e0aeb5e0af81e0ae95e0af8be0aeb2e0af8d.png" style="display: block; margin: 1em auto">
ஒரு நாள் சந்திரபாகா நதிக்கரையில் ராகாவின் மகளும், நாமதேவரின் மகளும் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையில் தங்கள் தந்தையில் யார் பண்டரிநாதனின் சிறந்த பக்தர் என்ற விவாதம் ஏற்பட்டது.
வீட்டிற்குச் சென்ற நாமதேவரின் மகள் நடந்ததை தன் தந்தையிடம் கூறி, அவரிடம் முறையிட்டாள். யார் சிறந்த பக்தர் என்பதை பாண்டுரங்கன் தான் முடிவுசெய்வார் மகளே, நீ ஒன்றும் வருத்தப்படாதே என்று கூறினார். ஆனால் அவர் மகளோ சமாதானமாகவில்லை..
மகள் விடாமல் வற்புறுத்தவே, நாமதேவர் பாண்டுரங்கனிடமே சென்று யார் சிறந்த பக்தர்? என்று கேட்டுவிடமென்று முடிவு செய்தார்.
பொதுவாகவே பாண்டுரங்க விட்டலன் மீது நாமதேவர் அநேக பக்திப்பாடல்களைப் பாடித் துதிப்பவர். அதனால் மகிழ்ந்து பாண்டுரங்கன் அவரோடு நேரில் பேசுவார்.
“பாண்டுரங்கா, விட்டலா… நீயே சொல்.. ராகாகும்பர் என்னை விட சிறந்த பக்தனா என்று வினவினார். ராக்காவிற்கு இணையான ஒரு பக்தன் இல்லை என்று பாண்டுரங்கன் கூறினார்.
அப்படியானால் எனக்கு அதை காட்டி அருளுங்கள் என்று நாமதேவர் கூறினார். நானும் ருக்மிணியும் ராகாவின் இருப்பிடம் செல்கிறோம். நீ அங்கு வந்துவிடு என்று பாண்டுரங்கன் கூறிவிட்டு மறைந்தார்.
காட்டில் ராக்காகும்பர் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போதும் அவர் விடாமல் விட்டலா, விட்டலா என்று நாமஜபம் செய்து கொண்டிருந்தார். நாமதேவா! நாம் வந்ததையும் கவனிக்காமல் ராகாகும்பர் எவ்வளவு பக்தியுடன் ஜபம் செய்கிறான் பார்த்தாயா என்றார்.
நம் சுவாமியின் திருநாமத்தைச் சொல்ல எல்லாவற்றையும் துறந்து விட்ட ராகாவின் பக்தியை மேலும் பார் என்று நாமதேவரிடம் ருக்மிணிதேவி கூறினார்.
அப்பொழுது ருக்மிணிதேவி தனது விலைமதிக்க முடியாத மாணிக்க வளையலை ஒரு சுள்ளியின் கீழே மறைத்து வைத்தார். பிறகு மூவருமாக ஒரு மரத்தின் மறைவில் இருந்து கொண்டு ராகாவைக் கவனித்தார்கள். ராகா அந்த சுள்ளியை எடுத்தார்.
அதனடியில் மாணிக்க வளையலைச் சாதாரணப் பொருளைப் பார்ப்பது போல் பார்த்தார். தன் மனைவி பாக்காவிடம், பாக்கா! இதோ ஒரு மாணிக்க கங்கணம். உனக்கு இது வேண்டுமா? என்றார். வேண்டாம் சுவாமி, பாண்டுரங்கன் நம்மை சோதிக்கிறார். இனி நாம் இங்கிருக்க வேண்டாம் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
நாமதேவரே! ராக்காவின் பற்றற்ற தன்மையைப் பார்த்தீர்களா? ராகாகும்பர் கல்வியறிவு இல்லாதவர்தான். இருந்தாலும் சுயநலமற்ற ஆழ்ந்த பக்தி கொண்டவர்.
சுவாமி! என் அறியாமையினால் ராகாவைத் தவறாக நினைத்து விட்டேன். மன்னித்தருளப் பிரார்த்திக்கிறேன் என்று நாமதேவர் கூறினார். பாண்டுரங்க விட்டலன், ருக்மிணித் தாயார் சகிதமாக ராகாவின் முன் பிரத்தியட்சமானார்.
ராகா, பாக்கா, அவர்களது மகளும் மெய்சிலிர்த்தனர். ராகா! நீங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பக்தியில் குறைந்தவர்கள் இல்லை.
ஐயனே! இந்த எளியேனையும் ஒரு பொருட்டாக மதித்துக் காட்சி அருளினீர்களே! எனது தவம் வீண் போகவில்லை என்று ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல என ஜபம் செய்து கொண்டே இருந்தார்.
பக்தியின் அளவுகோல்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.