பணமில்லா நேரம்.. பக்தரை சோதித்த பரமன்!

ஆன்மிக கட்டுரைகள்

vishnu
vishnu

பண்பும், பக்தியும், அன்பும் கொண்ட அருளுடையச் செல்வராக விளங்கியவர் ஸ்ரீ ஹரிபாலன்.

இவர் அளவற்ற செல்வம்யுடைத்தவராக இருந்தும், அடக்கமே உருவான உத்தமராகத் திகழ்ந்தார்.

இவர் தமது செல்வத்தை ஆண்டவன் சேவைக்கும், அடியார்கள் விருந்தோம்பல் அறத்திற்கும் அள்ளி அள்ளிச் செலவு செய்தார்.

இவ்வாறு தமது செல்வத்தைச் செலவு செய்து செலவு செய்து நாளடைவில் பரம ஏழையானார், அந்த ஏழ்மையிலும் அன்பர், அடியார்களைப் பேணி அமுதளிக்கத் தவறவில்லை.

ஒருநாள் இவரது இல்லத்திற்கு யாத்திரிகர்கள் பலர் வந்தனர். அவர்களுக்கு விருந்தளிக்க எவ்வித வசதியும் இல்லாத நிலையில் இருந்தார் அடியார். இருந்தும் அவர்களிடம் தமது வறுமையை வெளிப்படுத்தாமல் அவர்களை உபசரித்து அகத்தே இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

விருந்தினரைப் பேணுவதற்குப் போதிய செல்வம் இல்லாத அன்பர் வழிப்பறி செய்வது என்று தமக்குள் சங்கல்பம் பூண்டு, ஊரில் எல்லையில் போய் நின்றார்.

வெகு நோரமாகியும் எவரும் வரவில்லை! இவரது பெருமையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்ட ஸ்ரீமந் நாராயணன், பிராட்டியாருடன் பல்லக்கில் பக்தரின் முன்னால் பிரசன்னமானார்.

இருவரும் செல்வச் சீமானைப் போன்ற வேடத்தைத் தாங்கி இருந்தனர். ஹரி பக்தருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. பல்லக்கை நிறுத்தினார். அவர்களை மிரட்டி அவர்களிடமுள்ள பொருள்களை எல்லாம் அபகரித்துக் கொண்டார்.

வேகமாக கடைத்தெருவிற்கு வந்தார் அடியார். விருந்தினருக்குத் தேவையான ரொட்டி, பழங்கள், பால் முதலியவற்றை வாங்கிக் கொண்டார். ஓட்டமாக வீட்டிற்கு வந்தார்.

அடியார்களுக்கு ரொட்டியும், பழமும், பாலும் கொடுத்து உபசரித்தார். பக்தர்கள் பசி தீர்ந்து பெருமிதம் கொண்டனர், அவர்கள் ஸ்ரீ ஹரிபாலரை உளமாற வாழ்த்திச் சென்றனர்.

அடியவரின் திருத்தொண்டினை உௗமாற ஏற்றுக்கொண்ட அனந்தன், பிராட்டியிடம், “தேவி! என் பக்தன் கொள்ளை அடித்தாலும், நல்ல காரியத்திற்குப் பணத்தை பயன்படுத்துகிறான்” என்றார்.

ஸ்ரீ ஹரிபாலரின் செயலைப் அன்னை பிராட்டியார் வன்மையாகக் கண்டித்தார்கள். கொள்ளை அடித்த பொருளைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவனைப் பக்தன் என்று கூறுவது சற்றும் பொருந்தாது.”

அதற்கு எம்பெருமான் பிராட்டியாரிடம், இன்று இவன் வறுமையால் கொள்ளைக்காரனாகத் தெரிகிறான்.

ஒரு காலத்தில் உனது அநுக்கிரஹத்தால் கோடீஸ்வரனாக இருந்தவன் தனது செல்வம் அனைத்தையும் நமது அடியார்கள் ஆராதனைக்காகவே தானம் கொடுத்துத் தரித்திரம் கொண்டவன். இன்று இவன் அடிப்பது கொள்ளையாக இருக்கலாம்.

ஆனால் கொள்ளை அடித்த பொருள்களை சத்விஷயத்திற்காகத்தான் செலவு செய்கிறான் என்பதனை நீ அறிவாய்! இவன் நமது பரம பக்தனே!” என்று திருவாய் மலாந்தார்.

“அப்படி என்றால் நாம் அவனது இல்லத்திற்குச் செல்வோம்” என்று பிராட்டியார் மொழிந்ததும் இருவரும் ஏழைகளைப் போல் வேஷம் தரித்துக் கொண்டு ஸ்ரீ ஹரிபாலர் இல்லத்திற்குச் சென்றனர்.

ஸ்ரீ ஹரிபாலர் அவர்களை வரவேற்று உபசரித்து அறுசுவை அமுது அளித்து ஆனந்தித்தார்.

பக்தர் அவர்களை வணங்கி, “ஸ்வாமி! இந்த அடியேன் இனியும் தங்களுக்கு என்ன பணி செய்ய வேண்டும் என்று கட்டளை இடுங்கள். இன்பமுடன் செய்து முடிக்கிறேன் என்று பிரார்த்தித்தார்.

இவ்வாறு பக்தர் வினவியதும் பரந்தாமன் “பக்தரே! நாங்கள் இன்றுதான் ஏழைகளாக ஆக்கப்பட்டோம்-

முந்தைய தினம் கள்வன் ஒருவன் எங்களை வழிமறித்து எங்கள் செல்வம் அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டுபோய்விட்டான்” என்றார்.

ஆண்டவளின் மொழி கேட்டு அடியார், எரிமலை போலானார். பக்தர்களுக்குத் துரோகம் செய்யும் அந்தக் கொடியவன் யார்? இப்பொழுதே சென்று அத்திருடன் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து உங்கள் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறேன் என்றார்.

அந்த சமயத்தில் பகவான் தமது தோற்றத்தை மாற்றிக் கொண்டு, ஸ்ரீ ஹரி பாலர் கண்களுக்கு பழைய வியாபாரியைப் போன்ற தோற்றப் பொலிவுடன் காட்சி அளித்தார்.

ஸ்ரீ ஹரி பாலர் பரந்தாமனின் பேரருளைப் புரிந்து கொண்டார். வியாபாரியாக வந்து விண்ணவரும், மண்ணவரும் போற்றும் கார்முகில் வண்ணன் கண்ணனும், ருக்மணி பிராட்டியாரும் என்பதனைத் தெரிந்து கொண்டார்.

ஸ்ரீ ஹரி பாலர் சாஷ்டாங்கமாக பணிந்தார். “பரந்தாமா! அணிமணி ஆபரணங்கைௗக் காணிக்கை செலுத்தி அலங்கார பூஷிதனாகக் கண்டுகளிக்க வேண்டிய உன்னிடம் கொள்ளை அடித்த எனக்கு எத்துணைத் தண்டனை அளித்தாலும் தகும்.

அனந்தசயனா! அச்சுதா! ஆலிலை துயின்ற கோகுல பாலா! நான் அதிதிகள் ஆராதனைக்காக அதர்மவழியில் சென்றேன். எனது பிழையைப் பொறுத்திடுவாய்! ..

என்றும் உனது திருநாம சிந்தனை என்னிடம் நிலைத்திருக்கும் படியான நல்லவரம்தனையும் தந்து காத்திடுவாய்! என்று வேண்டினார்.

ஸ்ரீ ஹரி பாலரின் பிரார்த்தனனையத் திருச்செவி சாதித்த ஸ்ரீமந்நாராயணன், “பக்தா! உனது செயல் எமககுப் ப்ரிதியானதே! நீ கேட்ட வரம் தந்தோம்.

உனக்கு ஏராளமான செல்வத்தை அளிப்போம். இச்செல்வத்தினால் சிறப்புடன் வாழ்ந்து எமது சேவடிக் கமலங்களை வந்தைடவாய்” என்று திருவாய் மலர்ந்து அந்தர்த்தியாமியானார்.

எம்பெருமான் திருவருளால் ஸ்ரீ ஹரி பாலர் முன்போல் செல்வச்சீமான் ஆனார்.

அவரது இல்லத்தில் எந்நேரமும் துதியாராதனையும், திருநாம துதிபாராயணமும் நடந்தவண்ணமாகவே இருந்தன.

ஹரிநாம மகிமையால் பூவுலகில் சர்வ மங்கௗங்களையும் பெற்றுப் பெருமை பூண்டார் ஸ்ரீ ஹரி பாலர்

பணமில்லா நேரம்.. பக்தரை சோதித்த பரமன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply