திருப்புகழ்க் கதைகள் பகுதி 306
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தருவர் இவர் – சுவாமி மலை
தூது செல்ல ஒரு தோழனில்லையா?
“தருவார் இவர் ஆகுமென்றூ” எனத் தொடங்கும் இந்தச் சுவாமிமலைத் திருப்புகழில் அருணகிரியார் தூது போன்ற தமிழிலக்கிய வகையினைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஒருவன் தன் கருத்தை அறிவிக்கத் தூது விடுவான். தமிழில் 96 பிரபந்த வகைகள் உண்டு. அவற்றுள் தூது என்பதும் ஒன்று.
ஆயுந்தொறுந் தொறும் இன்பந் தரும் மொழியாகிய நம்முடைய செந்தமிழ் மொழியில் நவில்தொறும் நயந்தரும் சிறு நூல்கள் எண்ணிறந்தன உள்ளன. அவை பல்வேறு வகையினவாய் அமைந்துள்ளன. அவற்றையெல்லாம் ஒருவாறு தொகுத்து வகுத்த நம் முன்னோர் ‘தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள்’ என்று அறுதியிட்டனர். ஆனால் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சிற்றிலக்கியங்களும் இக்நாளில் வழங்குகின்றன.
பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழந்தமிழ இலக்கணமாகிய தொல்காப்பியம் சிற்றிலக்கியங்கட்கெல்லாம் அடிப்படையான ஓர் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் இக்காலத்தைப் போலப் பல்வகைச் சிற்றிலக்கியங்கள் வழக்காற்றில் இருக்கவில்லை. எனினும் காலப்போக்கில் அவை தோன்றுதற்குரிய விதியை அவர் வகுத்துள்ளார். அது அவர் எதிர் காலத்தை நுனித்து நோக்கும் பழுத்த மதிநலம் உடையவர் என்பதைப் புலப்படுத்துவதாகும். அவர் தொடர்நிலைச் செய்யுட்கு உரியனவாக எட்டு வனப்புகளைச் சொல்லியுள்ளார். அவற்றுள் விருந்து என்பதும் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பியவாறு தனித்தும், பல பாக்கள் தொடர்ந்தும் வரப் புதியதாகப் பாடப்பெறுவதே விருந்தெனப்படும். இப்பொது விதியே அந்தாதித் தொடையில் அமைந்து வரும் கலம்பகம், அந்தாதி, மாலை போன்ற சிறு நூல்கட்கும், அந்தாதியாய் வாராத உலா, தூது, கோவை, பிள்ளைத்தமிழ், பரணி முதலான பைந்தமிழ்ச் சிற்றிலக்கியங்கட்கும் இலக்கணமாயிற்று. இவ்விதியை ஆதாரமாகக் கொண்டே மதி நலஞ் சான்ற புலவர் பெருமக்கள் பல துறைச் சிறு நூல்களைப் படைத்துள்ளனர். அத்தகையவற்றுள் ஒன்றாக விளங்குவதே ‘துாது’ என்னும் பிரபந்தமாகும். பாட்டியல் நூல்கள்
இத்தகைய பிரபந்தங்கட்கு இலக்கணம் கூறும் நூல்கள் தமிழிற் பலவுள்ளன. பன்னிரு பாட்டியல், வெண்பாப்பாட்டியல், நவநீதப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கண விளக்கப்பாட்டியல் போன்ற நூல்கள் அவ்வகையைச் சார்ந்தனவாகும். இப்பாட்டியல் நூல்களில் ஒன்றிலேனும் ‘பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு’ என்னும் வரையறை உரைக்கப்படவில்லை. இவற்றில் கூறப்படாத சிறு நூல்கள் பல இன்று வழக்கில் இருக்கின்றன. இன்னும் காலத்திற்கேற்பப் பல்வேறு இலக்கியங்கள், எழுதலுங் கூடும். எனவே, சிற்றிலக்கியங்கள் இத்துணை வகைப்படுமென அறுதியிட்டு உரைத்தல் இயலாது.
தூது நூல்கள்
இலக்கிய வளஞ்சான்ற இனிமைத் தமிழ் மொழிக்கண் நூற்றுக் கணக்கான தூதுப் பிரபந்தங்கள் உள்ளன. நெஞ்சுவிடு தூது, தமிழ்விடு தூது, நெல்விடு தூது, துகில்விடு தூது, மான்விடு தூது, வண்டுவிடு தூது, விறலிவிடு தூது, காக்கைவிடு தூது, பணவிடு தூது, புகையிலைவிடு தூது, வனசவிடு தூது. முதலிய பல தூது நூல்கள் ஓதற்கினிய உறு சுவையுடையனவாய் உள்ளன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது உமாபதி சிவனார் இயற்றிய நெஞ்சுவிடு தூதாகும்.
பிற நூல்களில் தூது
இவையன்றித் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றில் குயில், கிளி, புறா, நாரை, நாகணவாய்ப்புள், அன்றில், வண்டு முதலியவற்றைத் தூது விடுத்ததாக அமைந்த பாக்கள் பல காணப்படுகின்றன. கலம்பகம், அந்தாதி முதலிய சிற்றிலக்கியங்களிலும் அவ்வாறு அமைந்த பாக்களைப் பார்க்கலாம்.
தூதின் இலக்கணம்
ஒருவர், தம்முடைய கருத்தைக் காதலர், நண்பர். பகைவர் ஆகியோரில் யாரேனும் ஒருவர்க்கு மற்றொருவர் வாயிலாகக் கூறி விடுப்பதே துாதாகும். மக்களில் ஒருவரையோ, அன்றி விலங்கு, பறவை முதலான அஃறிணைப் பொருள்களில் ஒன்றனையோ தூது விடுப்பதாகக் கலிவெண்பாவால் யாக்கப்பெறும் இயல்பினதே இந்நூலாகும். தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் தம் நூலில் தூது என்னும் அதிகாரத்தில் தூது இலக்கணத்தைத் திறம்பட வகுத்தோதியுள்ளார்.
அஃறிணைத்தூதுப் பொருட்கள்
ஒருவர் உரைக்கும் கருத்தை அறிந்து மற்றொருவர்க்கு உணர்த்தும் ஆற்றல் வாய்ந்த மக்களையே தூதாக விடுத்தல் இயல்பாயினும் அத்தகைய ஆற்றலில்லாத அஃறிணைப் பொருள்களையும் தூது விடுக்கும் முறை, இலக்கிய வழக்கில் காணப்படுகின்றது. இவ்வழக்குப் பற்றியே,
“கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயங்குந போலவும் இயற்றுந போலவும்
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே”
என்று பின்னாளில் நன்னூலார் இலக்கணம் வகுக்க வேண்டியதாயிற்று.