பாரதியார் கண்ணன் மீது எழுதிய துதிப் பாடல்களில் ‘வேத வானில் விளங்கி’ என்று தொடங்கும் இந்த அற்புதமான பாடல் ஏனோ அவ்வளவாக பிரபலமாகவில்லை. இப்பாடலில் ஸ்ரீ கிருஷ்ணனை பாரத நாட்டின் தேசிய தெய்வமாக, தர்மம் காக்கும் வீர நாயகனாக, கீதை உபதேசிக்கும் ஞான குருவாக பாரதி வர்ணித்திருக்கிறார். “ஸ்ரீகிருஷ்ணன் மீது ஸ்துதி” என்பதே அவர் கொடுத்த தலைப்பு. “கண்ணனை வேண்டுதல்” என்ற தலைப்புடன் பாரதியார் கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
வேத வானில் விளங்கி “அறம் செய்மின்,
சாதல் நேரினும் சத்தியம் பூணுமின்,
தீது அகற்றுமின்” என்று திசையெலாம்
மோத, நித்தம் இடித்து முழங்கியே (1)
“ஸத்யம் வத, தர்மம் சர” – உபநிஷத வாக்கியங்கள்.
உண்ணும் சாதிக்கு உறக்கமும் சாவுமே
நண்ணுறா வணம் நன்கு புரந்திடும்
எண்ணரும் புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ணமிழ்தத் தருள்மழை பாலித்தே (2)
உண்ணும் சாதி என்பது மானுடம். இந்த மானுட குலம் முழுமையும் அறியாமை எனும் உறக்கத்தில் மூழ்கி ஆன்மீக மரணத்தை அடைந்து விடாதபடிக்கு, அளவற்ற புகழுடைய கீதை என்னும் அமுதத்தை அருள்மொழியாகப் பொழிந்தவன் கண்ணன்.
எங்கள் ஆரிய பூமியெனும் பயிர்
மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்கமுற்ற துணைமுகிலே மலர்ச்
செங்கணாய் நின் பதமலர் சிந்திப்பாம். (3
)
வீரர் தெய்வதம், கர்மவிளக்கு, நற்
பாரதர் செய் தவத்தின் பயன் எனும்
தாரவிர்ந்த தடம்புயப் பார்த்தன் ஓர்
காரணம் எனக் கொண்டு கடவுள் நீ (4)
பரத வம்சத்தின் தவப்பயனாக வந்த வீரர் திருமகனாகிய பார்த்தனை ஒரு காரணமாகக் கொண்டு கடவுளாகிய கண்ணன் கீதையை உரை செய்தான். பார்த்தனை கர்மவிளக்கு என்பது அவன் செயல்திறனைக் குறித்து.
நின்னை நம்பி நிலத்திடை என்றுமே
மன்னு பாரத மாண்குலம் யாவிற்கும்
உன்னுங்காலை உயர்துணை யாகவே
சொன்ன சொல்லை உயிரிடைச் சூடுவாம். (5)
இந்த பூமியில் பாரத மாண்குலம் உன்னை நம்பியே நிலைத்திருக்கின்றது. எண்ணிய போதெல்லாம் எமக்குத் துணையாக வரும் உனது சொல், அதை எங்கள் உயிரிலே சூடுகின்றோம். அதாவது, கீதையை ஏதோ புத்தகம் என்ற அளவிலே வாசிக்காமல், உயிர்மூச்சில் நிறைப்போம்.
ஐய, கேள் இனி ஓர்சொல்; அடியர் யாம்
உய்ய நின்மொழி பற்றி ஒழுகியே
மையறும் புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையில் நின் அருள் சேர்ப்பையால் (6)
ஐயா, உன் அடியார்களாகிய நாங்கள் உன் மொழிப்படி நடந்து குற்றமற்ற வாழ்க்கை பெறுவதற்கு, நாங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் நின் அருளைச் சேர்த்திடுக.
ஒப்பிலாத உயர்வொடு, கல்வியும்,
எய்ப்பில் வீரமும், இப்புவியாட்சியும்,
தப்பிலாத தருமமும் கொண்டு, யாம்
அப்பனே நின்னடி பணிந்து உய்வமால் (7)
தப்பிலாத தருமமாம் இந்து தர்மத்தின் வலிமை கொண்டு இப்புவியாட்சியை பாரதர்களாகிய நாங்கள் உனது அருளால் அடைவோம்.
மற்று நீ இந்த வாழ்வு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்த்தருள்;
கொற்றவா நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி அழிகலேம் (8)
வேடிக்கை மனிதரைப் போலே வீழமாட்டோம்.
நின்றன் மாமரபில் வந்து, நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொற்கழல் ஆணை காண்
இன்றிங்கு எம்மை அதம்புரி; இல்லையேல்,
வென்றியும் புகழும் தரல் வேண்டுமே. (9)
கண்ணா, உன்னுடைய மாமரபிலே வந்து பிறந்து, இழிவடைந்து வாழ நாங்கள் விரும்பவில்லை. வெற்றியும் புகழும் நீ தருக என்றே வேண்டுகிறோம். உனது பொற்கழல் மீது, திருவடி மீது ஆணை.
அனைவருக்கும் இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்.
- ஜடாயு, பெங்களூர்