e0aebee0aeb2e0af8d-e0ae89e0aeafe0aebfe0aeb0e0af8de0aeaae0af86.jpg" style="display: block; margin: 1em auto">
பிரதிஷ்டானபுரம் எனும் அருமையான கிராமம். நமஸ்கார சாமியார் விட்டலனின் பக்தன், மெதுவாக நடந்து போய்க்கொண்டிருந்தார் . வயதானவர். எதிரே யார் வந்தாலும் சிறு குழந்தையானாலும் உடனே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்பவர்.
அவர் ஒரு சந்நியாசி, யாரைப் பார்த்தாலும் கடவுள் விட்டலனாகவே பார்ப்பவர் என்பதால் தான் அவ்வாறு நமஸ்காரம் செய்கிறது வழக்கம் அதனால் ஊரில் அவருக்கு நமஸ்கார சாமியார் என்று பெயர்.
ஒருநாள் ஒரு தெருவில் அவர் போய்க் கொண்டிருந்தார். வழியில் சில சிறுவர்கள் அவரைப் பார்த்தார்கள். வழக்கம்போல் அவர்களுக்கும் நமஸ்காரம். அவரைப்பார்த்து அந்த சிறுவர்கள் சிரித்தார்கள். அவரோ கவலைப்படவே இல்லை.
அங்கே தெரு ஓரமாக ஒரு கழுதை இறந்து போய்க் கிடந்தது. சிறுவர்கள் சும்மா இருப்பார்களா? “தாத்தா!!, அதோ ஒரு கழுதை இறந்து கிடக்கிறதே அதற்கும் நமஸ்காரம் பண்ணுவீர்களா?” என கேட்டனர் சிறுவர்கள்
சிறுவர்கள் சொன்னதை விட்டலனின் ஆக்ஞையாக எடுத்துக்கொண்டார் நமஸ்கார சாமியார்.
உடனே உயிரிழந்த அந்த கழுதையின் உடல் அருகே சென்று அதைச் சுற்றிவந்து நமஸ்காரம் செய்தார் சாமியார் என்ன ஆச்சர்யம்?
இறந்து கிடந்த அந்த கழுதை தலையைத் தூக்கியது சுற்றிமுற்றும் பார்த்தது. எழுந்தது சந்தோஷமாக கர்ண கடூரமாக கத்தியது. ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது .
சிறுவர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம். ஆச்சர்யம், பயமும் கூட அவர்கள் ஓடிப்போய் ஊரில் விஷயம் சொன்னார்கள்.
இந்த செய்தி ஏக்நாத்தின் ஆஸ்ரமத்திற்கும் எட்டியது. ஒரு சிஷ்யன் இதை அவரிடம் சொன்னபோது அவர் யோசித்தார். எழுந்தார். விடு விடென்று நடந்தார். வெகு நேரம் கழித்து ஒரு தெருவில் நமஸ்கார சாமியார் ஏக்நாத் கண்ணில் தென்பட்டார்.
அவரை வணங்கினார் ஏக்நாத். சாமியாரோ ஏக்நாத்துக்கு வழக்கம்போல சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
சுவாமி, நீங்கள் ஒரு இறந்த கழுதைக்கு உயிரூட்டினதாக கேள்விப்பட்டேனே. அதன் தாத்பர்யம் என்ன?
இறந்த கழுதைக்கு உயிரூட்டினேனா ? நானா?
ஆமாம் சுவாமி. இன்று காலை..
தெரியவில்லை. நான் நமஸ்காரம் செய்திருக்கலாம். அதனால் கழுதைக்கு உயிர் வந்ததற்கு நான் காரணம் இல்லை.” எல்லாம் விட்டலனின் செயல் என்றார்
சுவாமி, இதைக் கேள்விப் பட்டவுடன் எனக்கென்ன தோன்றியது என்றால், இனிமேல் நிறைய பேர் உங்களைச் சுற்றிக்கொண்டு இறந்துபோன தங்களுக்கு வேண்டியவர்களின் உடலை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு கேட்கப்போகிறார்களே? அப்போது என்ன செய்வீர்கள்?” என்கிற ஒரு கவலை வந்துவிட்டது.
.
சுவாமி, சந்நியாசிகள் உலக பந்தங்களை எல்லாம் அறுத்தெறிந்து வாழ்பவர்கள். தாங்கள் ஒரு உதாரண புருஷர். விட்டலனை எதிலும், எவரிலும், காண்பவர். நீங்கள் உலக சம்பந்தமான வாழ்வு சாவுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்.
எனவே முக்தி அடையும் நேரம் உங்களுக்கு சித்தியாகிவிட்டது பாண்டுரங்கனைச் சேரும் நேரம் வந்துவிட்டது.
நீங்கள் மகாசமாதி அடைவது உசிதம். நீங்களே உங்கள் மகாசமாதி ஆகும் இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.”
அவர் மனம் மகாசமாதி அடைய வெகு ஆர்வமாக இருந்ததால், அங்கேயே அப்போதே மகா சமாதி அடைந்து விட்டார் நமஸ்கார சாமியார்.
விட்டலன் அருளால் உயிர்பெற்ற கழுதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.