சைதன்ய மகாபிரபு தன்னுடைய சேது யாத்திரைக்குச் செல்லும்போது வழியில் திருவரங்கத்துக்கு வந்தார்.
பூரி ஜகந்நாதரைப் போலவே திருவரங்கத்திலும் ஒரு ஜகந்நாதர் கோவில் இருப்பதை அறிந்த சைதன்ய மகாபிரபு,
ஜகந்நாதரை வழிபட அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஹிமாம்சு என்ற அர்ச்சகர் ஜகந்நாதப் பெருமாளுக்கு நித்திய பூஜைகளைச் செய்து வந்தார்.
அவருக்கு வடமொழியோ, ஆகமங்களோ எதுவுமே தெரியாது. அவரது தந்தை நிசாகர் தாஸ் என்பவர் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவர்.ஜயதேவரின் அஷ்டபதி பாடுவதில் வல்லவர்.
பல வருடங்கள் அதே கோயிலில் ஜகந்நாதப் பெருமாளுக்குப் பூஜை செய்து வந்தார்.அதனால் நிசாகர் தாஸுக்குப் பின் அவரது மகனான ஹிமாம்சுவையே அர்ச்சகராக நியமித்து விட்டார்கள்.
சீடர்கள் புடைசூழ சைதன்ய மகாபிரபு கோயிலுக்கு வந்தபோது, ஹிமாம்சு பக்தியுடன் அவரை வரவேற்றார்.
மகாபிரபுவின் சீடர்கள் ஹிமாம்சுவிடம் பெருமாளுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்படி கூறினார்கள்.
அர்ச்சனையைத் தொடங்கிய ஹிமாம்சு “விச்வாய நமஹ”, “விஷ்ணாய நமஹ” என்றார்.“நிறுத்துங்கள்!” என்றொரு ஒலி. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் ஹிமாம்சு.
மகாபிரபுவின் சீடர்களுள் ஒருவரான ஸ்ரீரங்கதாஸ் எழுப்பிய ஒலி என உணர்ந்தார் ஹிமாம்சு.
ஸ்ரீரங்கதாஸ் வடமொழி இலக்கண இலக்கியங்களில் பெரிய மேதை.
“ஹிமாம்சு! ‘விஷ்ணவே நமஹ’ என்று சொல்வது தான் இலக்கணப் படிச் சரி! ‘விஷ்ணாய நமஹ’ என்பது தவறு.
விபக்தியைச் சரியாகப் பயன்படுத்து!” என்றார். (வடமொழியில் வேற்றுமை உருபுக்கு விபக்தி என்று பெயர்.)
ஹிமாம்சு, அய்யா “உங்கள் அளவுக்கு நான் இலக்கணம் கற்கவில்லை. என் தந்தை எனக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அதைத்தான் தினமும் சொல்லி வருகிறேன். ஜகந்நாதனும் இதை ஏற்று எனக்கு அருள்புரிந்து கொண்டு தான் இருக்கிறார்!” என்று பணிவுடன் கூறினார்.
ஆனாலும் அங்கிருந்த பல பண்டிதர்கள் இவ்விளக்கத்தை ஏற்கவில்லை. “விபக்தியில் தவறு செய்து விட்டாய்!” என ஹிமாம்சுவை இகழ்ந்தார்கள்.
அப்போது குறுக்கிட்ட மகாபிரபு, “மேதைகள் சரியான விபக்தியுடன் அர்ச்சனை செய்வார்கள். பேதைகள் தவறான விபக்தியுடன்
அர்ச்சனை செய்வார்கள். ஆனால், இறைவனோ அந்த விபக்தியைப் பார்ப்பதில்லை, பக்தியைத் தான் பார்க்கிறான்.
உண்மையான பக்தியோடு செய்யும் அர்ச்சனையில் எத்தனை குற்றங்கள் இருந்தாலும் அதை இறைவன் ஏற்றுக் கொள்வான்!” என்றார்.
இதை ஒரு ஸ்லோகமாகவே இயற்றி விட்டார் மகாபிரபு…
“மூர்க்கோ வததி விஷ்ணாய புதோ வததி விஷ்ணவே | உபயோஸ்து பலம் துல்யம் பாவக்ராஹீ ஜநார்தந: ||”
மேலும், “இதை நானாகச் சொல்லவில்லை. திருவரங்கநாதனின் கோயிலில் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கப் புத்தகம் எனக்குக் கிடைத்தது. அதில் 104வது திருநாமமான ‘ஸர்வயோக விநிஸ்ருதஹ’ என்ற திருநாமத்தை விளக்குகையில்
பராசர பட்டரே இக்கருத்தைக் கூறியுள்ளார். அதாவது, சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட நெறிகளைப் பின்பற்றுபவர்கள்
இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்.
ஆனால், அந்த விதிகளை அறியாதவர்கள், உண்மையான பக்தியுடன் தங்களால் இயன்ற முறையில் இறைவனை வழிபட்டாலும் அவர்களுக்கும் இறைவனின் அருள் நிச்சயம் கிட்டும் என்று பட்டர் விளக்கியுள்ளார்!” என்றார் மகாபிரபு.
‘யோகம்’ என்றால் மார்க்கம் என்று பொருள். ‘ஸர்வ யோகம்’ என்றால் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத அனைத்து மார்க்கங்களையும் குறிக்கும்.
அந்த அனைத்து மார்க்கங்களாலும் அடையப்படுவதால் திருமால் ‘ஸர்வயோக விநிஸ்ருத:’ என்றழைக்கப்படுகிறார்.
“ஸர்வயோக விநிஸ்ருதாய நம:’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் பூஜைகள் அனைத்தையும் திருமால் உகந்து ஏற்றுக் கொள்வார்.