திருப்புகழ் கதைகள்: முந்து தமிழ் மாலை!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0aeaee0af81e0aea8e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 124
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முந்துதமிழ் மாலை – திருச்செந்தூர்

அருணகிரிநாதர் அருளியுள்ள தொண்ணூற்றிரண்டாவது திருப்புகழ், ‘முந்துதமிழ் மாலை’எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். “வேள்வியைக் காப்பவரே, தமிழ் மாலையை அணிபவரே, தேவர்களுக்கு உதவி செய்பவரே, சேவற் கொடி யுடையவரே, வணக்கம் புரிவாரது நேயரே, குன்றெறிந்த குமாரமூர்த்தியே, வள்ளி தேவசேனா சமேதரே, அடியார்க்கு அன்பரே, அசுரகுலகாலரே, செந்திலதிபரே, தமிழ்ப்பாக்களைப் பாடி அழிகின்ற மனிதர்கள் வாசல் தோறும் அலையாமலும், பண்டை வினை நீங்கவும், பெண்ணாசை அறவும், செம்பொன் மயில்மீது வந்தருள்வீர்”என அருணகிரிநாதர் முருகப் பெருமானை இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி …… யுழலாதே

முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு …… முனைமீதே

திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு …… நடமாடுஞ்

செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது …… வருவாயே

அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார …… முடிமேலே

அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார …… எழிலான

சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார …… எதிரான

செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார …… பெருமாளே.

இப்பாடலில் அருணகிரியார் முருகப் பெருமானை பலவிதமாகப் புகழ்ந்து போற்றுகிறார்.

அந்தண் மறை வேள்வி காவல் கார — அழகிய குளிர்ந்த சிந்தையுடையவர்களால், வேத விதிப்படிச் செய்யும் யாகங்களுக்கு, இடையூறு நேராவண்ணம் காவல்புரியும் காவல்காரரே!

செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார — செவ்வையான தமிழ்மொழியாகிய, புகழ்ப் பாக்களாலாகிய பிரபந்தங்களை, மாலையாகத் தரித்துக் கொள்பவரே!

tiruchendur-murugan
tiruchendur-murugan

அண்டர் உபகார — தேவர்களுக்கு (சூரபன்மனால் ஏற்பட்ட சிறையை நீக்கி) உபகரித்தவரே!

சேவல் கார — சேவற்கொடியைத் திருக்கரத்தில் தாங்கியவரே!
முடிமேல் அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார — சென்னியின் மேல் கரங்களைக் குவித்து வணங்குகின்ற அடியார்களுக்கு, சிநேகராக விளங்குபவரே!

குன்று உருவ ஏவும் வேலைக்கார — கிரௌஞ்ச மலையை ஊடுருவிச் சென்று பிளக்குமாறு செலுத்திய, ஞானசக்தியாகிய வேலாயுதத்தை உடையவரே!

அந்தம் வெகுவான ரூபக்கார — மிகுந்த அழகுடைய, திருமேனியைக் கொண்டவரே!

எழில் ஆன சிந்தூர மின் மேவு போகக்கார — அழகு மிகுந்த தேவயானையின் மகளாகிய தேவகுஞ்சரியம்மையார் விரும்புகின்ற சிவபோகத்தை உடையவரே!

விந்தை குற மாது வேளைக்கார — அற்புதம் அடையத்தக்க அரிய குணங்களையுடைய குறமகளாகிய வள்ளிநாயகியாருடன் பொழுதைப் போக்குபவரே!

செஞ்சொல் அடியார்கள் வாரக்கார — செவ்வையான சொற்களையுடைய அடியவர்களிடத்து அன்புடையவரே!
எதிர் ஆன செஞ் சமரை மாயும் மாயக்கார — போர்க்களத்தில் எதிர்த்து வந்த உதிரப் பெருக்கத்தால் சிவந்த அசுரர்களின் யுத்தத்தை இமைப் பொழுதில் மாயக்காரன்போல் மாய்த்தவரே!

துங்க ரண சூர சூறைக்கார — பரிசுத்தமான போர்வீரனாகிய சூரபன்மனை சண்டமாருதம் போல் அழித்தவரே!

செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார — திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் வசிக்கின்ற ஆண்மை (திடம்)யை உடையவரே!

வேள்விகாத்த முருகனுக்கு ஒரு ஆலயம் ‘ஏரிகாத்த இராமன்’ கோயில் அமைந்துள்ள மதுராந்தகம் அருகே உத்திரமேரூரில் உள்ளது. அதனைப் பற்றி நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: முந்து தமிழ் மாலை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply