திருப்புகழ் கதைகள் (125): முந்துதமிழ் மாலை – திருச்செந்தூர்!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-125-e0aeaee0af81e0aea8e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 125
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முந்துதமிழ் மாலை – திருச்செந்தூர்
இளையனார் வேலூர்

“அந்தண் மறை வேள்வி காவல் கார” என்ற வரியில் உள்ள வேள்வி காத்த முருகனின் கதையைச் சொல்லும் முருகன் கோவில் ஒன்று உள்ளது. சென்னையிலிருந்து ஜி.எஸ்.டி ரோடு வழியாகச் செல்லும்போது மாமண்டூர் தாண்டிய பின்னர் வலதுபுறம் உத்திரமேரூர் சாலையில் திரும்பவேண்டும். உத்திரமேரூரில் ஸ்ரீசுந்தர வைகுந்த பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. அருகில் உள்ள இளையனார் வேலூரிலிருந்து உள்கிராமச் சாலையில் திரும்பிச் சென்றால் அங்கிருந்து உத்திரமேரூருக்கு எளிதாகச் செல்ல முடியும். உத்திரமேரூர் பஸ் ஸ்டாண்டை அடைந்ததுமே ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாளின் கோவில் கோபுரம் நம் கண்ணில் படுகிறது. இக்கோவிலின் வலது புறத்தில் பாலசுப்ரமணிய சுவாமியின் கோவில் அமைந்துள்ளது.

8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் ஜெயம் கொண்ட சோழனால் கட்டப் பெற்றது. மிகவும் பரந்த வெளியும், விசாலமான வெளிப் பிரகாரமும் கோவிலின் பழமைக்குச் சான்று. ஆஜானுபாகுவாக சுமார் 6 அடி உயரத்தில் பாலசுப்ரமணியர் காட்சி அளிக்கிறார். அவருக்கு ஐராவதம் வாகனமாக உள்ளது சிறப்பு. வினாயகர், சிவன், ஸ்கந்தர், நவக்கிரகங்களின் சன்னிதிகள் உள்ளன. முனிவர்களின் தவத்துக்கு இடையூறாக இருந்த அசுரர்களைக் கொன்று, முனிவர்களைக் காத்தருள வேலாகி நின்ற வேலவனின் புகழ்பாடும் திருத்தலம் இளையனார் வேலூர்.

thirupugazhkathaikal 1
thirupugazhkathaikal 1

இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார்.

அப்போது மலையன், மாகறன் என்ற அழியா வரம்பெற்ற அசுரர்கள் அவரது வேள்விக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து காசிப முனிவர், இறைவன் கடம்பநாதரிடம் முறையிட, அவருக்குக் காட்சி தந்த இறைவன், “கவலை வேண்டாம். எனது இளைய மகன் முருகனை அனுப்பி, அவ்விரு அசுரர்களையும் அழித்து, உங்களது வேள்விக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வேன்”என்று ஆசி கூறினார்.

கூடவே முருகனுக்கு துணையாக வாட் படையையும் அனுப்புவதாக கூறினார். தந்தை ஈசனின் கட்டளையை சிரமேற்று, காசிப முனிவரின் வேள்வியைக் காக்க வேலவன் விரைந்து புறப்பட்டான். முதலில் மலையனையும், மாகறனையும் அழைத்து நல்லுபதேசம் செய்தார். ஆனால் கர்வம் தலைக்கேறிய அவர்கள் முருகனின் நல்லுரையை ஏற்கவில்லை.

வெகுண்டெழுந்த முருகப்பெருமான் தன் கையிலிருந்த வேலாயுதத்தை நோக்கி, நீ காசிபமுனிவரது வேள்விச் சாலையின் கீழ் திசையில் ஊன்றி நின்று, அசுரர்களைக் கட்டுப்படுத்து” என்று கூறி, ஏவினார். அவ்வண்ணமே வேலாயுதமும் சென்று ஊன்றி நின்று அசுரர்களைக் கட்டுப்படுத்தியது. கடைசியில் முருகப்பெருமான் சிவபெருமான் தந்தருளிய வாளால் மாகறனின் தலையை வீழ்த்தினார்.

