e0af8d-e0ae89e0aeaee0af88e0aeaf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 80
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கமலமாதுடன் – திருச்செந்தூர்
உமையம்மையின் பல வடிவங்கள் – 1
அருணகிரிநாதர் அருளியுள்ள நாற்பத்தியோராவது திருப்புகழான கமல மாதுடன் எனத் தொடங்கும் இத்திருப்புகழ திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். முருகா இனியநாத சிலம்பு புலம்பிடும் திருவடித் தாமரையை எனக்குத் தந்தருள்வீர் என அருணகிரியார் வேண்டும் திருப்புகழ்.
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
சொலவொ ணாதம டந்தையர் சந்த
களப சீதள கொங்கையில் அங்கையில் ……இருபோதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்தசு கந்தரு
கரிய ஓதியில் இந்துமு கந்தனில் …… மருளாதே
அமல மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் …… அருள்தானே
அறியு மாறுபெ றும்படி அன்பினின்
இனிய நாதசி லம்புபு லம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய …… அடிதாராய்
குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி …… எமதாயி
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
குமர மூஷிக முந்திய ஐங்கர …… கணராயன்
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக ஜானன விம்பனொர் அம்புலி
மவுலி யானுறு சிந்தையு கந்தருள் …… இளையோனே
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை …… பெருமாளே.
இந்தத் திருப்புகழிலே அருணகிரியார், – என்றும் இளமையாக இருக்கும் கன்னிப் பெண்ணும் துர்க்கையும், அடியவர்களது பயத்தை அகற்றுபவளும், ஆன்மாக்களுக்கு இன்பத்தை வழங்குபவளும், பொன்னிறத்தை உடையவளும், நீல நிறத்தை உடையவளும், பராத்பரியும்…
உலக மாதாவும், சுத்தமாயையும், யோகினி என்னும் தேவதையாக இருப்பவளும், பாவிகளுக்குப் பயத்தை உண்டு பண்ணுபவளும், குண்டலி சத்தியும், ஆன்மாக்களாகிய எங்களுடைய அன்னையும், குறைவு இல்லாதவளும், உமாதேவியும், சொர்க்கலோகத்தை நல்குபவளும், முடிவு இல்லாதவளும், பலவகைப்பட்ட சிவாகமங்களால் துதிக்கப்படுகின்ற கட்டழகு உடையவளுமாகிய பார்வதி அம்மையார் பெற்றருளிய குமாரரும்…
பெருச்சாளியின் மீது எழுந்தருளி வருபவரும், ஐந்து திருக்கரங்களை உடையவரும், கணங்களுக்குத் தலைவரும், எமது விநாயக மூர்த்தியும், விஷத்தைக் கக்கும் பாம்பை ஆபரணமாகத் தரித்துக் கொண்டவரும், யானை முகத்தையுடையவரும், ஒப்பற்ற பிறைச் சந்திரனைத் தரித்த சடா மவுலியை யுடையவருமாகிய மகா கணபதி மிகவும் மகிழ்ந்தருளுகின்ற இளைய பிள்ளையாரே.
நீர்வளத்தால் வாழையும், மஞ்சளும், இஞ்சியும் இடைவிடாது நெருங்கி யுள்ளதும், மகிமையும் இலக்குமிகரமும் உடையதுமாகிய திருச்செந்தூர் என்னும் பெரிய தலத்தில் அடியார் பொருட்டு வந்து எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே.
மகளிரிடத்தில் மயக்கத்தை அடையாமல், மலம் நீங்கிய பரிசுத்தமான சிந்தையை அடைந்து, பரந்து உள்ளதும் அழிவு அற்றதுமாகிய அறம் பொருள் இன்பம் என்ற புருஷார்த்தங்களை அடைய அறிவு நூல்களை ஓதியுணர்ந்து (ஆசைக் கட்டுகளினின்றும்) நீங்கிய பின், தேவரீர் திருவருளைத் தானாகவே அறியும் வழியை அடையுமாறு இனிய நாதங்களோடு கூடிய சிலம்புகள் ஒலிப்பதும், சிவந்த நிறத்தோடு கூடியதும், பொன்னாலாகிய கிண்கிணிகளை அணிந்து உள்ளதும் ஆகிய திருவடிகளை அடியேனுக்கு அன்புடன் தந்தருள்வீர். – என வேண்டுகிறார்.
இந்தத் திருப்புகழில் அருணகிரியார் உமையம்மையின் பல வடிவங்களை
குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி …… எமதாயி
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
எனப் பாடுகிறார். இந்த உமையம்மையின் வடிவங்களை நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: உமையம்மையின் வடிவங்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.