e0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 40
பொருப்புறும் (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– கு.வை.பாலசுப்பிரமணியன் –
திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகப் பெருமானை – பிரம்மா, திருமால், உருத்திரர் ஆகிய மூவருக்கும் முதல்வரே! குறமகள் கணவரே! பராசலமேவிய பரம்பொருளே! மாதர் மயக்கற்று உமது பாதமலர் மீது அன்பு வைக்க அருள் புரிவீர் – என அருணகிரியர் வேண்டும் திருப்புகழ். இனி பாடலைக் காணலாம்.
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடுஞ் சண்டிகள் …… வஞ்சமாதர்
புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண் செந்துவர் …… தந்துபோகம்
அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையில் …… அன்புமேவும்
அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம் …… அன்புறாதோ
மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
விதித்தெணுங் கும்பிடு …… கந்தவேளே
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் …… அங்கவாயா
பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
திறற்செழுஞ் சந்தகில் …… துன்றிநீடு
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங் குன்றுறை …… தம்பிரானே.
பாடலின் பொருளாவது – இறப்புடைய பிரமதேவனும், நாராயணரும், உருத்திரரும் முறையுடன் என்றும் வணங்குகின்ற கந்தக் கடவுளே! மிகுதியாக இருந்த, வலிமை மிக்க சமணர்கள் பெரிய திண்ணிய கழுக்களில் ஏறுமாறு செந்தமிழ்ப் பாடல்களை ஓதிய, வேதாங்கங்கள் மணக்கும் திருவாயரே! குளிர்ச்சி மிகுந்த சண்பகக் காட்டில் வாசனை மிகுந்த வலிமையும் செழுமையும் உடைய சந்தன மரம், அகில் மரம் முதலியவைகள் நெருங்கி நீண்டு விளங்குகின்ற தினைப்புனத்திலே பசுங்கொடிபோல் இருந்த வள்ளியம்மையாரிடம் போய் அவரது தனங்களுடன் சேர்ந்து, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமிதமுடையவரே!
பலவிதங்களில் ஆசை காட்டி மோசம் செய்கின்ற பொது மகளிரை நான் மறந்து தேவரீரது அருளைத் தருகின்ற திருவடித் தாமரைமீது அன்பு செலுத்துகின்ற காலமும் ஏற்படாதோ?
அன்புதான் இன்ப ஊற்று
திருவருள் நிலையமாக விளங்குவது இறைவனுடைய திருவடி. இறைவனின் திருவடியை தியானிப்பவர் திருவருட் செல்வத்திற்கு உரியவராவார்கள். அருட்செல்வம் பெற்றார் முத்தி வீட்டில் முதன்மை பெறுவர். அருளில்லார்க் கவ்வுலக மில்லை என்பார் திருவள்ளுவர்.
அருளை அன்பாலேயே பெறமுடியும். நாம் இறைவனிடம் அன்பு வைத்தால் இறைவன் நம்மீது அருள் வைப்பான், அன்பிலார் அருளைப் பெறுகிலார். நாளும் நாளும் இறைவன் திருவடித் தாமரைமீது அன்பை வளர்க்கவேண்டும். இறைவன் மீது தொடக்கத்தில் அன்பு வைத்தவர் பின்னர் எல்லா உயிர்களையும் இறைவனுடைய திருக்கோயில்களாகவே கருதி எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொள்வர்.
எல்லாம் இறைவனுடைய உடைமைகளாகவே தோன்றும். ஈசனிடத்து அன்புடையார்க்கே இந்தப் பண்பாடு உண்டாகும். ஈசன்பால் அன்பிலாதார் யார்க்கும் அன்பிலாதவரே யாவர். அவர்கள் வள்ளுவர் சொன்னதுபோல என்புதோல் போர்த்த உடம்பாக மட்டுமே இருப்பர்.
அன்பே சிவம்
இந்தத் திருப்புகழின் இடையில் மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர் விதித்தெணுங் கும்பிடு – கந்தவேளே என்று அருணகிரியார் பாடியுள்ளார். அதாவது, மால் அயன் முதலிய வானவர் அனைவர்க்கும் இறப்பு, பிறப்புண்டு; திரிமூர்த்திகளும் பசுக்களே. அவர்கட்கு குணம், வடிவம், பேர் முதலியவையுண்டு.
மாலும் துஞ்சுவான், மலரவன் இறப்பான்,
மற்றைவானவர் முற்றிலும் அழிவார்,
ஏலும் நல்துணை யார்நமக்கு? என்றே
எண்ணி நிற்றியோ, ஏழைநீநெஞ்சே,
கோலும் ஆயிரம் கோடி அண்டங்கள்
குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
நமச்சிவாயங்காண் நாம்பெறும் துணையே.
என்று திரு அருட்பாவில் இராமலிங்க அடிகளார் பாடியுள்ளார். தேவரத்தில் அப்பர் பெருமானோ
நூறுகோடி பிரமர்கள் நொங்கினர்
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே
ஏறுகங்கை மணல்எண்ணில் இந்திரர்
ஈறுஇல்லாதவன் ஈசன் ஒருவனே.”- என்று பாடியுள்ளார்.
சிவபெருமான் ஒருவரே பிறப்பிறப்பில்லாதவர்; மூவருந் தேவரும் பசுக்களே. சிவமூர்த்தி பசுபதி. “பிறவா யாக்கைப் பெரியோன்” என்று இளங்கோவடிகளும், “பிறப்பிலி இறப்பிலி” என்று வில்லிபுத்தூராழ்வாரும் கூறுகின்றனர். பிறப்பு இறப்பு என்னும் பெரும்பிணியை அகற்ற கருதும் அன்பர்கள் பிறப்பு இறப்பில்லாத இறைவனை வழிபட்டு உய்வு பெறுக.
இந்தத் திருப்புகழில் வேதத்தின் ஆறு அங்கங்கள் பற்றியும் முருகப் பெருமான் வள்ளித் திருமகளை மணம் செய்த வரலாற்றையும் நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: பொருப்புறும்… முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.