e0af8d-e0aea4e0aebee0aeaee0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 75
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்பமும் துன்பமும் – திருச்செந்தூர்
தாமிரபரணி ஆறு!
அருணகிரிநாதர் அருளியுள்ள முப்பத்திநான்காவது திருப்புகழான இந்தத் திருப்புகழ் திருச்செந்தூர் தலத்தில் வீற்றிருக்கும் செந்திலாண்டவன் புகழ்பாடும் திருப்புகழாகும். இப்பாடலில் செந்தில் கடவுளே, இந்த ஊன உடம்பை நீக்கி, ஞான உடம்பைத் தந்து உமது தொண்டனாக்கி அருள் புரியவேண்டும் என அருணகிரியார் வேண்டுகிறார். இனிப் பாடலைக் காணலாம்
இன்பமுந் துன்பமுஞ் சந்ததங் கொண்டுசென்
றிங்குமங் குஞ்சுழன் – றிடுமாயத்
துன்பவெண் கும்பியங் கந்தவிர்ந் துன்பெருந்
தொண்டனென் றுய்ந்துளங் – களியேனோ
புன்குருந் துந்தியுஞ் சந்தனஞ் சிந்திமுன்
பொங்கிவெண் சங்கெறிந் – தலைவீசும்
தன்பொருந் தந்பசும் பொன்சொரிந் தெங்கணுந்
தந்திடுஞ் செந்திலம் – பெருமாளே.
பாடலின் பொருளாவது – மென்மையான குருந்த மரத்தைத் தள்ளியும், அழகிய சந்தன மரத்தைக் கரையில் ஒதுக்கியும், முன்னால் வெள்ளம் பொங்கியும், வெண்மையான சங்குகளை இரு கரைகளில் வீசியும், அலைகள் வீசுகின்ற தனக்கே உரிய பொருநை நதியானது, பசுமை நிறைத்துடன் கூடிய பொன் துகளைக் கரைகளில் சொரிந்து எல்லாப் பகுதிகளிலும் வழங்குகின்றதாய்ச் சூழ்ந்துள்ள, அழகிய திருச்செந்தூரில் எழுந்தருளி உள்ள பெருமிதம் உடையவரே.
இன்ப துன்பங்களை நாள்தோறும் உடையவனாகி, இங்கும் அங்குமாகப் போய் திரிகின்ற, மாயத்தை விளைவிக்கின்ற துன்பத்துடன் கூடியதும், வயிற்றுடன் கூடியதும் ஆகிய இந்த உடம்பை விடுத்து, தேவரீருடைய பெரிய தொண்டன் என்று அடியேன் அமைந்து உய்வு பெற்று, உள்ளம் மகிழ்ச்சி அடைய மாட்டேனோ? – என்பதாகும்.
இந்தத் திருப்புகழின் கடைசி இரண்டு பத்திகளில் தாமிரபரணி நதியின் பெருமை சொல்லப்படுகிறது.
புன்குருந் துந்தியுஞ் சந்தனஞ் சிந்திமுன்
பொங்கிவெண் சங்கெறிந் – தலைவீசும்
தன்பொருந் தந்பசும் பொன்சொரிந் தெங்கணுந்
தந்திடுஞ் செந்திலம் – பெருமாளே.
பொருநை நதி திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடுகின்ற புண்ணிய நதி. அந்நதியின் அண்மையில் விளங்குவது திருச்செந்தூர். பொருநை என்ற இந்நதி, இப்போது தாம்பிரபரணி என்று வழங்கப்படுகிறது. இந்நதி பொதியமலையில் பிறக்கின்றது. சந்தனம் முதலிய அரிய மரங்களைத் தன் வெள்ளத்தில் சுமந்து வந்து கரைகளில் ஒதுக்குகின்றது. சங்கினங்களை அலைக் கரங்களால் இருமருங்கிலும் எறிகின்ற வள்ளன்மை உடையது.
சந்தமார் அகிலொடு சாதித் தேக்கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில்…
என்ற திருஞானசம்பந்தருடைய தேவாரத்தை இப் பாடல் நினைவுபடுத்துகிறது. இந்த நதிக்கே இத்தகைய வள்ளன்மை இருக்குமானால், அதன் கரையில் உள்ள மக்களும் அத்தகைய வள்ளன்மை உடையவர்தானே. தருமகுணம் நிறைந்தவர்களே மனிதரில் தலையாயவர்கள். இத்தகைய தருமகுண சீலர்கள் நிறைந்த தலம் திருச்செந்தூர் எனவும் குறிப்பிடுகின்றார்.
ஆதிகாலத்தில் மனிதன் ஆற்றுப்படுகைகளையே தனது இருப்பிடமாக ஆக்கிக்கொண்டான். காரணம், அது தான் அவனது வாழ்வாதாரத்துக்கு வேண்டிய அனைத்தையும் வாரி வழங்கியது. மேலும் ஆற்றுப்படுகைகளின் பரந்த பூமி, அவனுக்கு பாதுகாப்பானதாகவும் இருந்தது. தாமிரபரணி ஆறும் அத்தகைய சிறந்த நாகரிகத்தைக் கொண்ட்து. இவ்வாறு பல்வேறு சிறப்புகளைத் தாங்கி, பல ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
வற்றாத ஜீவநதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடம், மேற்குத் தொடர்ச்சி மலை மீது முண்டந்துறை காட்டுப்பகுதியில் உள்ள பூங்குளம் என்ற இடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1,725 மீட்டர் உயரத்தில் பிறந்து, வங்கக்கடலை நோக்கி ஓடி வரும் தாமிரபரணி, வழியில் பல நதிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு வந்து, புன்னக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமம் ஆகிறது.
அடர்ந்த காட்டுப் பகுதியான முண்டந்துறையில் பல ஆயிரம் ஆண்டுகளாக படிந்து இருக்கும் செடி, கொடிகளின் எச்சங்களும், மண்ணும் பஞ்சு மெத்தை போன்ற அமைப்பைப் பெற்று இருப்பதால், தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அங்கு பெய்யும் மழை நீர் முழுவதையும் அந்த இடம் அப்படியே உள்வாங்கிக் கொண்டு, மழை அல்லாத காலங்களில் சிறுகச் சிறுக வெளிவிடும் போது அது, தாமிரபரணி ஆறாக உருவாகி, ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடி வருகிறது.
திருப்புகழ் கதைகள்: தாமிரபரணி ஆறு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.