e0af8d-e0ae87e0aeb0e0aebee0aeb5.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் – 108
தோலொடு மூடிய – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரிநாதர் அருளிய இந்த எழுபதாவது ‘தோலொடு மூடிய’ எனத் தொடங்கும் இந்தத் திருப்புகழ் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். இதில் அருணகிரியார் முருகா! உலகத் துன்பம் அற, திருவருள் புரிந்து மெய்ஞ்ஞான தவத்தைத் உண்டாக்கச் செய்ய மாட்டாயா? என வேண்டுகிறார். இனிப் பாடலைக் காண்போம்.
தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் …… புதிதான
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
கோவையு லாமடல் கூறிய ழுந்தித்
தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் …… கலமாருங்
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
கோளனை மானமி லாவழி நெஞ்சக்
காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ……புலையேனைக்
காரண காரிய லோகப்ர பஞ்சச்
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் …… றருளாதோ
பாலன மீதும னான்முக செம்பொற்
பாலனை மோதப ராதன பண்டப்
பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் …… றமராடிப்
பாவியி ராவண னார்தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் .கினியோனே
சீலமு லாவிய நாரதர் வந்துற்
றீதவள் வாழ்புன மாமென முந்தித்
தேமொழி பாளித கோமள இன்பக் …… கிரிதோய்வாய்
சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித்
தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
சீரலை வாய்நகர் மேவிய கந்தப் …… பெருமாளே.
இப்பாடலின் பொருளாவது – பால்போன்ற வெண்ணிறமுடைய அன்னவாகத்தின் மீது நிலைபெற்றுள்ளவனும், நான்கு முகங்களை உடையவனும், சிவந்த இலக்குமியின் குமாரனுமாகிய பிரமதேவனைப் பிரணவார்த்தஙம் கேட்டு அதனை உரைக்காது விழித்தமையால், கரங்களால் மோதித் தண்டனை புரிந்தவரே!
முன்னாளில் பெரிய வடிவத்தோடு நின்ற அநுமனது தோள்மிசை ஊர்ந்துவந்து போர் புரிந்து, பாவத்தொழிலை மேற்கொண்ட இராவணனது தலைகள் பத்தும் சிந்துமாறு அறுத்துத் தள்ளி, நல்லொழுக்கமுடைய விபீஷணர் (இலங்காபுரி அராட்சியைப் பெற்று) இன்புற்று, வாழுமாறு, மணம் பொருந்திய சீதையாகிய திருமகள், ஜயத்தால் உண்டாகிய ஜெயலட்சுமி ஆகிய இருபாவையரது தோள் புணர்ந்த திருமாமனாகிய நாராயண மூர்த்தியினது சிந்தைக்கு இனிய திருமருகரே!
ஒழுக்கத்தால் மிக்க நாரதமுனிவர் (திருத்தணிகை மாமலை) வந்தடைந்து, வள்ளிநாயகியார் வாழுகின்ற தினைப்புனம் இதுதான் என்று காட்ட, முன்னாளில், தேன் போன்ற மதுர மொழியுடையவரும், சந்தனம் அணிபவரும், இளமை உடையவரும், இன்ப மலையனையவருமாகிய வள்ளிப் பிராட்டியாரை அணைபவரே!
சேல், வாளை, வரால் முதலிய மீன்கள் நீர்ப்பெருக்கால் துள்ளியெழுந்து குலைகளோடு கூடிய கமுகு மரங்களின் மேல் தாவி விளையாடும் இன்பத்தை நல்கும் திருச்செந்திலம்பதியில் விரும்பி வாழுகின்ற கந்தக் கடவுளே! பெருமையின் மிக்கவரே!
பெண்களோடு காமலீலையில் மிகவும் ஈடுபட்டு, நிலையின்றிச் சுற்றுகின்ற பொருளைத் தேடும் பொருட்டு திசைகள் தோறும் ஓடி வருத்தம் உற்று, நூதனமான நான்மணி மாலை, கோவை, உலா, மடல் முதலிய பிரபந்தங்களை நரர்கள் மீது பாடி, அந் நரத் துதியிலேயே அழுந்திக் குற்றமுடைய மனிதர்களது வீடுகள் தோறும் சென்று அலைந்து சுழலுகின்ற கால்களை உடையவனை, வீண்பொழுது போக்குபவனை, நீதிநெறியற்ற பொய்மொழியும் கோளும் சொல்லுபவனை, பெருமையில்லாத் தீய நெறியில் நின்ற நெஞ்சத்தையுடைய கொலை உலோபம் முதலிய தீயகுண மிக்க விருதாவனை, எல்லோராலும் நிந்திக்கப்படுகின்ற புலையனை, காரண காரிய உலக வாழ்வாலாகிய துன்பங்களெல்லாம் அறவே நீங்கப் பெற்று இன்ப வாழ்வுறுமாறு விரும்பினால், குற்றமற்ற கடல்போன்ற மெய்யுணர்வுடன் கூடிய தவநிலை அடியேனுக்கு உண்டாகத் தேவரீரது திருவருள் சிறிது அருள் புரியாதோ? – என்பதாகும்
இந்தத் திருப்புகழில் அனுமனின் பெரிய தோள்கள் மீது ஏறி இராமன், இராவணனுடன் போர் புரிந்த செயலை அருணகிரியார் குறிப்பிடுகிறார். இந்தக் காட்சியை கம்பர், கம்பராமாயணத்தில், யுத்தகாண்டத்தில், முதல் போர்புரி படலத்தில் அற்புதமாக விளக்குவார்.
‘நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல் நுன்முன்
மாறு இல் பேர் அரக்கன் பொர, நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்,
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின்மேல்‘ என்றான்.
நிகரற்ற போர் புரிய வல்ல அரக்கன், விரைந்து செல்ல வல்ல ஆயிரம் குதிரைகளைக் கொண்ட தேரின் மேலிருந்து, உன் முன்னர்ப் போரிடும் போது தரையிலே நின்று நீ சண்டையிடுதல் ஒப்பற்றதொரு வெறுமைத் தன்மையை தனியாகக் காட்டி நிற்கும். எனவே ஐயனே! மென்மையானவை என்றாலும் அதனைப் பொருட்படுத்தாது என்னுடைய தோளின் மேல் நீ ஏறுவாயாக என்று அனுமன் வேண்டி நின்றான்.
இராமபிரான் என்ன செய்தார்? நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: இராவணப் போர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.