e0aeaee0aebf-e0ae85e0aea9e0af8de0aea9e0aebee0aeaae0aebfe0aeb7.jpg" style="display: block; margin: 1em auto">
மகாபெரியவாள் விருந்து
– அண்ணா ஸ்ரீ. ரா. கணபதி –
அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம்
மனித வாழ்வில் உணவின் முக்கியத்துவத்தை நமது முன்னோர் நன்கு உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடே அன்னாபிஷேகம் போன்ற தெய்வீக நிகழ்வுகள். யாரும் பசித்திருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம், அன்னாபிஷேகத்தை தொடரும் அன்னதானமாக வெளிப் படுகிறது. ” உண்ணும் உணவில் மட்டும்தான் இது போதும் என்று மனித மனம் திருப்தியுறும். பொன், பொருள் என்று எத்துணை அளித்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாயிருக்கும் என்றே மனித மனம் எண்ணும் ” . எனவேதான் அன்னாபிஷேகம், அன்னதானம் என்று வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கோயில் என்பது மனித குல மேம்பாட்டிற்கான மைய புள்ளியாக அமைந்திருக்கிறது என்பதையே இத்தகைய வழிபாட்டு முறைகள் உணர்த்துகின்றன.
‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்ற ஆப்தர் மொழியை பெரியவாள் மேற்கோள் காட்டி, உணவிடுவதில் வித்தியாசம் பாராட்டவே கூடாது என்பார். கேரளத்தில் செருக்குன்னம் என்னும் தலத்திலுள்ள அன்னபூரணி ஆலயத்தில் சேவார்த்திகளுக்கு எல்லாம் அன்னம் படைத்த பிறகு, இரவில் அவ்வழியே செல்லும் திருடர்களுக்காக என்றே ஒரு மரத்தில் சோற்று பட்டை கட்டி வைக்கும் பழக்கம் இருப்பதாக அவர் பல உரைகளில் உவகையுடன் கூறியிருக்கிறார். எதிரெதிர் கட்சிகளான பாண்டவ படை, கௌரவ படை இரண்டிற்குமே உதியன் சேரலாதன் என்ற சேர மன்னன் உணவு அனுப்பி பெருஞ்சோற்று சேரலாதன் என்றே பெயர் எடுத்ததாக சங்க இலக்கியங்களில் காண்கிறது என்று வெகுவாக ரசித்து கூறுவார்.
சிவபெருமானுக்கு வேடன் கண்ணப்பன் படையல் இட்டான். ராமபிரானுக்கு வேடன் குகன் அமுது செய்வித்தான். நம் மஹா பெரியவாளோ வேடர்களுக்கு தாமே விருந்திட்டிருக்கிறார். ஸ்ரீசைல காட்டில் வாழும் செஞ்சுக்கள் எனும் வேடர்களுக்குத்தான். போக்குவரத்து வசதிகள் மிக குறைவாக இருந்த 1934 இல் பெரியவாள் தம் பரிவாரத்துடன் நிர்மானுஷ்யமான ஸ்ரீசைல அடவிகளில் சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் செஞ்சு கோஷ்டியினர் எதிர்ப்பட்டனர். மடத்தினரை எதிரிகளாகவே கருதி முதலில் அவர்கள் வில்லையும் அம்பையும் சித்தம் செய்து கொண்டனர். ஆனால் அன்பின் மூர்த்தமான ஆசார்யபெருமானின் திவ்விய தேஜோமயமான தோற்றத்தை கண்டவுடன் அடியோடு மனம் மாறி அடி பணிந்தனர். இந்த கலியிலும் அன்புக்கும் தவத்துக்கும் உள்ள சக்தியை எடுத்தியம்பிய அசாதாரணமான சம்பவம்!
எதிர்க்க வந்தவர்கள் அப்புறம் அப்பரிவாரத்திற்கு காவலாக உடன் சென்று இரவு வேளையில் பாராக்காரர்களாக தொண்டு செய்தனர். சுமைகளையும் தூக்கி வந்தனர்.
அடுத்த முகாமில் அவர்களை பத்திரமாக சேர்த்த பின்தான் அவர்கள் விடைபெற வந்து நின்றனர்.
பெரியவாள் அவர்களுக்கு திரவிய வெகுமதி அளிக்கும்படி மானேஜரிடம் உத்தரவிட்டார்.
பணத்தை தொடமாட்டோம் என்று அவர்கள் ஒரேடியாக மறுத்து விட்டனர்.
செஞ்சு தலைவர் மானேஜரிடம் என்னவோ சொன்னான்.
அது நடக்காத காரியம் என்று அவர் கைவிரித்தது தலையாட்டினார்.
பெரியவாள் கையை சொடக்கு போட்டு மானேஜரின் கவனத்தை ஈர்த்தார். ‘அவன் என்ன கேக்கறான்? நீ என்ன முடியாதுங்கறே?’ என்று கேட்டார்.
‘அவாள்ளாம் பெரியவா முன்னாடி டான்ஸ் பண்ணி காட்டணுமாம்’ என்றாம் மானேஜர்.
‘அதை நான் பார்க்க முடியாதுன்னு நீயே சொல்லிட்டியாக்கும்! ஏன்? அது நமக்கு கௌரவ ஹானின்னு மானேஜர் -அப்படிங்கற முறையிலே உன் அபிப்ராயமாக்கும்!’. கனல் தெறிக்காமல் சாதாரணமாகத்தான் பெரியவாள் கேட்ட போதிலும் மானேஜரின் தலை கவிழ்ந்தது.
மாபெரும் நாட்டிய கலைஞர்களும் ஆடி பார்க்க மறுத்த சங்கர மடாதிபர் காட்டுக்குடிகள் நாட்டியமாடிக்காட்ட அனுமதி வழங்கினார். ஒரே நிபந்தனை. ஆடவர்களில் யாவரும் ஆடலாம் ஆயினும் பெண்களில் வயது வந்தவர்கள் ஆடக்கூடாது என்று.
‘ஸ்வாமிக்கான ஆட்டம், வீரத்துக்கான ஆட்டம், விளையாட்டு ஆட்டம்ன்னு பல தினுசு இருக்குமே. இப்போ என்ன ஆட போறீங்க?’ என்று பெரியவாள் கேட்டார்.
இன்று எழுதும்போதும் உடல் சிலிர்க்கும் படியான மறுமொழியை அவர்கள் கூறினார்கள். ‘ரொம்ப கிட்டத்து உறவுக்காரங்க வந்தா என்ன ஆட்டம் ஆடுவோமோ அதைத்தான் ஆட போறோம்!’.
அப்படியே அந்த செஞ்சு ஆடவர்களும் சிறுமியரும் ஆட ரசிக சிரோமணியும் அதனை மகிழ்ச்சியுடன் கண்ணுற்று ஆசி நல்கினார்.
அதோடு அன்று அவர்களுக்கு அறுசுவை உண்டியும் அருளினார்.
பழமையான சிவ லிங்கம் :-
உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் ‘ஹரப்பா’ வில் உள்ளது. அதற்கு அடுத்த பழமையான சிவ லிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. அதில் இரண்டு மிகப் பழமையானவை.
ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம்.
அடுத்து, ‘குடிமல்லம்’ என்ற இடத்தில் உள்ள சிவ லிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர். இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI(Archeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகில் சிவ லிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவ லிங்கம்.
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம். உண்மை மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவ லிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை காண வருகின்றனர்.
உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும். இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்ச கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர். அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதைக் காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவ லிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
ஓம் நமசிவாய
ஐப்பசி பௌர்ணமி, அன்னாபிஷேகம் நன்னாள்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.