e0af8d-e0aeaee0aeb9e0aebee0ae9a.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 144
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அதல விதல முதல் – பழநி
மஹாசங்கல்பம் -4
ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திர ராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;
யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே; (நாம் 2020 என்ற வருடமான கிரிகோரியன் காலண்டரை இப்போது பின்பற்றுகிறோம். இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாம் ஏற்றுக் கொண்டது. ஆனால் நம் நாட்டில் மேலே சொன்ன ஆறு காலண்டர் முறைகள் இருந்திருக்கின்றன.)
ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:
மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷத்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.
கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;
மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;
அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும், மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லாப் பாவங்களையும்;
உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவர் சீதா லக்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராம சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;
சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிஹரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்; (நமக்குத் தெரிந்த அனைத்து க்ஷேத்திரங்களின் கடவுளர்களின் பெயர்களை இங்கே சொல்லிக் கொள்ளும் வழக்கம் உண்டு)
இயன்ற நியமத்தோடும் இயன்ற வகையில் இயன்ற திரவியங்களோடு தர்மசாஸ்திரங்களில் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையார் உபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.
இவ்வாறு மஹாசங்கல்பம் முடிகிறது. இந்த மஹா சங்கல்பம் சொல்லும் செய்திகள் என்ன? நாளை பார்க்கலாம்.
திருப்புகழ் கதைகள்: மஹாசங்கல்பம் -4 முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.