அரவு தீண்டி இறந்த பாலகன்.. அடியார் பெருமையால் எழுந்த அதிசயம்!

ஆன்மிக கட்டுரைகள்

panduranga
panduranga
panduranga

பண்டரீபுரத்தில் கமலாகர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார், சிறந்த பக்திமான்.
அவரது மனைவி சுமதி, கணவனைப் போலவே நற்பண்புகளும், பக்தியும் உள்ளவள். அவர்களுக்கு பத்மாகர் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.

அவர்கள் இருவரும் தினந்தோறும் சந்த்ரபாகா நதியில் குளித்து, பகவானை பிரார்த்தித்து, தங்கள் சக்திக்குத் தகுந்தபடி பக்தர்களுக்கு உணவு வழங்கி, பிறகு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள், அவ்வாறு குளித்துவிட்டு வரும் வழியில், நாமதேவரையும் அவருடன் சில சாதுக்களையும் கண்டனர். தங்கள் இல்லத்தில் உணவருந்துமாறு அவர்களை அழைத்தனர்.

ஆனால், நாமதேவர் கமலாகரிடம், இவ்வளவு பேருக்கு உணவிடுவது உனக்கு சிரமமாக இருக்கும், எங்கள் ஆசீர்வாதம் உனக்கு என்றும் உண்டு, கவலைப்படாதே’ என்று கூறினார்.

கமலாகரோ, ‘விட்டலனும், தாயார் ருக்மிணியும் இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை? தயவு செய்து வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்’ என்று கூறினார்.

snake
snake

சரி, நீங்கள் செல்லுங்கள், நாங்கள் நீராடிவிட்டு வருகிறோம்’ என்று நாமதேவர் சொல்லி நீராடச் சென்றார்.

கமலாகர், மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொன்னார்.

சுமதி, அக்கம்பக்கத்தாரிடம் பொருட்களைக் கடனாக வாங்கி சமையல் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
அப்போது விறகு தீர்ந்துவிட்டது. அதனால், கொல்லைப்புறத்தில் உள்ள சுள்ளிகளை எடுத்து வரும்படி தனது ஐந்து வயது மகனை அனுப்பினாள்.

சிறுவன் பத்மாகர் சுள்ளிகளை எடுக்கும் போது, அதனடியில் இருந்த பாம்பு அவனைத் தீண்டியது. சில நிமிடங்களில் அந்தக் குழந்தை இறந்தது.

ஆனால், சாதுக்களுக்கு அன்னமிடுவது பாதிக்கக்கூடாது என்று நினைத்து, அழுகையை அடக்கி, மனம் இறுகியவளாய், குழந்தையை வீட்டின் ஒரு மூலையில் கொண்டு வந்து கிடத்திவிட்டு, மீண்டும் குளித்து சமைக்க ஆரம்பித்தாள்.

சாதுக்கள் வந்ததும், கமலாகர் அவர்களை உபசாரம் செய்ய, உணவு பரிமாறினார்கள்.
நாமதேவர், ஏதோ ஒரு வித இறுக்கமான அமைதியை உணர்ந்தார்.

பின்னர் அவர், உன் குழந்தையைக் கூப்பிடு, அவனுடன் சேர்ந்து உண்கிறோம் என்றார்.

சுமதி, ‘ஸ்வாமி, அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான், இப்போதுதான் சாப்பிட்டான்’ என்றாள்.

namadevar
namadevar

குழந்தையை எழுப்பி அழைத்து வா என்றார்.

அவள், எவ்வளவு எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என்றாள்.

நாமதேவரோ, குழந்தை வராமல் நாங்கள் உண்ணமாட்டோம் என்று சொல்ல, சுமதி செய்வதறியாது வேறு வழியில்லாமல் உண்மையைச் சொன்னாள்.

உருகி நின்ற நாமதேவர், பாண்டுரங்கனை அழைத்தார்.இந்த தம்பதிகளின் வம்சம் அற்றுவிடக் கூடாது என்று பிரார்த்தித்தார்.

பாண்டுரங்கன் காதில் நாமதேவரின் குரல் விழுந்தது.‌ அதற்குள் துணி சுற்றிய பத்மாகரின் உடலை உள் சென்று தூக்கி வந்தார்கள் சிலர்.

