e0af8d-e0aeaae0aeb0e0aea9e0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 118
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
படர்புவியின் – திருச்செந்தூர்
பரணியும் கோவையும்
இதன் பின்னர் அருணகிரியார் இப்பாடலில் ‘பரணி, கோவை, கலம்பகம்’ பற்றிக் கூறுகிறார். தொல்காப்பியத்தின் புறத்திணையியல் பரணி இலக்கியத்தின் வேராக அமைகிறது. போர்க்களத்தைப் பாடும் பொருண்மை உடைய இலக்கிய வகையே பரணி எனப்படும்.
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி – (இலக்கண விளக்கப் பாட்டியல்)
போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை யார் வெல்கிறாரோ அந்த மாவீரனுக்கு வகுப்பது பரணி ஆகும் என இலக்கண விளக்கப் பாட்டியல் பரணிக்கு இலக்கணம் வகுக்கிறது. பரணி என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயராகும். பரணித் திருநாளில் கொண்டாடும் போர் வெற்றி விழாவைச் சிறப்பித்துப் பாடும் இலக்கிய வகையே பரணி எனப்பட்டது. பரணி நட்சத்திரத்தின் போது கொற்றவைக்குக் கூழ் இட்டு விழாக் கொண்டாடுவர். கொற்றவைக்கு உரிய நாள் பரணி ஆகும்.
கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காடு பாடியது, பேய் முறைப்பாடு, காளிக்குக் கூளி கூறியது, களம் பாடியது, வாழ்த்து எனப் பல்வேறு வகை உறுப்புகளைப் பெற்று, பரணி இலக்கியம் அமைகிறது. பரணி இலக்கிய வகையானது பொதுவாகத் தோற்றான் பெயரில் அமைந்து வெற்றி பெற்றோனின் சிறப்பினைக் கூறுவதாக அமைகிறது.
செயங்கொண்டார் கி.பி.12ஆம் நூற்றாண்டில் எழுதியுள்ள ‘கலிங்கத்துப் பரணி’, ஒட்டக்கூத்தர் கி.பி.12ஆம் நூற்றாண்டில் எழுதிய ‘தக்கயாகப் பரணி’, தத்துவராயர் கி.பி.16ஆம் நூற்றாண்டில் படைத்த ‘அஞ்ஞவதைப் பரணி’, வைத்தியநாத தேசிகர் கி.பி.17ஆம் நூற்றாண்டில் எழுதிய ‘மோகவதைப் பரணி’, அவரே எழுதியுள்ள மற்றொரு பரணியான ‘பாசவதைப் பரணி’, மு.பி.பாலசுப்பிரமணியன் கி.பி. 20ஆம் நூற்றாண்டில் எழுதிய ‘சீனத்துப் பரணி’, வாணிதாசன் எழுதிய ‘போர்ப்பரணி’ ஆகியவை பரணி இலக்கியத்துக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி எனும் நூலே காலத்தால் முற்பட்டது. குலோத்துங்க சோழனின் படைத் தலைவனாகிய கருணாகரத் தொண்டைமான், அனந்தவர்ம சோடகங்கன் ஆண்டு வந்த கலிங்க நாட்டை வென்றதைக் கலிங்கத்துப் பரணி பாடுகின்றது.
வல்லிசை வண்ணத்தால் போர்க்களக் காட்சியைக் கண்முன் கொண்டு நிறுத்துகிறார் செயங்கொண்டார்.
எடும்எடும் எடும்என எடுத்ததோர்
இகலொலி கடலொலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடும் எனுமொலி மிகைக்கவே.
எனும் பேரொலியோடு நாற்படையும் நடை போடுகிறது. சோழர் படை மிகப்பெரிய படை என்பதை உணர்த்த ,படை பெருத்ததால் பார் சிறுத்ததோ என வினவுகிறார் செயங்கொண்டார். அவர்,
பார் சிறுத்தலின் படைபெருத்ததோ
படை பெருத்தலின் பார் சிறுத்ததோ? என்று பாடினார்.
தட்சனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே நிலவிய பகைமையையும் தட்சனை அவர் ஒடுக்கியமையையும், ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி பாடினார்.
‘கோவை’ என்ற சிற்றிலக்கிய வகை இருவகைப்பட்ட முதற்பொருளும், பதினான்கு வகைப்பட்ட கருப்பொருளும், பத்துவகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்திக், கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப்பகுதியவாம் களவொழுக்கத்தினையுங் கற்பொழுக்கத்தினையுங் கூறுதலே எல்லையாகக் கட்டளைக் கலித்துறையால், நானூறுபாடல்களால், திணை முதலாகத் துறையீறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது.
திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை, வெங்கைக் கோவை, கோடீச்சுரக் கோவை, ஒருதுறைக் கோவை, அம்பிகாபதிக் கோவை, திருவாரூர்க் கோவை, காழிக் கோவை முதலியவை கோவை இலக்கியத்தின் சிறந்த எடுத்துக் காட்டுகளாம்.
திருப்புகழ் கதைகள்: பரனியும் கோவையும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.