திருப்புகழ்க் கதைகள் பகுதி 347
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நெச்சுப் பிச்சி – திருவேங்கடம் பஞ்சாயுதங்கள்
கரும்பு தின்ன கூலி கேட்பார் உண்டா? பகவான் கிருஷ்ணனை அடையலாம் என்றால் வேண்டாமென்று சொல்லுகின்ற ஜீவன்களும் பூமியில் இருக்கிறதா? ஞானிகளும் யோக புருஷர்களும் தங்களது இறுதி லட்சியமாக கொண்டு உழைப்பது ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் பெறுவதற்கு தானே
ஆனால் எல்லோராலும் ஸ்ரீ கிருஷ்ணனை அடைய முடிகிறதா? நிச்சயமாக இல்லை அவனை அருகில் வைத்து கொண்டே அடைய முடியாதவர்கள் அடைய நினைக்காதவர்கள் எத்தனையோ பேர் உண்டு துரியோதனன் பக்கத்திலும் சகுனியின் அருகிலும் அவன் இருந்தான் ஆனால் அவனை அந்த கண்ணபெருமானை இன்னார் என்று அடையாளம் கண்டுகொள்ள கூட அவர்களால் முடிந்ததா?
அவர்கள் கிடக்கட்டும் அவர்கள் ஆசை வயப்பட்டவர்கள் இந்திரியத்திற்கும் சரிரத்திற்கும் அடிமையானவர்கள் அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றால் அதில் ஆச்சரியமில்லை ஆனால் துரோணரும் கிருபரும் அஷ்வத்தாமாவும் ஆன்மிக பெரியவர்கள் அவர்கள் கூட கண்ணன் பெருமையை அறியவில்லையே உறவின் முறையான குந்தி தேவி கூட கண்ணனிடம் உலக பொருட்களுக்காகத்தான் முறையிட்டாளே தவிர அழியாத சாஸ்வதமான பரமார்த்திக பெரும் வாழ்வை கேட்டு பெற முடியவில்லையே அது ஏன்?
கடவுளை அடைய கடவுளின் அருள் இருந்தால் தான் முடியும் அதனாலையே சிவபுராணம் அவனருளால் அவன் தாள்வணங்கி என்று போற்றி பாடுகிறது யார் வேண்டுமென்றாலும் கண்ணனின் அன்புக்காக அருகாமைக்காக ஏங்கலாம் ஆனால் கண்ணன் யாரை விரும்புகிறானோ யாரை தனது அருள் காடாட்சத்தால் அரவணைத்து கொள்கிறானோ அவனே கண்ணனின் திருவடி நிழலை பெற்றிட முடியும்
தன்னை வந்தடையும் தகுதி என்னவென்று ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் அழகாகவும் தெளிவாகவும் சொல்கிறான் அவனுடைய அந்த சொல்லுக்கு உதாரணமாக அவன் கையில் உள்ள பாஞ்சசன்யமே விளங்குகிறது பாஞ்சசன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு சங்கு தான் ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம் ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்குமாம்
வலம்புரி சங்குகள் ஆயிரக் கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்குமாம் சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சசன்ய சங்கு கிடைக்கும். சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை இசைக் கருவி. அதிலும் சுத்தமாக அச்சாரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சசன்யம் சங்கு மட்டும் தான் அந்த சங்கு கிருஷ்ணன் கையில் மட்டும் தான் இருக்கும் அது ஏன் கண்ணன் கீதையில் விளக்கம் தருகிறான்
பல்லாயிரம் பேர்களில் ஒருவன் மட்டுமே கண்ணனின் செய்தியை கேட்கிறான் இது கீதையின் வார்த்தை இந்த அமுத மொழிக்கு உதாரணமாக தெரிவது இடம்புரி சங்கு பல்லாயிரம் பேர்களில் யாரோ ஒருவன் மட்டுமே கிருஷ்ணனை பற்றி சிந்திக்கிறான் இதுவும் கீதையின் சத்திய வாசகம் இந்த வாசகத்தின் உருவக பொருள் தான் வலம்புரி சங்கு கண்ணனை பற்றி சிந்திப்பவர்களில் ஆயிரத்தில் ஒருவன் தான் அவனை அடைய முயற்சிக்கிறான் இதுவும் கீதையின் தெய்விக வாக்கு இதற்கு எடுத்தக்காட்டாக இருப்பது தான் சலஞ்சல சங்கு
பெரும் தவத்தால் மட்டுமே அடைய கூடிய மாதவனின் திருவடியை நிரந்தரமாக அடைய முயற்சிக்கும் ஆயிரத்தில் ஒருவன் தான் கோபாலனின் கோமள திருவடியை சென்றடைகிறான் இது கீதை அறிவிக்கும் தர்ம மொழி இந்த தர்ம மொழியின் ஒட்டுமொத்த வடிவமே பாஞ்சசன்யம் அப்படி பாஞ்சசன்யமாக மாறி கண்ணனின் திருவடி நிழலில் இளைப்பாருகிறவனே பிரணவ மந்திரத்தை வெளிப்படுத்த வல்லவனாகவும் பிரணவ மந்திர வடிவாகவும் ஆகிவிடுகிறான்
பிரணவம் என்ற ஓம்கார சமூத்திரத்தில் கரைந்த பிறகு துன்பம் ஏது? தோல்வி ஏது? பிறப்பு என்பதே ஏது? கண்ணன் உன்னை விரும்புகிறானா? என்னை விரும்புகிறானா? என்பது நமக்கு தெரியாது நமக்கந்த ஆராய்ச்சியும் தேவையில்லை நாம் கண்ணனை விரும்புவோம். அப்போது தீக்குள் விரலை விட்டாலும் அவனைத் தீண்டும் இன்பம் தோன்றும். இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அவன் கைகளில் பாஞ்சசன்ய சங்காக கம்பீரமாக அமர்வோம் அது மட்டும் சத்தியம்.
பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைந்து வணங்க வேண்டும். இந்தக் கதாயுதத்தை அக்னி பகவான் பகவான் கிருஷ்ணனுக்கு அளித்ததாக மகாபாரதம் சொல்கிறது.