திருவண்ணாமலையில் நாளை குபேர கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வருகிறார்.
அவர் திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அவ்வாறு பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார்.
அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும். என்ற நம்பிக்கை பக்தர்களிடம் இருக்கிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு நாளை குபேர கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப் பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.