இறந்த குழந்தையைப் புரட்டிப் பார்த்து அடியார் கூட்டம் கலங்க, நாமதேவரின் குரலுக்குச் செவி சாய்த்தான் விட்டலன்.

மஹாபக்த நாமதேவரின் அபங்கங்களில் ஒன்று

अग्निमाजिं पडे बाळू । माता धांवे कनवाळू ॥१॥
तैसा धांवे माझिया काजा । अंकिला मी दास तुझा ॥२॥
सवेंचि झेपावें पक्षिणी । पिलीं पडतांचि धरणीं ॥३॥
भुकेलें वत्स रावें । धेनु हुंबरत धांवे ॥४॥
वणवा लागलासे वनीं । पाडस चिंतित हरिणी ॥५॥
नामा म्हणे मेघा जैसा । विनवितो चातक तैसा ॥६॥

அக்னிமாஜி படே வாளூ – மாதா தாவே கனவாளூ
தைஸô தாவே மாஜியா காஜா – அங்கிலாமீ தாஸதுஜா
ஸவேசி ஜேபாவே பக்ஷணீ – பிலீபடதாசி தரணீ
புகேலே வத்ஸராவே – தேனு ஹம்பரத தாவே
வனவா லாகலாúஸ வனீ – பாடஸ சிந்தீத ஹரணீ
நாமா ம்ஹணே மேகா ஜைஸ – வினவிதோ சாதிக தைஸ

தீயில் விழுந்த மணல் போல தாய் ஓடி வருவாள்; தீயை அணைப்பதுபோல வருவாள். உன் அடிமையான எனக்காக நீ ஓடி வருவாய். கூட்டிலிருந்து நழுவி விழும் குஞ்சைப் பாய்ந்து வந்து தாய்ப் பறவை பிடிப்பதுபோல, கன்றுக் குட்டியின் குரல் கேட்டு தாய்ப்பசு ஓடி வருவதுபோல, எரியும் காட்டில் தன் குட்டியை நினைத்திடும் பெண் மானைப்போல, நீ வருவாய்! சாதகப்பட்சி மழை மேகத்தை எதிர்பார்த்திருப்பது போல உன்னை எதிர்பார்த்துள்ளேன்.
என பிராத்தனை செய்ய

குழந்தை தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் விழித்து எழுந்து ஓடி வந்தது.

சுமதியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தையை ஆரத் தழுவினாள்.

நாமதேவரை வணங்கினாள். குழந்தையுடன் சேர்ந்து சாதுக்கள் அனைவரும் உணவு உண்டார்கள். சாதுக்களும், நாமதேவரும் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தைக்கு ‘க்ருஷ்ண மந்திரம்’ உபதேசம் செய்து சென்றனர்.

ஒரு நாள் விட்டலன்,வயதான பிராம்மண வேடம் பூண்டு, சுமதியிடம், எனக்குப் பசிக்கிறது, ஏதாவது கொடு என்றான்.

அவளும் சமைத்து, அவருக்கு உணவளித்தாள்.

வெளியே சென்றிருந்த கமலாகர் வீடு திரும்பியதும், கிழவனாக வந்த விட்டலனுக்குக் கால் அமுக்கிவிட, அவர்கள் மகன் விசிறினான்.

சுமதி உணவு உண்ண அழைத்தும்கூட, கமலாகர் செல்லவில்லை.

பசியைப் பொருட்படுத்தாமல் கிழவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்.

‘யோக நித்திரையில்’ இருந்து வெகு நேரம் கழித்துக் கண்விழித்த கிழவர், நீ போய் சாப்பிடு என்றதும் அனைவரும் உண்டனர்.

அப்போது கிழவர் விட்டலனாக தரிசனம் கொடுத்து, ‘உன் பணிவிடையில் மகிழ்ந்தேன்’ என்று கூறி காட்சி கொடுத்தார்.

‘எப்போதும் உங்கள் மனதில் நீக்கமற நிலைத்திருப்பேன்’ என்றும் வரமருளினார்.

கமலாகர், தன் மனைவி, மகனுடன் பகவானை எப்போதும் துதித்தபடி சந்தோஷமாக நாட்களைக் கழித்தார்.

அரவு தீண்டி இறந்த பாலகன்.. அடியார் பெருமையால் எழுந்த அதிசயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply