பஞ்சத்தால் தவித்த மக்கள்! பக்திக்கு ஓடிவந்த பாண்டுரங்கன்!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">

panduranga
panduranga
panduranga

வயல்கள் சூழ்ந்த பேதரி கிராமத்தில் அவதரித்த தவசீலர் தாமாஜி பண்டிதர். வேதம் கற்ற இவர் தர்மசிந்தனை மிக்கவராகவும் இருந்தார். ஊர் மக்கள் இவரை ஆசானாகவும் நண்பராகவும் காக்கும் கடவுளாகவும் மதித்து வாழ்ந்தனர்.

இவரது நற்குணங்களை அறிந்த அந்த நாட்டு மன்னன் தாமாஜியை மங்கள்பட் என்னும் ஊருக்கு அதிகாரியாக நியமித்தார்ன்.

பண்டிதர் மக்களிடம் பக்தி உணர்வை வளர்த்தார். ஒரு சமயம் மழை பெய்யாமல் வஞ்சித்தது. பஞ்சம் தலை விரித்தாடியது. விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் வருந்தினர்.

மக்கள் உணவின்றி வாடுவார்களே என்று வருந்திய தாமாஜி பண்டிதர் தன்னிடமிருந்த தானியங்களை வாரி வழங்கினார். இதனால் அவரது புகழ் ஊரெங்கும் பரவியது.

பண்டரிபுரத்தைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் தாமாஜியின் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்ற தாமாஜி விருந்து படைத்தார்.

இலையில் உணவைப் பார்த்ததும் அந்தணரின் கண்கள் கலங்கி விட்டன. “ சுவாமி தங்களின் கண்கள் ஏன் கலங்குகின்றன?” என்று பரிவுடன் கேட்டார் தாமாஜி.

அதற்கு அந்த அந்தணர் ‘ ஐயா நான் சாப்பிட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. பண்டரிபுரத்தில் என் மனைவி மக்களும் பட்டினியாக கிடக்கிறார்கள் அவர்களை நினைத்ததும் என் கண்கள் கலங்கி விட்டன” என்றார்.

‘சுவாமி கலங்க வேண்டாம். சாப்பிடுங்கள் என்று ஆசுவாசப்படுத்தினார் தாமாஜி. பின் 60 மூட்டை நெல்லை வண்டியில் ஏற்றி தகுந்த பணியாட்களுடன் பண்டரிபுரத்திற்கு அனுப்பி வைத்தார். மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் அந்தணர். இந்த செய்தி ஊருக்குள் பரவியதும் நிலைமை விபரீதமானது.

இங்கே நாம் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் பண்டரிபுரத்தில் இருந்த வந்த அந்தணருக்கு தாமாஜி பண்டிதர் நெல் மூட்டைகளை அனுப்பியிருக்கிறாரே இதை அனுமதிக்கக் கூடாது.

தடுத்து நிறுத்த வேண்டும் என்று கிராமத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி 60 நெல் மூட்டைகளையும் பறித்து சென்றனர். அந்தணர் புலம்பியபடியே தாமாஜியை காண வந்தார். செய்தி அறிந்த தாமாஜி “ சுவாமி உங்கள் குடும்பம் உண்பது போல பல குடும்பங்கள் உண்ண வேண்டும் என்பது என் அப்பன் பாண்டுரங்கனின் விருப்பமாக இருக்கிறது போனால் போகிறது விடுங்கள் உடனே ஊருக்குச் சென்று மனைவி மக்களை இங்கு அழைத்து வாருங்கள் என்று கூறி செலவுக்கு சில வராகன்களை கொடுத்து அனுப்பினார்.

இதையறிந்த மக்கள் அனைவரும் மங்கள்பட் நோக்கி படையெடுத்தனர். எலும்பும் தோலுமாக வாடி இருந்த மக்களைக் கண்ட தாமாஜியின் மனம் வருந்தியது.

களஞ்சியம் முழுவதையும் காலி செய்து விட்டோமே இந்த மக்களுக்கு எப்படி உதவுவது என்று எண்ணி அழுதார். அந்த நேரத்தில் தாமாஜி பண்டிதரின் மனைவி சுவாமி அரசாங்கத்திற்கு வரியாக செலுத்த வேண்டிய நெல் குவிந்து கிடக்கிறதே அதை கடனாக எடுத்துக்கொண்டு அடுத்த ஆண்டு விளைச்சல் வந்ததும் அரசுக்கு செலுத்தி விடலாமே என்று யோசனை சொன்னாள்.

துள்ளி எழுந்த தாமாஜி பண்டிதர் நிறைந்த மனதுடன் மக்களுக்கு வாரி வழங்கினார். இந்த விஷயம் மன்னனின் காதில் விழுந்தது.

தன்னிடம் அனுமதி பெறாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து விட்டதை எண்ணி கோபம் கொண்டான். தாமாஜியை கைது செய்ய உத்தரவிட்டான்.