தம்பி மாகறன் இறந்தமைக்கு வருந்திய மலையன், சூரபதுமனின் தாயாகிய மாயையை தியானித்து மாயா மந்திரத்தைப் பெற்று முருகப்பெருமானை எதிர்த்துப் போரிட்டான். அவைகளையெல்லாம் முருகப் பெருமான் தவிடு பொடியாக்கி சிவபெருமான் தந்த வாளால் மலையனையும் வெட்டி வீழ்த்தினார். மலையன் தலை விழுந்த இடம் மலையன் களம் என்றழைக்கப்பட்டு தற்போது மலையான்குளம் என்றழைக்கப்படுகிறது. மாகறன் அழிக்கப்பட்ட இடம் இன்று மாகறல் என்று அழைக்கப்படுகிறது.

thiruchendur 7thday2
thiruchendur 7thday2

இரு அசுரர்களையும் அழித்த முருகப்பெருமான் தனது படை பரிவாரங்களுடன் கடம்பர் கோயிலுக்குச் சென்று, திருக்கடம்பநாதருக்கு எல்லா அமைப்புகளும் கொண்ட ஆலயம் அமைத்தார். அப்போது அவர் முன்பாக சிவபெருமான் தோன்றி, “குமாரனே. எமது ஆணையை ஏற்று காசிப முனிவரது நல் தவத்தைக் காத்திட நீ உனது வேல் ஊன்றிய இந்த இடத்தில் உன்னைக் காணவரும் பக்தர்களுக்கு நல்வரங்களைத் தந்திட வேண்டும்” என்று கூறி அருளினார். அவ்வாறே முருகப்பெருமான் திருக்கோயில் கொண்ட தலம்தான் “இளையனார் வேலூர்” என்ற இடத்தில் அமைந்திருக்கும் பாலசுப்ரமணியர் திருக்கோயிலாகும்.

இக்கோயிலில் வடகிழக்கு மூலையில் முருகப்பெருமான் தரிசிக்கும் வண்ணமாக சிவலிங்க மூர்த்தியாக கடம்பநாதர் எழுந்தருளியுள்ளார். வடமேற்கு மூலையில் தனி சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலாவடிவில் தரிசிக்கலாம். கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளையுடைய இராஜ கோபுரமும், வெளிப்பிரகாரத்தில் இடதுபுறம் ஊஞ்சல் மண்டபமும், வலதுபுறத்தில் வசந்த மண்டபமும் அமைந்திருக்க நடுவில் பலிபீடம், கொடிமரமும், அதைத் தாண்டி இந்திரன் தந்த ஐராவதத்தை முருகன் வாகனமாக்கிக் கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக யானை வாகனமும் அமைந்திருக்கின்றன. உள்மண்டப முகப்பில் முருகனின் அழகிய திருக்கல்யாணக் காட்சி மனதைக் கவர்கின்றது.

02 Sep05 Tiruchendur murugan
02 Sep05 Tiruchendur murugan

கருவறைக்கு முன்பாக உள்ள தரிசன மண்டபத்தின் உட்புறச் சுவரில் பித்தளைத் தகடுகள் பதிக்கப்பெற்று அதில் சித்தர்கள் பலரின் வடிவை அமைத்திருக்கிறார்கள். சுவரின் மேற்புறத்தில் முருகப்பெருமான் மலையன், மாகறனுடன் போரிடும் காட்சிகளை வரைந்து வைத்துள்ளார்கள். கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமம் தாங்கி, சுமார் ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார்.

அவர் முன்புறம் வேலும், சேவற் கொடியும் இருக்க பாதத்தினருகே மயில்வாகனம் உள்ளது. முருகனுக்கு இடப்புறமாக கஜவள்ளி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. முருகனின் இருதுணைவியரும் இணைந்து ஒரு வடிவாகி கஜவள்ளி அம்மனாக இங்கே சன்னதிகொண்டுள்ளாள் என்று கூறுகின்றனர். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக முருகன் தலத்தில் சன்னதி கொண்டிருப்பது ஆபூர்வக் காட்சியாகும்.

tiruchendur-murugan
tiruchendur-murugan

இந்த வேல் அமைந்திருக்கும் இடத்தில் தான் முருகன், காசிப முனிவரின் தவத்துக்கு இடையூறு நேராத வண்ணம் காத்தருள வேலை நிறுவியதாகக் கூறப்படுகிறது. இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாதது. இத்தலத்தில் சிவாலயங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரைப் போலன்றி சுமித்திரை சண்டிகேஸ்வர் சன்னதி அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. உள் பிராகாரத்தில் ஏகாம்பரநாதர், பெருதண்டமுடையார், திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர் சன்னதிகளுடன், சந்தான கணபதி சன்னதியும், வேல், வேலாயுத மூர்த்தியாக காட்சி தரும் சன்னதியும் உள்ளன.

திருப்புகழ் கதைகள் (125): முந்துதமிழ் மாலை – திருச்செந்தூர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply