
7" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0aeb0e0ae99e0af8de0ae95e0aea9e0aebfe0ae9fe0aeaee0af8d-e0ae89e0ae9fe0aeb2e0af8be0ae9fe0af81-e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeafe0aeae-3.jpg 747w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0aeb0e0ae99e0af8de0ae95e0aea9e0aebfe0ae9fe0aeaee0af8d-e0ae89e0ae9fe0aeb2e0af8be0ae9fe0af81-e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeafe0aeae-4.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0aeb0e0ae99e0af8de0ae95e0aea9e0aebfe0ae9fe0aeaee0af8d-e0ae89e0ae9fe0aeb2e0af8be0ae9fe0af81-e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeafe0aeae-5.jpg 219w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0aeb0e0ae99e0af8de0ae95e0aea9e0aebfe0ae9fe0aeaee0af8d-e0ae89e0ae9fe0aeb2e0af8be0ae9fe0af81-e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeafe0aeae-6.jpg 696w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0aeb0e0ae99e0af8de0ae95e0aea9e0aebfe0ae9fe0aeaee0af8d-e0ae89e0ae9fe0aeb2e0af8be0ae9fe0af81-e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeafe0aeae.jpg 934w" sizes="(max-width: 696px) 100vw, 696px" title="ரங்கனிடம் உடலோடு ஐக்கியமான உன்னத பெண்! 1" data-recalc-dims="1">கான்ஹோபாத்ரா பண்டரிபுரத்திலிருந்து 14 மைல் அருகிலிருக்கும் மங்களவேடா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவள்.
நடனமாதர் வகுப்பைச் சேர்ந்தவள்.
பூமியிலிருந்து ஒரு முளை வந்தால், அது வளர்ந்து செடியாகி மலரும் தறுவாயிலேயே நறுமணம் வீசும்.
ஆனால், துளசிசெடியோ முதல் இலை விடும்போதே அதைக் கசக்கினால் வாசனை வரும்.
அதுபோல் சாதாரண மனிதர்க்கு இறைவன் மீது நம்பிக்கையும் பக்தியும் வாழ்க்கைச் சம்பவங்களாலோ, குருவினாலோ, அல்லது ஏதாவது தெய்வ அனுக்ரஹத்தாலோதான் ஏற்படும்.
ஆனால், அவதார புருஷர்கள், மற்றும் உலகில் பக்தியைப் பரப்புவதற்கென்றே அவதாரம் செய்யும் பக்தர்களை இளம் வயதிலேயே அடையாளம் காணமுடியும்.
கான்ஹோபாத்ரா இளம்வயதிலேயே விட்டலன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும் பக்தியும் கொண்டாள்.
அவளது பாடல்கள், நடனம், விளையாட்டு அனைத்துமே விட்டலனைச் சார்ந்தே இருக்கும்.
ஆனால், அவளைச் சுற்றி இருந்த உலகம் வேறு மாதிரி இருந்தது. அக்காலங்களில் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக ஒரு பகுதியில் வசிப்பார்கள்.
எனவே, கான்ஹோபாத்ராவைச் சுற்றி இருந்த சூழல் சேறுபோல் இருக்க அதில் அவள் மட்டும் இறைவனுக்கேற்ற செந்தாமரையாக மலர்ந்திருந்தாள்.
எந்நேரமும் விட்டல த்யானம். அவனையே பாடுவதும் ஆடுவதும், பூஜை செய்வதுமாய் இருக்க, அவளது தாய் மற்றும் உறவினர்கள் அவளுக்கு புத்தி சொல்லி ஓய்ந்து போனார்கள். அவளது பேரழகு பற்றி ஊரே வியந்தபோதும், அவள் எதையும் லட்சியம் செய்யவில்லை.
அந்நிய மதத்தினரின் ஆட்சிக் காலம். கான்ஹோபாத்ரா பற்றிக் கேள்விப்பட்டான் அப்பகுதியின் பாதுஷா. கான்ஹோபாத்ராவை வரச்சொல்லி பல செல்வங்களைக் கொடுத்தனுப்ப, அவள் மறுத்துவிட்டாள்.

அது அரசனுக்கு அவமானமாகிவிட, அவளைக் கைது செய்து கொண்டு வரும்படி ஆணையிட்டான். கான்ஹோபாத்ரா மிகவும் அடம் பிடிப்பதைக் கண்ட வீரர்கள், அவள் அரசனுக்குப் ப்ரியமானவள் என்பதால், அவளை என்ன செய்தால் அடம் பிடிக்காமல் வருவாய் என்று வினவ, அவளோ செல்லும் வழியில் பண்டரிபுரம் உள்ளது.
ஒரே ஒரு முறை கோவிலுக்குள் சென்று விட்டலனை தரிசனம் செய்ய அனுமதித்தால் அதன் பின் உங்களோடு வருவதில் தடையில்லை என்றாள்.