காவலர்கள் கை விலங்கிட்டு அழைத்து வந்தனர். வழியில் பண்டரிபுரம் கோயில் வந்தது. காவலர்களின் அனுமதியுடன் கோவிலுக்கு சென்றார் தாமாஜி பண்டிதர்.

பாண்டுரங்கா மக்களுக்கு அளித்தது எல்லாம் உனக்கு நீயே அளித்துக்கொண்டது என்று தத்துவம் பேசுகிறாய். ஆனால் நீ சொன்னதுபோல் செய்தால் தண்டனைக் கிடைக்கச் செய்கிறாய். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறாயே நீ அருள் செய்தால் மழைபொழிந்து நாடு செழிக்க எவ்வளவு காலம் ஆகும்.

பாண்டுரங்கா…
பஞ்சத்தை உண்டாக்கி மக்களை ஏன் வாடச் செய்கிறாய்? உனக்கு மட்டும் இங்கே படையல் ஒழுங்காக நடக்கிறதே இது நியாயமா என்று கேட்டார். இந்த நேரத்தில் அரசவையில் மன்னன் இருந்தபோது கரிய நிறத்துடன் காண்போரை வசப்படுத்தும் கண்களுடன் ஒரு வாலிபன் வந்தான்.

தலையில் முண்டாசு முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டியிருந்தான். அரசே நான் தலையார் தாமாஜி பண்டிதர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி நெல்லுக்குரிய தொகையான எண்பத்து நாலு லட்சம் வராகன்களை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதைப் பெற்றுக்கொண்டு ரசீது தாருங்கள் என்றான்.

தாமாஜி கைது செய்யப்பட்டு இன்னும் சிறிது நேரத்தில் அரசவைக்கு கொண்டு வர இருக்கும் நிலையில் இப்படி ஒருவன் வந்து நிற்கிறானே என்று மன்னன் திகைத்தான்.

இதற்குள் அந்த இளைஞன் தன் கையில் இருந்த மூட்டையை பிரித்து காசுகளைக் கொட்டினான் கொட்ட கொட்ட பணம் விழுந்துகொண்டே இருந்தது. புத்தம் புது பொன் நாணயங்களாக அவை இருந்தன.

மன்னன் வியப்பில் ஆழ்ந்தான். இந்த சிறு மூட்டையில் இவ்வளவு நாணயங்கள் எப்படி இருந்தன என்று மெய் சிலிர்த்தான். இளைஞனை உற்றுப்பார்த்தான். தலையாரி உண்மையாக சொல் நீ யார் உனக்கு எந்த ஊரு? என்று கேட்டான்.

இளைஞன் அரசே நான் ஒரு அனாதை எனக்கென்று ஒரு பெயர் இல்லை ஊரார் என்னை ஆயிரம் பெயர் சொல்லி அழைப்பார்கள் யார் என்னை பிரியமாக அழைக்கிறார்களோ அவ்ர்களிடமே தங்கி விடுவேன். நீங்கள் சீக்கிரம் ரசீது கொடுங்கள் நேரமானால் பண்டிதர் கோபித்துக்கொள்வார் என்றான்.

ரசீதை பெற்றுக்கொண்ட அவன் அங்கிருந்து புறப்பட்டான். அப்போது அரசவைக்கு தாமாஜி பண்டிதர் காவலர்களால் இழுத்து வரப்பட்டார். அவரைக் கட்டியணைத்த அரசன் பண்டிதரே என்னை மன்னித்து விடுங்கள்..

இப்போது தான் தாங்கள் அனுப்பி வைத்த பணம் வந்து சேர்ந்தது. அறியாமல் உங்களைக் கைது செய்து விட்டேன். பணத்தை கொடுத்து அனுப்பியது பற்றி முன்கூட்டியே ஏன் தகவல் சொல்லவில்லை காவலர்களிடமாவது விஷயத்தை சொல்லியிருக்கலாமே என்றார்.

இதற்கு பண்டிதர் நான் பணமே கொடுத்து அனுப்பவில்லையே உங்களிடம் யார் கொடுத்தது என்று கேட்டார். இதன் பிறகு வந்தவர் சாட்சாத் பாண்டுரங்கன் என்பதை இருவரும் புரிந்து கொண்டனர். தாமாஜியால் தனக்கும் கடவுள் தரிசனம் கிடைத்ததை எண்ணி மன்னன் மகிழ்ந்தான்.

இதன் பிறகு தாமாஜி அரசுப்பணியை உதறிவிட்டு பண்டரிபுரத்திலேயே தங்கியிருந்து பாண்டுரங்கன் வழிபாட்டில் வாழ்நாளைக் கழித்தார்.

பஞ்சத்தால் தவித்த மக்கள்! பக்திக்கு ஓடிவந்த பாண்டுரங்கன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply