சிவராத்திரி சிறப்புக் கட்டுரை: ம்ருத்யுஞ்ஜயாய நம: !

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள் ஸ்தோத்திரங்கள்
/shiva-miruthyunjayaya-deivatamil-1024x600.jpg" alt="" class="wp-image-2604"/>

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்.

ஜீவன், ஜனன மரண பரம்பரையில் அலைவது என்பது மிருத்யுவின் பிடியில் சிக்கிக் கொள்வதே. அமிர்த சொரூபனான சிவனை வழிபடுபவர்கள் இந்த மிருத்யுவின் பிடியிலிருந்து விடுபட்டு சாஸ்வத கைவல்ய நிலையை அடைவார்கள். எனவேதான் சிவனை ‘மிருத்யுஞ்ஜயன்’ என்கிறோம்.

சதாசிவன் தன் ஒவ்வோர் வடிவத்தோடும் ஒவ்வோர் பெயரோடும் அநேக திவ்ய பலன்களை அருளுகிறார்.

நீண்ட ஆயுள் என்பது ஜீவனுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. மிருத்யுவின் பிடியிலிருந்து முக்தி பெறத் தகுந்த சாதனை செய்வதற்கு ‘ஆயுள்’ முக்கியத் தேவையாக உள்ளது.

‘சரீர மாத்யம் கலு தர்ம சாதனம்’ என்ற ருஷி வாக்கில் தர்ம சாதனங்களில் முதலிடம் வகிப்பது உடலே. அது இருந்தால்தான் தவமோ, தர்மமோ செய்வதற்கு அவகாசம் இருக்கும்.
கைவல்ய சித்திக்கு இறைவன் கொடுத்த வரம் இந்த உடலும், ஆயுளும். ‘தீர்காயுரஸ்து’ என்று பெரியவர்கள் ஆசீர்வதிப்பதன் உட்பொருள் இதுவே. தீர்க்காயுள் இருந்தால்தான் கடந்த ஜென்மங்களின் சஞ்சித பாவ கர்மங்களை, இப்போதைய நற்செயல்கள் மூலம் நீக்கிக் கொண்டு, தெய்வீக நியமங்கள், ஆன்மீக சாதனைகள் வழியே ஞானம் பெற்று, இக உலகிலேயே முத்தி நிலையைப் பெற இயலும்.

இந்த ஆயுளிலேயே புண்ணியத்திற்கான முழுமையை  அடையாவிடில் மீண்டும் வரும் ஜென்மங்களில் எத்தகைய உடல்கள் கிடைக்குமோ தெரியாது.

எனவே, ஆயுளுக்கு இடையூறு ஏற்படாமலும் அகால மரணத்தின் வாயில் விழாமலும் நம்மைக் காப்பது அந்த த்ரியம்பகனே! த்ரிநேத்ரனே!

முக்காலமும் உணர்ந்த த்ரிகால தர்சியான சர்வக்ஞன் சதாசிவன். மார்க்கண்டேயனை யமனின் பாசக் கயிற்றிலிருந்து விமுக்தியடையச் செய்த மிருத்யுஞ்ஜெயனின் கதை திவ்யமானது, தெய்வீகமானது.

மிருத்யுஞ்ஜெய நாமத்தோடு உள்ள சதாசிவ மூர்த்தியை சிவ புராணம் இவ்விதம் வர்ணிக்கிறது. “எட்டு கைகளோடு உள்ள மிருத்யுஞ்ஜெயன் வெள்ளை தாமரையில் பார்வதீ சமேதராக வீற்றுள்ளார். வலப்புறம் உள்ள மேலிரண்டு கைகளால் ஒரு அமிர்த கலசத்தையும், இடது புறம் இரண்டு மேற்கரங்களால் மேலும் ஒரு அமிர்த கலசத்தையும் தாங்கி, தன் மேல் அபிஷேகம் செய்து கொண்படி, மத்தியில் உள்ள வலது, இடது கைகளில் ஒன்றில் மானையும் மற்றொரு கரத்தில் அக்ஷ மாலையையும் மீதியுள்ள இரண்டு கரங்களினால் இரண்டு அமிர்த கலசங்களை தொடை மேல் வைத்துக் கொண்டுள்ள மூர்த்தி அமிர்தத்தால் நனைந்த ஸ்வாமி. மூன்று கண்களோடு, சந்திரசேகரனாகப் பிரகாசிக்கிறான் சிவன்”.