அவர்களும் ஸ்வாமி தரிசனம்தானே, செய்துவிட்டு வரட்டும் என்று அவளை அழைத்துச் சென்று கோவிலின் வாயிலில் விட்டு விட்டு வேறு வாயில் வழியாக தப்பிக்காத வண்ணம் நான்கு புறங்களிலும் காவலாக நின்றுகொண்டனர்.
உள்ளே சென்ற கான்ஹோபாத்ரா பாண்டுரங்கனை கட்டி அணைத்து, அவன் திருவடிகளில் வீழ்ந்து, தன்னை அப்போதே ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினாள்.

தீன பதித அன்யாயீ
சரண ஆல்யேம் விடாபாயீ
மீதோ ஆஹேயாதீவின
நகளே காம்ஹீம் ஆசரண
மஜ அதிகார நாஹீம்
பேடீ தேயீ விடாபாயீ
டாவ தேயீ சரணபாசீம்
துஜீம் கான்ஹோபாத்ரா தாஸீம்
நானோ கதியற்றவள், அநாதை, பல குற்றங்கள் புரிந்தவள். ஆனாலும் உன் சரணத்தைப் பிடித்து விட்டேன். உயர்குலத்தில் பிறக்கவில்லை. எவ்வித ஆசாரமோ, பூஜையோ நானறியேன்.
ஆனாலும், நீ எனக்கு காட்சியளிக்க வேண்டும். உனதடிமையான எனக்கு உன் திருவடியில் இடம் தருவாய் விட்டலா! என்று கதற, ஆன்மா, உடலுடன் விட்டலனின் திருமேனியில் ஐக்கியமானது.
இம்மாதிரி உடலுடன் அர்ச்சாவதாரத்தில் ஐக்கியமான பக்தர்கள் பலர். ஆண்டாள், மீரா, ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு, திருப்பாணாழ்வார், என்று ஒரு பட்டியலே நீள்கின்றது.
ஸந்நிதியில் கான்ஹோபாத்ராவின் புடைவை மட்டும் இருந்தது.
கோவிலில் உள்ள பண்டாக்கள் வெளியில் நிற்கும் காவலர் கான்ஹோபாத்ராவை தாங்கள் ஏதோ செய்துவிட்டதாக சந்தேகப்படுவார்கள் என்று பயந்து அவளது உடைகளைக் கோவிலுக்குள்ளேயே புதைக்க, அவ்விடத்திலிருந்து நெடுநெடுவென்று அக்கணமே வானளாவ ஒரு மரம் எழும்பியது.
இதை பண்டாக்கள் காவலாளியிடம் கூற அவர்கள் அரசனிடம் தெரிக்க அவன் இதை நம்பாமல் கோபமுற்று அவனே நேரில் பண்டரி வருகிறான்.
அப்போது மன்னருக்கு மரியாதை செலுத்த அர்ச்சகர்கள் தாம்பாளத்தில் பிரசாதத்தோடு வரவேற்க அந்த பிரசாத தட்டில் மிக நீண்ட முடி ஒன்றை காண்கிறான்.
இது என்ன என அர்ச்சகரிடம் கேட்க அவர் ஏதும் அறியாமல் விழித்து முடிவில் விட்டலன் கூந்தல் என்கிறார்.
அவன் மேலும் கோபம் கொள்கிறான், உடனே சந்நிதிக்கு சென்று பார்க்கிறான் அரசன், அங்கே ப்ரத்தியட்சமாக விட்டலனை தரிசிக்கிறான்.
அப்போது விட்டலனோ !! அரசனே! நீ கானோபத்ரா! கானோபத்ரா! என சதா பாகவதளான அவளை நினைத்த படியால், அப்புண்யத்தின் பயணாக உமக்கும் என் தரிசனம் கிடைத்தது, என நீள் முடியோடு காட்சி தருகிறான், அந்த சங்கு சக்கர பாணியான விட்டலன்.
இதை கண்ட மன்னன் ஆனந்த கண்ணீரோடு மயிர் கூச்செரிய விட்டலா எமை மனித்து விடு என அவன் அஞ்ஞானம் விலக ஞானம் அடைகிறான்.
இன்றளவும் நாம் அம்மரத்தையே கான்ஹோபாத்ரா என்று வணங்கி வருகிறோம். மரத்தின் அடியில் அவளுடைய சிறிய மூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
இன்றும் விட்டலனின் கோவில் ப்ரகாரத்தினுள் நெடிதுயர்ந்து நிற்கும் மரத்தை அனைவரும் கான்ஹோபாத்ரா என்று சொல்லி வணங்குகின்றனர்.
ரங்கனிடம் உடலோடு ஐக்கியமான உன்னத பெண்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.


