e0af8d-e0aeb5e0ae9ee0af8de0ae9a.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 134
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வஞ்சத்துடன் ஒரு – திருச்செந்தூர்
திருச்செந்தூர் (தொடர்ச்சி)
பிள்ளைத் தமிழ் நூல்களில் அதிகமாக உள்ளது முருகன் பிள்ளைத் தமிழ் நூல்கள் என்பது அறிஞர்களின் கூற்று. அந்த அளவுக்கு அனைவர் உள்ளங்களிலும் இடம் பெற்றிருக்கிறார் கந்தக் கடவுள். கந்தக் கடவுளுக்கு உண்டான ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் தனி இடத்தைப் பெற்றுள்ளது. திருச்செந்தூருக்கு அலைவாய், சீரலைவாய் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அலைகள் வீசும் கடற்கரை ஓரம் கோயில் கொண்டு அருள் புரியும் கந்தக் கடவுளை மிகப் பழைமையான தமிழ் நூல்கள் பலவாறு பாராட்டுகின்றன.
நோய்வாய்ப்பட்ட ஆதிசங்கரர் திருச்செந்தூர் வந்து முருகப் பெரு மானை தரிசித்து சுப்ரமண்ய புஜங்கம் என்ற துதிநூலைப் பாடி நோய் நீங்கப் பெற்றதாகப் பல நூல்கள் சொல்கின்றன. நமது காலத்திலும் திருச்செந்தூரில் முருகன் வெளிப்படுத்திய மகிமைகள் ஏராளம். உதாரணத்துக்காக அவற்றில் ஒன்று. அயல் நாட்டுக்காரர்களால் விவரிக்கப்பட்டது இது.
பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி. மதுரை, நாயக்க மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்ட காலம். அப்போது டச்சுக்கார வியாபாரிகள் திருச்செந்தூர் கோயிலில் புகுந்தார்கள். அங்கிருந்த பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட முருகப்பெருமானின் விக்கிரகத்தைப் பார்த்தார்கள். இந்த விக்கிரகத்தை ‘ஆறுமுகநயினார்’ என்பர்.
‘பளபள’ என ஒளி விட்டுப் பிரகாசித்த அதை, தங்கம் என எண்ணிக் கொள்ளை அடித்துக் கொண்டு போனார்கள். பலம் வாய்ந்த கடற்படை இல்லாததால் நாயக்க மன்னர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. பக்தர்களோ துயரத்தில் தவித்தார்கள். கொள்ளை அடிக்கப்பட்ட ஆறுமுக நயினார் விக்கிரகத்துடன் டச்சுக்காரர்கள் கப்பலில் கிளம்பினார்கள்.
சற்று தூரம் போவதற்குள்ளாக ஆறுமுக நயினார் ஆவேசத்தைக் காட்டத் தொடங்கி விட்டார். கடல் கொந்தளித்தது; கப்பல் தத்தளித்தது. ‘வைக்கக் கூடாத இடத்தில் கை வைத்து விட்டோம்!’ என்று பயந்த டச்சுக்காரர்கள், ஆறுமுக நயினார் விக்கிரகத்தை எடுத்துக் கடலில் எறிந்தார்கள். கடல் அடங்கி அமைதியானது. கப்பல் பிழைத்தது.
இந்த அற்புத நிகழ்ச்சி கி.பி. 1648இல் நடந்தது. இதைச் சொன்னவர் ஒரு டச்சுக்கார மாலுமியே. எம்.ரென்னல் என்ற பிரெஞ்சு ஆசிரியர் எழுதி, ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருந்து 1785-ல் வெளியான ‘சரித்திர இந்தியா’என்ற நூலில் இந்தத் தகவல் உள்ளது.
ஐந்து ஆண்டுகள் ஆயின. திருச்செந்தூர் கோயிலில் ஆறுமுக நயினார் விக்கிரகம் இல்லாதது, திருமலை நாயக்கரின் காரியஸ்தரான வட மலையப்ப பிள்ளைக்கு வருத்தம் அளித்தது. அவர் வேறு விக்கிரகம் செய்ய முயன்றார். அவரது கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றினார். ‘‘அன்பனே! நான் கடலுக்குள் இருக்கிறேன். நீ கடலில் சிறிது தூரம் பயணித்தால், ஓர் இடத்தில் எலுமிச்சம் பழம் மிதக்கும். அதற்கு மேலே ஆகாயத்தில் ஒரு கருடன் வட்டம் இடும். அந்த இடத்தில் நீ தண்ணீரில் இறங்கு. நான் கடலின் அடியில் இருந்து எழுந்து மேலெழும்பி உன் கையில் அகப்படுவேன்.’’ என்றார்.
கனவு கலைந்தது. ஆறுமுகக் கடவுள் ஆணையிட்டபடியே, வட மலையப்ப பிள்ளை, சிலருடன் படகில் போய்க் குறிப்பிட்ட இடத்தில் கடலில் மூழ்கினார். ஆச்சரியப்படும்படியாக முதலில் ஒரு நடராஜ விக்கிரகம் கிடைத்தது. அதன்பிறகே ஆறுமுக நயினாரின் விக்கிரகம் அகப் பட்டது. ஆறுமுக நயினாரின் அந்த அருள் வடிவம் 1653-ஆம் ஆண்டில், மறுபடியும் கோயிலில் சேர்க்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. திருச்செந்தூரில் உள்ள அந்த ஸ்வாமி விக்கிரகத்தில், கடல் மீன்கள் கொத்திய தடயங்களை இன்றும் காணலாம்.
இதன் பிறகு 1803-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவருக்கு ஆறுமுகப் பெருமான் அறிவூட்டிய அதிசயமும் நடந்தது. அப்போது திருநெல்வேலியில் கலெக்டராக இருந்தார் லூஷிங்டன் துரை. அவர் திருச்செந்தூரில் முகாமிட்டிருந்த நேரம். வசந்த மண்டபத்தில் ஆறுமுகக் கடவுளை எழுந்தருளச் செய்து, பக்தர்கள் விசிறிக் கொண்டிருந் தார்கள்.
லூஷிங்டன் துரைக்கு இகழ்ச்சி பிறந்தது. ‘‘என்ன? உங்கள் ஸ்வாமிக்கு வியர்க்கிறதோ?’’ என்று கிண்டலாகக் கேட்டார். “ஆம்!” என பதில் வந்தது. “நிரூபித்துக் காட்டுங்கள்!” எனக் கர்ஜித்தார் லூஷிங்டன் துரை.
இறைவன் மேல் இருந்த மலர் மாலைகளையெல்லாம் எடுத்து விட்டு, ஒரு துணியை ஸ்வாமி மீது போர்த்தினார்கள் அர்ச்சகர்கள். கொஞ்ச நேரத்தில் துணி முழுவதும் நனைந்தது. வியர்வை வழிந்தோட ஆரம்பித்தது. திகைப்படைந்த லூஷிங்டன் துரை, திருச்செந்தூர் இறைவனுக்கு ஏராளமான வெள்ளிப் பாத்திரங் களைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
திருப்புகழ் கதைகள்: வஞ்சத்துடன் ஒரு … (திருச்செந்தூர்) முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.