e0af8d-e0ae85e0aeaee0af8de0aeaa.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 169
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
கடலச் சிறை வைத்து – பழநி
அம்பு விழி என்று ஏன் சொன்னான்?
இத்திருப்புகழில் பெண்களின் கண்களை மேலும் சிறப்பித்து அருணகிரியார் பின்வருமாறு பாடுகிறார்.
மடுக் கமலத்தை மலர்த்தியிட்டு என்ற சொற்களில் மடுவில் உள்ள தாமரை மலர்ந்து உதிர்ந்துவிடுந் தன்மையுடையது. அதனால் அது கண்ணுக்குத் தக்க உவமையாகாது. ஆகவே தாமரையை மலர்த்தி உதிர்த்து அழிக்கின்றன என்று உரைக்கின்றனர். இப்போதும் தாமரைக்கண்ணால், பங்கஜவல்லி, முண்டகக்கண்ணி என்ற பெயர்களை நாம் பார்க்கிற்றோம்.
விடத்தை இரப்பவன் ஊணாகக் கருதி என்ற வரியில் அருணகிரியார் கண்களுக்கு விடத்தை உவமை கூறுவார். ஆயினும், “விடம் உண்டவனை அழித்து விடும். கண்கள் வருந்த வைத்து அடுத்தவனை இன்புறச் செய்யும். ஆதலின் நஞ்சு தனக்கு உவமையாகாது எனக் கருதி, அந்த நஞ்சினை பிச்சையேற்று உண்பவராகிய சிவமூர்த்திக்கு உணவாகத் தந்து விட்டது”என்கிறார். என்ன அழகான தற்குறிப்பேற்றம் பாருங்கள்.
கயலைக் கயம் உட்படுவித்து என்ற சொற்களில் கயல் மீன் சதா உணவு நசையால் அலையும் தன்மை உடையது. தூண்டிலிலும் வீழ்ந்து மடியும் தன்மையது; ஆதலின் தனக்கு மீன் நிகராகாது எனக் கருதிக் குளத்தின் நீருக்குள் அமிழுமாறு செய்துவிட்டது என்று கூறுகிறார். உழையைக் கவனத்து அடைசி என்று கூறும்போது உழை-மான். மான் மிரண்டு பார்ப்பதனால் கண்ணுக்கு உவமை ஆயிற்று. ஆனால் மிரட்சியில் சிறந்த குளிர்ச்சி இன்மையினால் தனக்கு நிகரில்லை எனக்கருதி மானைக் காட்டிற்கு ஓட்டியதாகச் சொல்லுகின்றார்.
கணையைக் கடைவித்து என்ற சொற்களில் கூர்மையை நோக்கிக் கண்களுக்கு கணையை உவமையாக அருணகிரியார் கூறுகிறார். ஆனால் கணை மிகவும் நீண்டிருப்பதனாலும், கொல்லுவதையே தொழிலாக வுடையதாலும் தனக்கு உவமையாகாது எனக் கருதி, அக்கணையைக் கொல்லன் பட்டறையில் கடைசல் படுமாறு தண்டித்தது.
வடுத்தனை உப்பினின் மேவி மாவடு பெண்களின் கண்களுக்கு உவமையாவது. மாவடுவைப் பிளந்து விட்டுப் பார்த்தால் கண் போலவே காட்சி தரும். ஆனால் அதில் கருமை இல்லாமையால் அம் மாவடுவை உப்பினில் ஊறுகாயாக ஊறவைத்து விட்டதாம். அடலைச் செயல் சக்தியை அக்கினியில் புகுவித்து என்று கூறும் போது, வெற்றிச் செயலுடைய வேலினை அருணகிரியார் குறிப்பிடுகிறார். அடல் என்றால் வெற்றி. இது எதிர்த்தவர் யாவரையுங் கொல்லும் குணம் உடையது. கண்கள் இன்பம் தரவல்லது. ஆதலின் நெருப்பில் புக வைத்தது. வேலைக் கொல்லர்கள் நெருப்பில் காய்ச்சி ஒழுங்கு செய்வர்,
யம ப்ரபுவைத் துகைவித்து என்ற சொற்களில் யமனையும் கண்ணுக்கு உவமையாகக் கூறுவர். யமனைப் போல் கண்கள் சிலரை வருத்தும் தன்மை உடையன. ஆனால் யமன் காலம் முடிந்த போது மட்டுமே வருத்துந் தன்மை உடையவன். ஆதலின் தனக்கு நிகராகான் எனக் கருதி, சிவபெருமான் பாதமலரால் உதை பட்டு நொறுங்குமாறு செய்ததாம்.
அரி கட்கம் விதிர்த்து முறித்து என்ற வரியில் வாளை நடுங்க வைத்து முறித்தது என்று அருணகிரியார் பாடுகிறார். அரி என்றால் ஒளி; கட்கம் என்றால் வாள், விதிர்ப்பு என்றால் நடுக்கம். மதித்த சகோரம் அலறப்பணி என்று சொல்லும்போது அருணகிரியார் சகோரம் என்ற பறவை நிலாவின் அமுத கிரணங்களை உணவாகக் கொள்ளும் சிறப்புடையது என்பதைக் குறிப்பிடுகிறார். அப்பறவை வட்ட வடிவானது. கண்ணுக்கு உவமை கூறப்படுவது. அப்புள் தனக்கு நிகரில்லை எனக் கருதி அதனை அழ வைத்ததாம்.
இப்படி ஒன்றுமே தனக்கு நிகரில்லாமையுடைய கண்களின் சிறப்பை இனிது எடுத்து விளக்குகின்றார். இத்தகைய மாதரது கடைக்கண் பார்வையில் அடியேன் அகப்பட்டு அழியலாமோ? எனச் சுவாமிகள் முருகனிடம் முறையிடுகின்றார்.
இத்திருப்புகழில் இறையனார் அகப்பொருள் உரைக்கு எந்த உரை சிறந்தது என்பதை விளக்கிய முருகப் பெருமானின் அம்சமான உருத்திரசன்மனின் கதை மீண்டும் சொல்லப்படுகிறது.
திருப்புகழ் கதைகள்: அம்புவிழி என்று ஏன் சொன்னான்!? முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.