e0af8d-e0aeaee0aebee0aea3e0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 22
திருப்பரங்குன்றம் தலத்து ‘அருக்கு மங்கையர்’ பாடல்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த கதை
வழிவழி அடியவர் திருக் குருந்தடி அருள்பெற அருளிய குருநாதர் –
கல்லாலின் கீழிருந்து சனகாதி நால்வர்களுக்கும் உபதேசித் தருளியவாறு, சிவபெருமான் மண்ணுலகத்தில் திருப்பெருந் துறையில் குருந்தமரத்தின் கீழ் குரு மூர்த்தியாக எழுந்தருளி மாணிக்க வாசகருக்கு உபதேசித்தருளின அருட்பெருந் திறத்தைக் குறிப்பிட்டனர்.
வாதவூரருக்கு உபதேசம்
பாண்டிவள நாட்டின்கண் வாயுபகவான் வழிபட்ட தன்மையால் வாதவூர் என்னும் பெயர் பெற்ற திருத்தலத்தில் மானமங்கலத்தார் மரபிலே ஆமாத்தியர் குலத்து சிவகணத் தலைவரொருவர் வந்து உதித்தார். அவர் பெயர் “வாதவூரர்” என்பர்.
அவர் பதினாறாண்டு நிரம்பு முன்னரே கலைகள் முழுதும் ஒருங்கே ஓதியுணர்ந்தார். அவர் புகழைஅறிந்துபாண்டியன் அவரை வரவழைத்து அவருக்குத் “தென்னவன் பிரமராயன்” எனப் பட்டப் பெயர் சூட்டி, மந்திரித் தொழிலில் இருத்தினன். அவர் கலை வன்மையாலும் சிலை வன்மையாலும் சிறந்து அமைச்சர் தலைவனாயிருந்து பாவக்கடலினின்றும் தப்பி முத்திக்கரை சேரும் உபாயத்தை நாடியிருந்தனர். பாண்டியன் குதிரைகளை வாங்கும் பொருட்டு அளப்பரும் நிதியினை அவருக்கு அளித்து குதிரைகளை வாங்க அனுப்பினன்.
பாண்டியன் பால் விடைபெற்ற வாதவூரார் திருவாலயம் சென்று மீனாட்சியம்மையையும் சொக்கலிங்கப் பெருமாளையும் வழிபட்டு பாண்டியன் செல்வம் நல்வழியில் செலவழிய வேண்டுமென்று வணங்கி, வேதியர் ஒருவர் எதிர்ப்பட்டு அளித்த திருநீற்றை அணிந்துகொண்டு, நற்குறியென்று வந்து சேனைகள் சூழப் புறப்பட்டு திருப்பெருந்துறையை அடைந்தார்.
அத்தலத்தைச் சாரும் முன்னரே, காயமும் நாவும் நெஞ்சும் ஒரு வழிபட்டு பேரன்பு மிகுதலால் கண்ணீர் மல்கிக் கசிந்துருகி சிரமிசைக் கரங்குவித்து மயிர் சிலிர்த்து அனலில் பட்ட மெழுகென உருகினார். பண்டைத் தவப்பயன் கைகூடப் பெற்ற வாதவூரர் அதிசயம் உற்று, “இத்தலத்தை அணுகுத் முன்னரே பேரன்பு முதிர்ந்தது.
சிவத் திருத்தலங்களில் இதனை ஒத்தது வேறில்லை; இங்கு வந்து சேர்தற்கு என்ன மாதவஞ் செய்தோமோ? என்று தம்முள் நினைத்து உடன் வந்தாரை நோக்கி “ஆடி மாதத்தில் குதிரை வருதல் இல்லை. ஆவணி மாதத்தில்தான் குதிரைகள் வந்திறங்கும்; நானே அவைகளைக் கொண்டு வருவேன். பாண்டியற்கு இதனை உணர்த்துமின்” என்று அன்னாரைப் போக விடுத்தார்.
பின்னர் வாதவூரர் பொய்கையில் நீராடித் திருநீறு தரித்து, சிவபெருமானை வணங்குதற்குத் தனியே ஆலயத்துள் புகுந்தார். அத்திருக்கோயிலினுள் ஒரு குருந்த மரத்தின் நிழலில் தாராகணங்களால் சூழப்பெற்ற தண்மதி என்னும்படியாக, மாணவர் குழாம் சூழ குருவடிவம் தாங்கி சிவபெருமான் வீற்றிருந்தனர்.
அத் தேசிகேசனைக் கண்ட திருவாதவூரர் செயலிழந்து உடல் நடுங்கி எட்டு அங்கங்களும் நிலமிசை தோயப் பன்முறை வணங்கி விண்மாரி என்ன கண்மாரி பொழிந்த வண்ணமாக நின்றனர். தன்வசமிழந்து நின்ற மெய்யடியாரைக் கண்ணுதற் கடவுள் கண்டு திருநோக்கஞ் செய்து அருகில் அழைத்து, முறைப்படி தீட்சை முதலியன செய்து ஐந்தெழுத்தை உபதேசித்து நல்லருள் பாலித்தனர்.
அன்னவ ரொல்கி மெல்ல அஞ்சியஞ் சலியிற் செல்லப்
பன்முறை முறுவல் கூர்ந்து பாவனை செய்து பண்பில்,
தன்னடி சூட்டி, நாமஞ் சாத்தி, ஆசாரம் பூட்டிச்
சின்மய அஞ்செழுத்தைச் செவிப்புலத்து உபதேசித்தான்.
– திருவிளையாடல் (புலியூர் நம்பி)
இதுவே வாதவூரரான மாணிக்கவாசகருக்கு இறைவன் உபதேசம் செய்த கதையாகும்.
திருப்புகழ் கதைகள்; மாணிக்க வாசகருக்கு உபதேசித்த கதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.