85. நதியே போற்றி!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“சிந்தும் மாத்ருதமாம்” – ருக்வேதம்
“நதிகள் தாயைவிட உயர்ந்தவை”
வேத கலாச்சாரத்தில் நதிகளை வழிபடுவது ஒரு சம்பிரதாயம். ஜட வாதமும், பௌதிகவாதமும் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில் இந்த வழிபாட்டின் பின்னுள்ள சூட்சுமம் புரிவதில்லை. பெற்ற அன்னையின் வாத்சல்யத்தில் உள்ள மதிப்பையே உணராத செயற்கைத் தன்மை பெருகி வரும் போது இயற்கையின் தாய்மை எப்படி புரியும்?
நீர் நமக்கு உயிர் அளிப்பது. நீரில் உள்ள தெய்வீக ஆற்றலை தரிசித்தனர் மகரிஷிகள். ப்ரக்ருதி முழுவதும் சைதன்யமயமாக உள்ளதைக் கண்டார்கள். பஞ்சபூதங்கள் பரமேஸ்வர சொரூபங்கள். அவற்றை நோக்கி நாம் செலுத்தும் எண்ணங்களுக்கு அவை பதில் வினையாற்றக் கூடியவை. அருளவும் செய்யும். சீற்றமும் கொள்ளும். அவை குறித்து புராணங்கள் மட்டுமின்றி சுய அனுபவ சான்றுகள் கூட உள்ளன.
சீதாதேவி ஸ்ரீராமனோடு வனவாசம் சென்றபோது சரயு, கங்கை, கோதாவரி போன்ற நதிகளை வணங்கி சுமங்கலிப் பெண்களுக்கு செய்வது போல மரியாதை செய்தாள். நதிகள் பரதேவதை வடிவங்கள் என்பது வேதக் கருத்து. இதுவே இந்த தேசத்தின் ஆத்ம சிந்தனை.
ஸ்ரீராமன் சமுத்திரத்திற்கு பாலம் கட்டியபோது தர்ப்ப சயனத்தின் மீது தீட்சை இருந்து கடலை பிரார்த்தனை செய்ததை அறிவோம். பாலம் கட்டுவதில் நிபுணரான நளன் அவருடைய படையிலேயே இருந்த போதிலும் இயற்கையின் அனுகூலம் இல்லாவிட்டால் எதுவும் சாத்தியமாகாது என்பதாலேயே ராமன் தீட்சையிருந்து உலகிற்கு உணர்த்தினான்.
நதிகளையும் வனங்களையும் வழிபடுவது அனாகரிகம் அல்ல. அது நாகரிகத்தைவிட வளர்ச்சி அடைந்த உயர்ந்த கலாச்சாரம்.
வெயில் தகிக்கும் போதும், நீர்த் துளி கூட கிடைக்காத போதும் எத்தனை தவித்துப் போவோம்! தாயின் கர்ப்பத்தில் உயிர் பெற்று வளரும் காலம் முதல் முதியோனாகி இறக்கும் வரை ஜீவனுக்கு ஆதாரமாக இருப்பது நீரே! அது மட்டுமல்ல. உடலை விட்டுச் சென்றபின் கூட ஜல தர்ப்பணம் போன்றவையே ஜீவனின் மேல் நோக்கிய பயணத்திற்கும் உத்தம கதிகளுக்கும் காரணமாகிறது.
அதனால்தான் பகீரத சக்கரவர்த்தி கங்கையை எடுத்து வந்து அதன் நீரால் தன் முன்னோருக்கு நற்கதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தவம் இயற்றினான். ஹிரண்யதேஜன், புரூரவன் போன்ற மகாராஜாக்கள் கூட தவத்தின் மூலம் நதித் தாய்களை மகிழ்வித்தனர்.
“ஆபோவா இதகம் சர்வம்” என்று ஜலசக்தியை அடையாளம் கண்டது வேதக் கலாச்சாரம்.
நதிகளைப் பாதுகாப்பது, நீர்நிலைகளை பராமரிப்பது, நீரைத் தேக்கி வைப்பது, உழவு போன்றவற்றைப் பற்றிய நீர் விஞ்ஞான ரகசியங்கள் பல வைதிக நூல்களில் காணப்படுகின்றன.
நதிகளை ஆதாரமாகக் கொண்டு சிறந்த நாகரிகங்கள் தோன்றின. உற்சவங்கள், புஷ்கரம் போன்ற வைபவங்களும், கோவில்களும் நதி தீரங்களில் நதித் தாய்களை நலம் விசாரித்தபடி விளங்குகின்றன.
அந்தந்த புண்ணிய கால பண்டிகைகளில் பல இடங்களில் இருந்தும் மக்கள் வந்து கூடி ஒருமைப்பாட்டோடு கூடிய கலாச்சார பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு நதி ஜலமும் நம் பௌதீக உடலை மட்டுமின்றி ஆத்மாவையும் தூய்மைப்படுத்துகிறது என்ற உணர்வோடு கூடிய ஆத்மார்த்தமான சிறப்பை அடைந்து வருகிறோம்.
ஒவ்வொரு நதியின் உள்ளத்தையும் விசாரித்தால் நம் உள்ளத்தைத் தொடும் பல புராணக்கதைகள் அதிலிருந்து வெளிப்படும்.
கங்கை கோதாவரி கிருஷ்ணா என்று நதிகளை அன்னையராகப் பெயர் சூட்டி வழிபடுகிறோம். அவற்றின் கருணையால் அன்னம் கிடைக்கப் பெறுகிறோம். தாகம் தீர்த்துக் கொள்கிறோம். நன்றி தெரிவிப்பது மனிதப் பண்பாடு.
அத்தகைய பண்பாடு நிறைந்த கலாச்சாரத்தில் பிறந்த நாம் பல புண்ணிய நதிகளை மாசுபடுத்தி வருகிறோம். பல நதிகளை பெயர்கூட இன்றி அழித்து விட்டோம். துளியும் கவனமின்றி அலட்சியமாக நதிகளை மாசுபடுத்தி கொடூரமாக நடந்து கொள்கிறோம். அதன் பலனை அனுபவிக்கிறோம். கையைச் சுட்டுக்கொண்ட பின் இலைகளை பற்றிக் கொள்ள நினைக்கிறோம்.
நதிகள் நமக்கு தாய் என்ற பார்வையை விட்டு விட்டு அதனை பாதுகாக்கும் முயற்சியை விட்டு விட்டதால் ஏற்பட்ட பலனை கண்கூடாக அனுபவிக்கிறோம்.
ருக் வேதத்தில் – ஒரு யக்ஞம் பூர்த்தி செய்துவிட்டு வந்த விசுவாமித்திரர் அவருடைய படகு செல்ல முடியாத அளவுக்கு தீவிரமாக பிரவகித்த சட்லஜ் (சதத்ரூ), விபாசனா (வ்யாச) நதிகளை பிரார்த்தனை செய்து அவற்றின் அருளால் அந்த நதிகளைக் கடந்த நிகழ்வுகள் காணப்படுகின்றன.
குழந்தை கிருஷ்ணனை தூக்கி வந்த வசுதேவருக்கு யமுனை தானாகவே வழிவிட்டது.அன்னையர்களான நதிகளுடைய தத்துவத்தை தரிசித்த சிறந்த கலாச்சாரத்தில் பிறந்த நாம் இப்போதாவதுவிழித்துக்கொண்டால் இயற்கை அன்னை பரவசமடைந்து பசுமையை நிறைத்துக் கொள்வாள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 85. நதியே போற்றி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.