e0af8d-e0ae95e0aea9e0ae95e0aeae.jpg" style="display: block; margin: 1em auto">

திருப்புகழ் கதைகள் பகுதி 34
கனகம் திரள்கின்ற (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
திருப்பரங்குன்ற திருத்தலத்துத் திருப்புகழான இந்தத் திருப்புகழில் – “மேருவைச் செண்டாலெறிந்தவரே! விநாயகரது சகோதரரே! பன்னகசயனரது மருகரே! திரிபுரங்கள் தீயெழ நகைத்த சிவபெருமானது திருக்குமாரரே! அண்டங்கள் நிறைந்த அவுணரை யழித்த அண்ணலே! திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய தேவதேவரே! பல துன்பங்களால் உழன்று கலங்கிய சிறியேனது பாவங்கள் இன்றே அழிந்துபோக, எதிர்த் தோன்றி இன்னருள் புரிவீராக” என அருணகிரியார் பாடுகிறார். இதோ பாடல்
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு …… கதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு …… முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்புக டைந்தப ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் …… மருகோனே
பலதுன்பம்உழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்றுக ழிந்திட வந்தருள் …… புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் …… புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட …… வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ……பெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி
உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள் …… பெருமாளே.
இந்தப் பாடலில் முதல் பத்தியில்
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு …… கதியோனே
என்ற வரிகளில் மதுரை மன்னன் உக்கிர குமாரப் பாண்டியனின் வரலாறு சொல்லப்படுகிறது. முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒருவர் முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு உக்கிரப் குமாரராகத் தோன்றினார். இதனை உணராதார் முருகப் பெருமானே உக்கிரப் குமாரராகத் தோன்றினாரெனக் கூறி இடர்ப்படுவார். முருகவேள் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்பதை நம் அருணகிரியார், “பெம்மான் முருகன் பிறவான் இறவான்” என்று கந்தரநுபூதியில் கூறியுள்ளார்.

சுப்ரமண்ய சாரூபம் பெற்றோர் பலர். இவ்வாறு சாருபம் பெற்ற அபர சுப்ரமணிய மூர்த்திகளில் ஒருவரே திருஞானசம்பந்தராக வந்தார். இதை கூர்த்தமதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருட் பரஞ்சுடர் வடிவேலண்ணலே திருஞானசம்பந்தராகவும் உக்கிரகுமாரராகவும் பிறந்தாரென எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் யாதுயாது உண்டோ அவையனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான் பிறப்பிலி என்பதை வேதாகமங்களால் நுணுகி ஆராய்ந்து அறியவேண்டும்.
முத்தி நால்வகை
சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். அதாவது சாலோகம் என்பது இறைவனின் உலகம். சிவனார் மனங்குளிரப் பூசைகள் செய்தால் சிவலோகப் பிராப்தி அடையலாம். ஆனால் குறித்த காலத்தில் மீண்டும் பிறக்க வேண்டும். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை.
பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம். திருமந்திரம், ஐந்தாம் தந்திரத்தில் திருமூலர் சாலோக சாமீபங்களைப் பற்றிப் பேசுகிறார். பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாசம் அருளான தாகும்இச் சாமீபம் பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே.
சாலோகம் என்பது ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது. சாமீபம் என்பதோ ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதத்தின் அடியில் வாழும் பேறு பெறுவது. சாரூபம் என்பது ஈசனின் வடிவே தாமும் எய்தி வாழ்வது. சாயுச்சியம் என்பது ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவைத நிலை. சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்பர். உக்கிரப்பெருவழுதி அத்தகைய சாரூப மூர்த்தங்களில் ஒருவர்.
அவருடைய வரலாற்றினை நாளைக் காணலாம்
திருப்புகழ் கதைகள்: கனகம் திரள்கின்ற…! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.