அமிர்த கலசங்களைத் தாங்கி, சரீரமெங்கும் அமிர்தத்தால் நனைந்து விளங்குவது – மிருத்யுஞ்ஜெய தத்துவத்தை விளக்குகிறது. கையில் தாங்கிய மான், மனத்திற்கு குறியீடு. சஞ்சலத்தோடு கூடிய மனம் சிவனுக்கு ஆதீனமாக வேண்டும்.

அக்ஷமாலை வித்யைக்கும் ஞானத்திற்கும் சங்கேதம். மூன்று கண்களான சூரியன், சந்திரன், அக்னி இவை நேத்திரங்கள் மட்டுமல்லாமல் முக்காலங்களையும் தரிசிக்கும் சர்வக்ஞ சக்திக்கு அடையாளங்கள்.

சந்திரன் அமிர்த கிரணம் கொண்டவன். அவனே சிவனின் தலை மேல் உள்ள புஷ்பம். இது கூட அமிர்தத் தன்மைக்கு சங்கேதமே. சக்தியோடு சேர்ந்துள்ள சதாசிவனே அடைய வேண்டிய இலக்கு. வெண்ணிற கமலம் மலர்ந்த சுத்த ஹ்ருதயமாகிய பத்மம். இது மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் தத்துவம்.

இந்த மூர்த்தியை தியானித்து மிருத்யுஞ்ஜெயனின்  நாமத்தையும் மந்திரத்தையும் மனனம் செய்வது அமிர்த தத்துவ சித்திக்கு காரணமாகும்.

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் I
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் II

மூன்று கண்களுள்ள ஸ்வாமி த்ரியம்பகன். சுகந்தம் நிறைந்தவன். அனந்த கல்யாண குணங்களே சுகந்தங்கள். மங்களங்களின் பெட்டகமாதலால் ‘சுகந்தம்’ என்றார்கள்.
ஆரோக்கியத்தையும், ஆயுள் விருத்தியையும் அருளி, பழுத்த வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து எளிதில் விடுபடுவது போல் மிருத்யுவின் பிடியிலிருந்து உபாசகனை விடுவிக்கும் சதாசிவன் மிருத்யுஞ்ஜெயன்.

கவனக் குறைவே மிருத்யு. ஆத்மாவை அறிந்து கொள்ளாத அஞ்ஞானமே கவனக் குறைவு. அந்த அஜாக்கிரதையால்தான் கோர மிருத்யு வடிவு கொண்ட சம்சார சக்கரத்தில் அகப்பட்டுச் சுழலுதல் நிகழ்கிறது. இந்த அக்ஞான நாசமே மிருத்யுஞ்ஜெயம். 
மிருத்யு குணம் கொண்ட உலகுடன் முடி போட்டுக் கொண்ட  மோகத்தோடு கூடிய ஐக்கியமே மிருத்யு பந்தம். அதனை விலக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்வதே இந்த மந்திரத்தின் உட்பொருள். 

நமக்கு நித்தியமானது, என்றும் இருபப்து அமிர்த பந்தம். அதாவது அமிர்த சொரூபனான பரமாத்மாவோடு உறவு. அந்த நினைவிலிருந்து நாம் நீங்காமல், அமிர்தமான பரமாத்மாவோடு ஐக்கியம் பெறுவதே மோட்சம். இந்த அமிர்த பந்தம் புதிய தல்ல. என்றும் இருப்பதே.

ஆனால் அதனை அறியாமலிருப்பதே மிருத்யு பந்தம். அதனை விட்டுவிட்டு, அமிர்தனின் பந்தத்தை விடாமல் அவனோடு லயிப்பதே மிருத்யுஞ்ஜெயம். அதனை சித்தியடையச் செய்து கொள்ள வேண்டுமென்தை ‘மா அம்ருதாத்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது மந்திரம்.

ஓம் சாந்தி!

Leave a Reply