ஏறு எழுதிய நீண்ட கொடியை உடைய எம் தலைவனே!, அரசனே!, அருமை தேவனே!, அமரரும் தென்புலத்தாரும் ஞாயிறு திங்கள் தீ என்னும் முச்சுடரும் பிரமன் திருமால் உருத்திரன் என்னும் முத்தலைவரும் ஒன்பது கோள்களும் வாழ்வதற்கு உதவிசெய்வது இவ்வுலகம், செழிப்பு மிகுந்த உலகத்திற்கு மேலும் மேலும் துணையாவார் வாழ்விற் செழித்த அரசர்கள் ஆவர், தேன் பொருந்திய மணமலர்த்தார் அணிந்த அரசர்கட்குத் துணை அரசரைச் சார்ந்த குடிகளும் படையும் ஆகிய குழுவாகும், கூடிய குடிகளுக்கும், படைகளுக்கும் துணையாவது விளைந்த பயிராகும், பயிருக்குத் துணையாவது சிறப்புறப்பெய்யும் மழையாகும், வானத்தில் ஓங்கிப் பரவிப் பெய்யும் மழைக்குத் துணையாவன, இளமங்கையின் கற்பு ஒன்றும், அரசர்களின் முறைமை ஒன்றும், அந்தணரின் ஒழுக்கம் ஒன்றும், (ஆகிய) இவை மூன்றுமே என்று சிறந்த சான்றோர் செப்புவார்.
“வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே”
என்னும் விவேகசிந்தாமணியின் கருத்து இங்கு வந்துள்ளது.
அரசரும், அந்தணரும் மாதரும் ஒழுக்கந்தவறாது இருப்பின் உலகியல் ஒழுங்காக நடைபெறும்.