e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 174
கரிய மேகம் அதோ – பழநி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிமுப்பதாவது ‘கரிய மேகம் அதோ’ எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “மாதர் ஆசையில் உழலாமல், திருவடியில் வந்து சேர அருள்வாய்” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் கூறுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
கரிய மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம்
கணைகோ லோஅயில் வேலது வோவிழி ….. யிதழ்பாகோ
கமுகு தானிக ரோவளை யோகளம்
அரிய மாமல ரோதுளி ரோகரம்
கனக மேரது வோகுட மோமுலை …… மோழிதேனோ
கருணை மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரோரு நூலது வோவென
கனக மாமயில் போல்மட வாருடன் …… மிகநாடி
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
வதனின் மேலென தாவியை நீயிரு
கமல மீதினி லேவர வேயருள் …… புரிவாயே
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும்
சிவசொ ரூபம கேசுர னீடிய …… தனயோனே
சினம தாய்வரு சூரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவு மேவடி வேல்விடு …… முருகோனே
பரிவு சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலரி நாரணர்
பழைய மாயவர் மாதவ னார்திரு …… மருகோனே
பனக மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – முப்புரத்தில் வாழ்ந்தவர் எரிந்து மிகுந்த சாம்பர் ஆகுமாறும், மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து மாளுமாறும் செய்த, மங்கல வடிவினரும் பெருந்தலைவரும் ஆகிய சிவபெருமானுடைய திருப்புதல்வரே; கோபத்துடன் வந்த சூராதி அவுணர்கள் அடியுடன் அழியுமாறும், அமரர்களும், வானவரும், வாட்டமுற்ற தேவர்களும் சிறைச்சாலையிலிருந்து விடுதலை அடையுமாறும் கூர்மையான வேலாயுதத்தை விடுத்த முருகக் கடவுளே; அன்புடன் தாமரைக் கோயிலில் வீற்றிருக்கும் இலக்குமிதேவியின் தனங்களைத் தழுவுகின்றவரும், அழகும், பெருமையும் உடையவரும், பாவங்களை நீக்குபவரும், நாராயணரும், பழைமையானவரும், மாயையில் வல்லவரும், மாதவத்திற்கு உரியவரும், ஆகிய விஷ்ணுமூர்த்தியின் திருமருகரே;
பாம்பை ஆபரணமாக அணிந்தவரும், ஒளியுருவம் உடையவரும், கருணைக்கு உறைவிடமானவரும் ஆகிய உமாதேவியின் திருக்குமாரரே; பதினான்கு உலகில் வாழ்கின்ற எல்லாரும் புகழ்கின்ற அழகிய பழநி மலைமீது எழுந்தருளியிருக்கின்ற பெருமிதம் உடையவரே. மாதரைப் புகழ்ந்து கூறி, அழகிய பெண் மயில் போன்ற மாதர்களை மிகுதியாக விரும்பி மூடனாகி, வயது முதிர்ந்து ஒரு நூறு ஆண்டுக்கு மேலும் ஆன அடியேனுடைய உயிர், உமது தாமரை போன்ற திருவடிகளில் சேருமாறு தேவரீர் திருவருள் புரிதல்வேண்டும். – என்பதாகும்
இப்பாடலில் முதல் மூன்றடிகளிலும் காமுகர் பெண்களின் அவயங்களைப் புகழ்ந்து கூறுவதைப் பற்றி சுவாமிகள் கூறுகின்றார். பின்னர் வருகின்ற வயதாய் ஒரு நூறு செல்வதனில் மேல் என்ற வரியில் நூறு வயதுக்கு மேல் வாழும் ஒருவர் முருகனிடம் முறையிடும் முறையில் திருப்புகழைப் பாடியுள்ளார்.
“ஆண்டவனே! அடியேனுக்கு ஒரு நூறு வயதுக்குமேல் ஆகிவிட்டது. இனியும் இப்புவியில் வாழ்ந்து என்ன பயன்? எத்தனை காலம் வாழ்ந்தாலும் வாழ்வில் திருப்தி என்பது உண்டாவதில்லை. இந்த உடம்பு நான்கு பேர் சிறிது நேரமே சுமக்குந் தன்மையானது, கனமானது; நாலுபேர் சுமையை நானே எத்தனை நாள்கள்தான் சுமப்பேன்? வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம். நாறும் உடலை நான் எத்தனை நாள்தான் தாங்குவேன்? தளர்ச்சியும் நரையும் திரையும் வந்து வருத்துகின்றன. ஆதலால் பெருமானே! இனி மண்ணில் வாழ விரும்புகின்றேனில்லை” என்று இறைவனிடம் முறையிட வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.
எனது ஆவியை நீ இருகமல மீதினிலே வரவே அருள் புரிவாயே என்ற வரியில் – ஆன்மா எந்நாள் தொடங்கியதென்று வரையறுக்க முடியாத காலமாக, ஆணவக் கருவறையிலிருந்து வெளிப்பட்டு மாறிமாறி உடல்களை எடுத்துப் பயணம் செய்த வண்ணமாகவே இருக்கின்றது.
ஒருவன் பிரயாணம் புரிவானாயின் அதற்கு முடிவு வேண்டாமோ? சென்று சேருகின்ற இடம் ஒன்று இருக்க வேண்டாமோ? வண்டியிலோ, நடந்தோ சென்று கொண்டேயிருப்பது எத்துணைத் துன்பம்? ஓர் இடம் போய்ச் சேர்ந்தால்தானே இளைப்பாறலாம். அதுபோல் இந்த உயிரும் பன்னெடுங்காலமாக வேறு உடம்புகளாகிய வண்டிகளில் ஏறி ஏறிப் பயணம் செய்த வண்ணமாகவே இருக்கின்றது.
இதற்கு முடிவிடம்-தங்குமிடம் இறைவன் திருவடி. அதுதான் இளைப்பாறும் இடம்: இன்பம் விளைக்கின்ற நிழல். அங்கேதான் ஆனந்தத் தேனருவி இருக்கின்றது. இறைவன் திருவடி சேர்ந்தார் மீளவும் பிறந்திருந்து உழலமாட்டார்.
ஆதலால் “ஆண்டவரே! அடியனேுடைய உயிராகிய வண்டு உமது பாதமாகிய தாமரையில் ஊறுகின்ற பேரின்பமாகிய தெளிதேனை உண்டு இன்புற்றிருக்கத் திருவருள் புரிவாய்” என்று அருணையடிகள் வேண்டுகிறார். அமரர் வானவர் வாடிடு தேவர்கள் என்ற வரியில் அருணகிரியார் பயன்படுத்தும் அமரர், வானவர், தேவர், என்ற சொற்கள் பொதுவாக விண்ணுலக வாசிகளைக் குறிக்கும்.
எனினும் இதில் சிறு பிரிவுகள் உண்டு. அமரர் என்போர் அமுதம் உண்டு சாவா நிலை பெற்றவர்கள். வானவர் என்போர் புண்ணிய மிகுதியால் வானவுலகில் வாழ்பவர்கள். தேவர் என்போர் எட்டு வசுக்கள், பன்னிரு ஆதித்தர்கள், பதினொரு உருத்திரர்கள், அச்வினிகள் என்ற முப்பத்து முத்தேவர்கள்.
திருப்புகழ் கதைகள்: முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.