e0af8d-e0ae85e0ae99e0af8de0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 41
பொருப்புறும் (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
இந்தத் திருப்புகழில் முருகப்பெருமானை அங்க வாயா என அருணகிரியார் அழைக்கிறார். அங்கம் என்பது வேத அங்கங்கள். அவை ஆறாகும். இதனைச் சடங்கம் என்பர். இதனை தேவாரத்தில் வேதமோடு ஆறங்கமாயினை என இறைவனை குறிப்பிடும்.
நாசி, வாய், கண், காது, கைகால் என்ற ஆறு அங்கங்களைப் போல் வேதத்திற்கும் ஆறு அங்கங்கள் உண்டு. அவை சிட்சை, வியாகரணம், சோதிடம், நிருக்தம், கல்பம், சந்தஸ், என்பன. சிட்சை என்பது நாசி போன்றது. மூச்சுக் காற்று மனித வாழ்க்கைக்கு முக்கியமானது. அது நாசியின் மூலம் இயங்குகின்றது. அது போன்றது சிட்சை என்ற அங்கம்.
எழுத்துக்களின் உச்சாரணம், மாத்திரை உற்பத்தி முதலியவைகளை வரையறுப்பது. வியாகரணம் வாய் போன்றது. நடராஜப்பெருமானுடைய நடனத்தின் முடிவில் உடுக்கையிலிருந்து பதினான்கு ஒலிகளுடன் பதினான்கு எழுத்துக்கள் தோன்றின. பாணினி இவற்றைப் பதினான்கு சூத்திரங்களாக எழுதினார்.
இவை மஹேஸ்வர சூத்திரங்கள் எனப்படும். பாணினியின் வியாகரணத்திற்குப் பாஷ்யஞ் செய்தவர் பதஞ்சலி. ஆதிசேடனுடைய அம்சம் பதஞ்சலி. ஆதிசேடன் நடராஜருடைய திருவடியிலுள்ள அணிகலம். சிவபெருமானுடைய மூச்சுக் காற்று வேதம் எனவும், கைக் காற்று வியாகரணம் என்றும் கால் காற்று பாஷ்யம் என்றும் கருதப்படுகிறது.
மஹேஸ்வர சூத்ரம்
பாணினி எழுதிய புத்தகத்தின் பெயர் அஷ்டாத்யாயி (அஷ்ட அத்யாயங்கள் = எட்டு பகுதிகள்). அதில் முதலாவது மஹேஸ்வர சூத்திரம் என்று இருக்கிறது. இது தொடர்பான 2700 ஆண்டுகளாக வழங்கும் கதை என்ன வென்றால், சிவபெருமான் உடுக்கை அடித்து ஆடியபோது அந்த ஒலியில் இருந்து எழுந்த 14 சூத்திரங்களே இவை. இதை அவர் தனது புத்தகத்தில் பயன்படுத்தியதில் இருந்து இதற்கும் அவருக்கும் உள்ள தொடர்பு தெள்ளிதின் விளங்கும். அந்த பதினான்கு சூத்திரங்கள்:
(1) அ இ உண், (2) ருலுக், (3) ஏ ஓங், (4) ஐ ஔச், (5) ஹயவரட், (6) லண், (7) ஞம ஙணநம், (8) ஜபஞ், (9) கடத ஷ், (10) ஜபகடதஸ், (11) க ப ச ட த சடதவ், (12) கபய், (13) சஷஸர், (14) ஹல் –“இதி மாஹேஸ்வராணி சூத்ராணி”.
இவைதான் அவருடைய உடுக்கையில் இருந்து எழுந்த ஒலிகள். ஆண்டுதோறும் ஆவணி மாதம் உபாகர்மாவின் போது இந்த சூத்திரங்களை வேத அத்யயனத்தின்போது சொல்லிக் கொடுப்பார்கள்.
மூன்றாவது அங்கமான சோதிடம் கண் போன்றது. கண் தொலைவிலுள்ளதைக் காட்டும். ஜோதிடமும் பல ஆண்டுகளுக்கு அப்பால் வரக்கூடியவற்றைக் காட்டும். நான்காவது நிருத்தம் எனப்படுகிறது. இது காது போன்றது. ஐந்தாவது கல்பம். இது கைபோன்றது. காரியங்களைச் செய்வதனால் கரமெனப்பட்டது.
தெலுங்கிலே செய் என்று கையைக் கூறுவர். இன்னார் இதனைச் செய்ய வேண்டும்; இன்ன கர்மாவுக்கு இன்ன மந்திரம்; இன்ன திரவியம் செய்விப்பவர்களுடைய இலக்கணம்; பாத்திரங்களின் அமைப்பு இவைகளை விளக்குவது. ஆறாவது அங்கம் சந்தஸ் ஆகும். இது கால் போன்றது. இதனை யாப்பு என்றும் சொல்லுவர். இன்ன இன்ன கவிக்கு இத்தனை இத்தனை எழுத்துக்கள்; இத்தனை அடி; இத்தனை மாத்திரை என்று வரையறுப்பது. இவையில்லாமல் நிற்க முடியாது; ஆதலின் கால் எனக் கொள்ளப்பட்டது. இந்த ஆறங்கங்களிலும் வல்லவர்கள் வேதத்தின் பொருளை நன்கறிந்தவர்கள்.
வேதத்தினை யறிந்தவர் வேத முதல்வராகிய இறைவனையறிவர். வேதம், அங்கம் இவைகள் இறைவனுடைய திருவாக்கில் தங்கியுள்ளன. ஆதலினால் “அங்கவாயா” என்றனர். முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்த கதையை நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: அங்கவாயா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.