ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகின்றது. இந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அபரா’ என்றால் அபாரமான',
அளவில்லாத’ என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்துவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள்.
அபார ஏகாதசியின் மகிமையைக் கூறுகிறது அம்பரீஷன் எனும் மன்னனின் கதை.
`அம்பரீஷன் எனும் மன்னன் திருமாலின் அதிதீவிர பக்தன். வருடம் முழுவதும் தவறாமல் ஏகாதசி விரதமிருந்து விஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்து அருளைப் பெற்று வந்தான். ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதமிருந்து, அதை முடிக்கும் தறுவாயில் துர்வாச முனிவர் அங்கு வந்துவிட்டார்.
விரத வேளையிலும் துர்வாச முனிவரை ஓடிச்சென்று வரவேற்ற மன்னன், அவரை உணவருந்த அழைத்தான். முனிவரும் அம்பரீஷனின் வேண்டுகோளை ஏற்று நதியில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
ஆனால், நீராடப்போன துர்வாச முனிவர் குறித்த நேரத்துக்குள் திரும்பி வரவில்லை. யாருக்கும் காத்திருக்காத காலம் அப்போது துர்வாச முனிவருக்கும் காத்திருக்காமல் விரைந்து ஓடியது. விரத காலம் முடிவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து, உணவு எடுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் விரதபங்கம் ஏற்பட்டுவிடும்.
இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஏகாதசி விரதத்தின் பலனைப் பெறமுடியாமல் போய்விடும். இதனால், மன்னன் திருமாலை நினைத்தபடியே துளசி தீர்த்தத்தை அருந்தி தனது உபவாசத்தை முடித்துக்கொண்டார்.
இதைத் தனது ஞான சக்தியால் அறிந்த துர்வாசர், கடும் கோபம் கொண்டு தனது தலைமுடியைப் பிடுங்கி ஆயுதமாக்கி எறிந்தார். அது பூதமாக மாறி மன்னனைத் துரத்தத் தொடங்கியது.
திருமால், தன் பக்தனைக் காக்க சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம் துர்வாச முனிவர் ஏவிய பூதத்தை அழித்துவிட்டு அவரையும் விரட்டியது. வேறு வழியில்லாமல் திருமாலிடமே சரணடைந்தார் துர்வாசர்.
திருமால், “என் பக்தனுக்கே நான் அடிமை. என் பக்தன் உன்னை மன்னித்தால் நானும் உன்னை மன்னிக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். துர்வாசரும் அம்பரீஷனிடம் சென்று மன்னிப்பு கேட்டார். மன்னன் சக்கரத்தாழ்வாரிடம் வேண்டி அவரைக் காப்பாற்றினான்.
அன்றைய தினத்தில் அம்பரீஷன் மேற்கொண்ட விரதம்தான் அபரா ஏகாதசி விரதம். அந்த விரதம் அவனைக் காப்பாற்றியதுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்து சேர்த்தது.
துர்வாச முனிவரும் அபரா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, திருமால் பக்தனைத் தாக்க பூதத்தை ஏவிய தனது பாவத்தைப் போக்கிக்கொண்டார்.
இந்த அபரா ஏகாதசி விரதமானது பாவங்களை அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். மங்காத பேரும், புகழும் கிடைக்கும்.
மரதத்தை வெட்டி வீழ்த்தும் கூர்மையான ஆயுதத்தைப் போன்று நம் பாவங்களையும் வெட்டி வீழ்த்தும் தன்மை வாய்ந்தது.
அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து திருமாலை திரிவிக்ரமர் (உலகளந்த திருக்கோலம்) உருவத்தில் வழிபட்டால் எல்லா வளங்களும் வந்து சேரும். அவர்கள் இல்லங்களைத் தேடிவந்து லட்சுமி தேவி அருள்புரிவாள். லட்சுமி கடாட்சம் நிறையும், செல்வ வளமும் சேரும்..
அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்தனை செய்தல் போன்றவற்றால் விளையும் பாபங்கள் நீங்குகிறது.
முறையற்ற காம செயல்கள், பொய் சாட்சி, பொய் பேசுதல், போலி சாஸ்திரங்களை உருவாக்குதல், போலி வைத்தியனாக தொழில் செய்து மக்களை ஏமாற்றுதல் போன்றவற்றால் ஏற்படும் பாவங்களை இந்த அபரா ஏகாதசி விரதத்தை மகாவிஷ்ணுவை மனமொன்றி அனுஷ்டிப்பதால் அந்த விஷ்ணுவின் மகிமையால் நீங்கப் பெறுகிறது.
சத்திரிய தர்மத்திற்கு விரோதமாக, போர் புரியாமல் போர்க் களத்திலிருந்து தப்பி ஓடும் சத்திரியர் நரகத்திற்கு செல்வர் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் சத்திரியர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலையும், சொர்க்கம் செல்லும் புண்ணியமும் அளிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது.
குருவிடமிருந்து கல்வி கற்றபின், குருவை நிந்தப்பவர் நிச்சயம் நரகத்தை அடைவார் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம், அத்தகைய குரு நிந்தனை செய்த பாவங்களை நீக்குவதுடன், நன்மைகளை உண்டாக்குகிறது.
கொலைப்பாவம், பெரியோர் சாபம், பொய் சாட்சி போன்ற பாவங்கள் விலகுவதோடு புண்ணியமும் சேரும்.
சிவராத்திரியன்று காசி விஸ்வநாதர் தரிசனம், மாசி மகத்தன்று திரிவேணி சங்கமத்தில் நீராடுதல், அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற தலங்களுக்கு யாத்திரை செய்த புண்ணியம் இந்த விரதம் மேற்கொண்டால் உண்டாகும்.
மூன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கார்த்திகை மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை, அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறலாம்.
குரு பகவான் கோட்சாரத்தில் சிம்ம ராசியில் இருக்கும் காலத்தில் கோமதி நதியில் நீராடுதல், கும்ப ராசியில் இருக்கும் காலத்தில் ஸ்ரீ கேதார்நாத் பகவானை தரிசித்தல் மற்றும் பத்ரிகா ஆஸ்ரமத்தில் தங்குதல், மற்றும் சூரிய, சந்திர கிரகண காலத்தில் குருசேத்திரம் பூமியில் புண்ணிய நீராடுதல் ஆகியவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணிய பலனுக்கு நிகரான புண்ணிய பலன்களை அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்க பெறுவார்கள்.
மேலும் இந்த அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார கஷ்ட நிலையை போக்கி, செல்வச் செழிப்பை உண்டாகும். வளமையான வாழ்க்கை அமையப்பெறுவர்கள்
இன்று தவறாமல் கடைபிடிக்கவும்! அபார பலனைத்தரும் ஏகாதசி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.