e0af8d-e0aeaee0aea9e0af8de0aeae.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 46
வடத்தை மிஞ்சிய (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
வள்ளியின் கணவரே, திருமாலின் மருமகனே, சூரசங்காரம் புரிந்த வீரமூர்த்தியே, பராசலமேவிய அதாவது திருப்பரங்குன்றமேவிய பரமனே! மாதர் மையல் தீர்ந்து உமது திருவடிசேர அருள்புரிவீர் என்று இந்தப் பாடலில் அருணிகிரியார் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வேண்டுகிறார். இனிப் பாடலைக் காண்போம்.
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு …… மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் …… தொடுபோதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு ……தொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ …… துளதோதான்
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு …… வடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி …… மருகோனே
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு …… முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய …… பெருமாளே.
வள்ளிப் பிராட்டியாரை மருவுகின்ற வடிவேலரே! ஒலிக்கின்ற கரிய கடலின் கண் அணைகட்டி இலங்கைக்குத் தலைவனாகிய இராவணனை அசுரர் குழாத்துடன் மாண்டு ஒழிய ஒரு கணை விடுத்த திருமாலின் திருமகரே!
உறுதியுடன் போரில் எதிர்த்த சூராதி யவுணர்கள் பொடிபட்டு அழகிய கூர்மையான வேலாயுதத்தை விடுத்த சரவணபவமூர்த்தியே! ஆற்றல் மிக்க குகப் பெருமானே! குருபரரே! என்று (வேதாகமங்கள்) புகழும்படி எழுந்தருளி வருகின்ற முருகக் கடவுளே!
செழுமை மிக்க சோலைகள் தோறும் திகழ்கின்ற வளைந்த சங்குகள்ஈன்ற முத்துக்கள் மிகுந்ததும் பெருமையால் உயர்ந்ததும் வளமை நிறைந்ததுமாகியத் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!
பொது மகளிரது பொய் மனத்தை மெய்யென்று நம்பி மயங்கும் சிறியவனைத் தேவரீரது நறுமணங் கமழ்கின்ற திருவடியைச் சார்ந்து அருள் பெருமாறு திருவுள்ளத்தில் நினைத்தருளும் தன்மை உண்டாகுமோ?
மன்மதன் அம்பு
ஐங்கணை மதனன் என்ற சொற்களிலே மன்மதன் கரும்பு வில்லில் ஐந்து வகையான மலர்க்கணைகளை விடுத்து உயிர்களுக்குக் காதல் வேட்கைத் தீயை மூட்டுவன் என்பதை அருணகிரியார் சுட்டுகிறார். க்யூபிட் உரொமானியக் காதல் கடவுள் என அறியப்படுவது போல மன்மதன் இந்து மதத்தில் காதல் கடவுளாகக் கருதப் படுகிறார்.
இவர் காமதேவன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு ராகவிருந்தன், அனங்கன், கந்தர்வன், மன்மதன், மனோசிஜ், ரதிகந்தன்’, மதனன், புஷ்பவனன், புஷ்பதானுவன், வசந்தன் போன்ற பிற பெயர்களும் உண்டு. காம தேவன் வில்லம்பு ஏந்திய ஒரு அழகான இளைஞனாகச் சித்தரிக்கப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. கண்காட்சி என்ற திரைப்பட்த்தில் அன்ந்தன் அங்கதன் மைந்தன் என்ற பாடலின் தொடக்கத்தில் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் குரலில் ஒரு வசன கவிதை வரும். அக்கவிதை இதோ
வெண்ணிலவை குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி
மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி கனகமணிப் பொற்பாவை
அன்ன நடை ரதியுடனே அழகுமதன் வில்லேந்தி
தண்முல்லை, தாமரை, மா, தனி நீலம், அசோகமெனும்
வண்ண மலர்க் கணை தொடுத்தான்
வையமெல்லாம் வாழ்கவென்றே!
இந்தப் பாடலில் மன்மதனின் ஐந்து கணைகள் என்னெனவென்று பாடலாசிரியர் திரு கே.டி. சந்தானம் அவர்கள் குறிப்பிடுவார்.
மன்மதனின் இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.
காம தேவனின் வாகனம் கிளி. ரதி தேவி காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம். அடுத்து இராமர் கட்டிய இராமர் பாலம் பற்றிய ஒரு சுவையான கதையை நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: மன்மதன் அம்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.