உள்ளன. இறைவன் எப்போதும் இருப்பவனே! ஆனால் ஜகத்திற்கு அருளுவதற்காக தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறான். அவ்யக்தமாக இருப்பது வ்யக்தமாகிறது.
அதனையே தோன்றுவது என்கிறோம். சிவனுக்கு ‘பவன்’ என்ற ஒரு பெயர் உள்ளது. தோன்றியவன் என்று பொருள்.
மகா சிவராத்திரியின் சிறப்பு என்னவென்றால் படைப்பின் தொடக்கத்தில் பரமாத்மா தன்னைத் தானே ஒரு திவ்யமான அக்னி ஸ்தம்பம் வடிவில் வெளிப்படுத்திக் கொண்டார். அவ்வாறு வ்யக்தம் ஆனார்.
அன்றைய நாளை மகா சிவராத்திரி என்கிறோம் . ஆனால் இதனை பிறந்தநாள் என்று நாம் நம் மகிழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளலாமே தவிர இறைவன் தனக்குத் தானாக தன் தத்துவத்தை அறிவித்த நாள் இது.
இதன் தொடர்பாக புராணக்கதை என்ன கூறுகிறது என்றால் பிரம்மா, விஷ்ணு இருவரின் மத்தியில் பரமேஸ்வரன் ஒரு மகா ஜோதிலிங்கமாக அவிர்பாவம் செய்து தன் ஆதி அந்தமில்லாத தத்துவத்தை வெளிப்படுத்தினார் என்று கூறுகிறது. இந்த புராணக் கதையில் சிறு வித்தியாசம் காணப்படுகிறது.
ஒன்று மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நள்ளிரவில் பரமேஸ்வரன் மகாலிங்கமாக தோன்றினான் என்று சில புராணங்களில் காணப்படுகிறது. ஆனால் மகா சிவராத்திரி தொடர்பாக சிவபுராணத்தில் ஒரு பிரத்தியேகமான அம்சம் காணப்படுகிறது.
இது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பரமேஸ்வரன் மகாலிங்கமாக தோன்றினார் என்று கூறுகிறது. அந்த மகாலிங்கத்தின் அடிமுடி அறிவதற்கு பிரம்மாவும் விஷ்ணுவும் முயற்சித்தார்கள். பிரம்மா அன்னப் பறவை வடிவில் மேலே பறந்து சென்று தேடினார். விஷ்ணு வராக வடிவில் கீழே சென்று தேடினார். இருவராலும் அடி முடி காண முடியவில்லை. அவர்கள் பரமேஸ்வரனை சரணடைந்தனர். பரமேஸ்வரன் அவர்களுக்கு வ்யக்தமாகித் தென்பட்டு தன் தத்துவத்தை விளக்கினார். அப்போது பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனை வழிபட்டார்கள் என்று காணப்படுகிறது.
அவர்கள் சிவனை வழிபட்ட நாள் மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நள்ளிரவில். அப்போதிலிருந்து சிவ வழிபாடு, லிங்க வழிபாடு தொடங்கியது. பிரம்மா, விஷ்ணுவிடம் இருந்து தேவதைகள் அறிந்து கொண்டார்கள். அவர்கள் மூலம் ருஷிகள் அறிந்தார்கள். ருஷிகள் மூலம் பிரபஞ்சம் முழுவதும் அறிந்து கொண்டது.
இது முழுவதையும் கூறும் புகழ்பெற்ற லிங்காஷ்டகம் ஸ்லோகம் உள்ளது. “பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம்”. இவ்விதமாக பரமேஸ்வரன் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டு தன் வழிபாட்டை பிரம்மா விஷ்ணு மூலம் பரப்பிய நாள் இந்த மாசிமாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி.
ஓராண்டு காலம் சிவனை வழிபட்ட பலனை இன்று ஒருநாள் வழிபட்டால் பெற முடியும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இது மகா சிவராத்திரியின் சிறப்பு.
தெலுங்கில் : பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்